Wednesday, October 7, 2009

என் ராசி அப்படி - 1

உப்பு விற்கப் போனால் மழை பெய்வதும், மாவு விற்கப் போனால் காற்றடிப்பதும் பலருடைய வாழ்கையில் சகஜம். ஆனால் என்னுடைய கதை கொஞ்சம் ஸ்பெஷல். நான் பண்ணவே பண்ணாத தவறுகளுக்கெல்லாம்,பொறுப்பேற்றுக் கொண்டு "திரு திரு"க்க வேண்டி வந்து விடும்.


அப்படி மாட்டிக் கொண்டு, தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று அப்பீட்டு அய்யாசாமியாக மாறி, பெரும் சிரமப் பட்டு வெளிவந்த சம்பவங்கள் பலப்பல., குறிப்பாக, இந்தத் "தொலைபேசி" என்கிற வஸ்து, தொல்லை பேசியாக மாறி என் வாழ்க்கையில் நிறைய விளையாடி இருக்கிறது. எல்லாவற்றையும் சொல்லிவிட ஆசை. இருந்தாலும், பிரித்து பிரித்து சொன்னால், இன்னும் கொஞ்ச நாள் ஓட்டலாம் என்பதாலும்,பதிவு ரொம்ம்ம்ப நீண்ண்ண்டு விட்டால், நீங்கள் இந்த வலைப்பூ பக்கமே வராமல் போகும் அபாயம் இருப்பதாலும் (இப்போ வந்து போயிட்டு இருக்குற நாலு பேரை இழக்க மனசு வரலீங்.) , ஜஸ்ட் மூன்றே மூன்று சம்பவங்கள் - இதோ இங்கே...


சம்பவம் நம்பர் ஒன்று: என் அப்பாவிற்கு, அப்போது தேவஸ்தான விடுதியில் பதிவர் வேலை. விடுமுறை நாட்களில் நான் சாப்பாடு எடுத்துச் செல்வது வழக்கம். அந்த அலுவலகத்தில் அப்பா மேசையில் ஒரு தொலைபேசி இருக்கும். சுழட்டி டயல் செய்யும் விதத்தில் அமைந்த அந்தக் கால மாடல் அது. அதற்கு முன் போனைப் பார்த்திருந்தாலும் உபயோகிக்க வாய்ப்பு கிடைக்காததால், அந்த போன் மீது ஒரு ஈர்ப்பு எனக்கு. அலுவலகத்தில் என் அப்பா தான் இன்சார்ஜ் என்பதால், என்னைக் கேள்வி கேட்க யாரும் இல்லை. என் அப்பா சொல்வதைத் தான் நான் கேட்பதே இல்லையே. பிறகென்ன, சந்தோஷமாக இஷ்டத்திற்கு டயல் செய்வேன், தெரிந்த, தெரியாத நம்பர்கள் அனைத்திற்கும். எல்லா இடத்திற்கும் பேசிப் பேசி சீக்கிரமே போரடித்து விட்டது. பிறகு, டைரக்டரியில் பெயர், போன் நம்பர் பார்த்து டயல் செய்து பேச ஆரம்பித்தேன், ஏதேதோ பேசி விட்டு பிறகு ராங் நம்பர் என்று சொல்லி வைத்து விடுவேன். என் அப்பா எவ்வளவோ சொல்லி சொல்லிப் பார்த்து விட்டு, பிறகு ஒழிஞ்சு போ என்று விட்டு விட்டார். ஒரு நாள் சுழட்டி சுழட்டி டைம் பாஸ் செய்து கொண்டிருந்தேன் (போன் டயலரைத் தான்). அப்பா பத்து நிமிடத்தில் வந்து விடுவதாக சொல்லி விட்டு எங்கோ சென்றிருந்தார். டயல் செய்து களைத்துப் போய், நான் வைத்தவுடன், போன் ரிங்கியது. வேறு யாரும் அருகில் இல்லாததால் நானே எடுத்தேன்


"ஹலோ, வணக்கம் தண்டபாணி நிலையம்" - இது நான்


"ஏய், யார்ரா அது, இப்பல்லாம் சுள்ளானுங்களுகெல்லாம் தேவஸ்தானத்துல வேலை போட்டுக் குடுக்குறாங்களா ? " - இது எதிர் முனை
"நான் ஞானசேகரன் பையன் பேசுறேன் சார். நீங்க யாரு?"
"டேய், சுந்தரா பேசுற? நான் ரமேஷ் அப்பா பேசுறேன்டா..உன்னைப் பத்தி பேசத்தாண்டா போன் பண்ணேன், ராஸ்கல் - என்னோட போஸ்ட் ஆபீஸ்ல பாம் இருக்குன்னு போன் பண்ணியா மிரட்டுற? போலீஸ்ல சொல்லிட்டேன், உன் மேல தான் சந்தேகேமா இருக்குன்னு, இன்னும் பத்து நிமிஷத்துல வந்துருவாங்க, அங்கேயே இரு.."
"அங்கிள், உங்களுக்கு போன் பண்ணி ரொம்ப நாள் ஆச்சு, சத்தியமா நான் பண்ணவே இல்ல அங்கிள்"
"பொய் சொல்லாதடா, எல்லாம் எனக்கு தெரியும், ஓசி போன் கிடைச்சா யாருக்காவது போன் பண்ணி, மிரட்டுறது, இல்ல சும்மா ஒரு பேரைச் சொல்லி அவரு இருக்காரா, இவரு இருக்காரானு கேட்டு தொந்தரவு பண்றது. நீ பாம் இருக்குன்னு சொல்லி மிரட்டுனது - ஒரு பெரிய தப்பு, போலீஸ் அரெஸ்ட் பண்ணுவாங்க, இனிமே நீ ஜெயில்ல தான் எப்பயுமே இருக்கணும். அங்கே தான் படிக்கணும்.
தீவிரவாதின்னு கேஸ் போட்டா, நீ படிக்க முடியுமா முடியாதான்னு வேற தெரியல.
நினைச்சப்ப எல்லாம் போன் பண்ணிருக்க, பத்து தடவ பாம் த்ரெட் குடுத்துருக்க, இது போஸ்ட் ஆபீஸ், சென்ட்ரல் கவர்மென்ட். உன்னோட வாழ்க்கையே போச்சு. எனக்கு ஒரே ஒரு கவலை தான். உன்னால ஒரு நல்ல மனுஷன் - உங்க அப்பாவையும் அரெஸ்ட் பண்ணுவாங்க, உன்னை போன் பண்ண விட்டதுக்கு. எங்க உங்க அப்பா? அவர் கிட்ட போனைக் குடு"
"அங்கிள், அங்கிள் நான் பண்ணல, பிராமிசா நான் போன் பண்ணல, நீங்க வேணா ரமேஷைக் கேட்டுப் பாருங்க."
"அப்பா எங்கடா"
"அப்பா வெளில போயிருக்காங்க.."
"ஒ, உன்னை ஊரு பூரா போன் பண்ண சொல்லிட்டு, வேலை நேரத்துல சீட்டுல இருக்காம அவரும் வெளில போயிட்டாரா, இதுக்கு எத்தனை வருஷம் ஜெயில்னு கேக்கணும்"


இதற்கு பேச முடியாமல் நான் போனை வைத்துவிட்டேன். தாங்க முடியாமல் ஒரு பயப்பந்து வயிற்றில் இருந்து எழுந்து தொண்டைக் குழியில் வந்து முட்டி நின்று கொண்டது. சத்தம் போடாமல் அழ ஆரம்பித்தேன். அப்பா வந்தவுடன் கதறிக் கதறி அழுதுகொண்டே மேட்டரை சொன்னேன். சீரியசாய் யோசித்தவர், "சரி நான் பேசிப் பாக்குறேன், நீ வீட்டுக்கு போ" என்றார்.
 

"அப்பா, போலீஸ் வருவாங்கன்னு...... அங்கிள்......"


"வந்தா என்னை அரெஸ்ட் பண்ணட்டும், நான் தான் போன் பண்ணி மிரட்டினேன்னு சொல்லிர்றேன், வேற என்ன பண்ணுறது"
"(விசும்பலுடன்)... அப்பா... நீங்க ஏன் போகணும்.... நான் சத்தியமா போன் பண்ணவே இல்லை..."
"எப்படி நம்புறது.. நான் நம்புனாலும், இங்க இருக்குற எல்லாரும் சாட்சி சொல்லுவாங்க, நீ தான் இங்க வந்தாலே போனும் கையுமா இருப்பியே...சரி சரி.. போ வீட்டுக்கு"
வீட்டுக்கு வந்து விட்டாலும், மனம் எல்லாம் அங்கேயே இருந்தது, இரவு அப்பா வரும் வரை நரக வேதனை. அம்மாவிடமும் சொல்லவில்லை. அப்பா வந்தவுடன், பாய்ந்து அருகில் சென்று கிசுகிசுப்பாய்க் கேட்டேன் - "என்னப்பா ஆச்சு"
வசீகரப் புன்னகையுடன் அப்பா சொன்னார் - "ஒண்ணும் ஆகல, நான் சொல்லித்தான் ரமேஷ் அப்பா போன் பண்ணி உன்கிட்ட அப்படி எல்லாம் பேசினார் - இனிமே போன் பண்ணுவியா?"
விடுபட்டுவிட்ட பெருமகிழ்ச்சியில் நான் - "படிச்சு வேலைக்கு போன பின்னாடி, ஆபீஸ் போனுக்கு, எனக்கு கால் வந்தாலும், சத்தியமா பேச மாட்டேன்பா..."
சொன்ன சொல்லைக் காப்பாற்றி இருந்தால், அதற்கடுத்த இரண்டு சம்பவங்கள் நடந்தே
இருக்காது.



---தொடரும்...

5 comments:

avinash.c said...

U 2 !! , I HOPE EVERY 1 IS LIKE THAT :)

Cliffnabird said...

நான் என்பதையெல்லாம் "நான்" ஆகப் படித்தேன், தேவஸ்தானத்தை "மளிகை கடை" யாக மாற்றினேன், என் FLASH BACK எழுதி முடித்தாயிற்று!

பயம், கோபம், பாசம் என எல்லாவற்றையும் பேசின கீழ்வரும் வரிகள்...

// எங்க உங்க அப்பா? அவர் கிட்ட போனைக் குடு"
"அங்கிள், அங்கிள் நான் பண்ணல, பிராமிசா நான் போன் பண்ணல, நீங்க வேணா ரமேஷைக் கேட்டுப் பாருங்க."
//


//நான் - "படிச்சு வேலைக்கு போன பின்னாடி, ஆபீஸ் போனுக்கு, எனக்கு கால் வந்தாலும், சத்தியமா பேச மாட்டேன்பா..."//

//"வந்தா என்னை அரெஸ்ட் பண்ணட்டும், நான் தான் போன் பண்ணி மிரட்டினேன்னு சொல்லிர்றேன், வேற என்ன பண்ணுறது"
"(விசும்பலுடன்)... அப்பா... நீங்க ஏன் போகணும்.... நான் சத்தியமா போன் பண்ணவே இல்லை..."//

Raju K ராசு கந்தசாமி said...

இப்படியெல்லாம் பண்ணுனா எங்க ஊர்ல ஒரு பேரு சொல்லுவாங்க... மீதி அனுபவத்தையும் எழுதுங்க, அந்த பேரு என்னன்னு சொல்லுறேன்.

Rajesh AR said...

Wow... super thambiyovv

வணங்காமுடி...! said...

@ Avinash

@ Cliffnabird

@ Raju K

@ Rajesh

Thank you all.... Its so encouraging...