Thursday, June 18, 2009

நான் வாங்கிய புத்தகங்கள்



புத்தகங்களுடனான எனது பரிச்சயம் காமிக்ஸ்களுடன் துவங்கியது. லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ், அம்புலிமாமா எல்லாம் என் அப்பா எனக்கு அறிமுகம் செய்தவை. அதில் வந்த முகமூடி வீரர் மாயாவி, இரும்புக்கை மாயாவி, ஆர்ச்சி, மாடஸ்தி, ஜேம்ஸ் பாண்ட் எல்லாரும், தூங்கும் நேரம் தவிர என்னுடன் கூடவே எந்நேரமும் இருநதார்கள். தூக்கத்தில் கூட கனவாய் வந்தார்கள். மாயாஜாலங்களும், மந்திர தந்திரங்களும், வீர தீர சாகஸங்களும் என் பால்யத்தை நிரப்பியதால் மற்ற சிறுவர்கள் போல கோலி (எங்கள் ஊரில் பளிங்கி என்பார்கள்), பம்பரம் எதுவும் என்னைக் கவர்ந்ததே இல்லை. பிறகு மெதுவாக என் கவனம் குமுதம், ஆனந்த விகடன், கல்கண்டு, மாலைமதி, குங்குமம், என்று திரும்பியது. அதன் பிறகு பாக்கெட் நாவல்கள். என் செலவுக்கென வீட்டில் கொடுக்கும் காசெல்லாம் சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ் குமார் என்றே செலவானது. (வீட்டுக்கு தெரியக் கூடாதென்று படித்து முடித்தவுடன் தூக்கி எறிந்து விடுவேன் - இப்போது நினைத்தால் என் மீது எனக்கே ஆத்திரம் வருகிறது, ஆனால் அப்போது வேறு வழி இல்லை)

ஒரு விடுமுறையில், எங்கள் சித்தி வீட்டுக்கு சென்றிருந்த போது, சித்தப்பாவின் புத்தக அலமாரியைக் குடைந்ததில் சுஜாதாவையும் (கி பி 2000-த்துக்கு அப்பால்) பாலகுமாரனையும் (நாவல் பெயர் நினைவில்லை) கண்டெடுத்தேன். என் வாசிப்பு வயசுக்கு வந்தது அன்று முதல் தான். ஆப்பிரிக்கா வந்தபிறகு, புத்தகங்கள் எனக்கு எட்டாக் கனி ஆகி விட்டன. ஒவ்வொரு முறையும் ஊருக்கு சென்று வரும்போதும், வாங்கி வர நெஞ்சு நிறைய ஆசை இருந்தாலும், மற்ற தேவைகள் அதைச் சுருக்கி விடும். கிட்டத்தட்ட எழு வருடங்கள் கழித்து, புத்தகம் வாங்கும் என் கனவு நினைவாகி இருக்கிறது - இங்கிருந்து ஊருக்கு சென்று வந்த என் தம்பியால். நாற்பது புத்தகங்களின் பட்டியல் கொடுத்தும், இருபத்தி ஆறு மட்டுமே கிடைத்தன. (உனக்கு வாங்கிட்டு வந்து குடுக்கறதே பெரிய விஷயம், இதுல கம்மியா இருக்குன்னு குறை வேறயா?)

சுஜாதா சிறுகதைத் தொகுப்பு - பாகம் ஒன்று & இரண்டு

கனவுத் தொழிற்சாலை - சுஜாதா

21-ம் விளிம்பு - சுஜாதா

கரையெல்லாம் செண்பகப் பூ - சுஜாதா

ராஸலீலா - சாரு நிவேதிதா

வார்ஸாவில் ஒரு கடவுள் - தமிழவன்

வனவாசம், மனவாசம் - கண்ணதாசன்

உப பாண்டவம் - எஸ்.ராமகிருஷ்ணன்

தந்தையும் தனயர்களும் - துர்கனேவ்

இரவாகி விடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய் விடுவதில்லை - ஆதவன் தீட்சண்யா

என் பெயர் ராமசேஷன் - ஆதவன்

எக்சிஸ்டென்ஷியலிசமும் பேன்சி பனியனும் - சாரு நிவேதிதா

ம் - ஷோபா ஷக்தி

ஏழாம் உலகம் - ஜெயமோகன்

யாமம் - எஸ்.ராமகிருஷ்ணன்

ஒரு புளிய மரத்தின் கதை - சுந்தர ராமசாமி

தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன்

உறுபசி - எஸ்.ராமகிருஷ்ணன்

ஜே ஜே சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி

இறந்த காலம் பெற்ற உயிர் - சுந்தர ராமசாமி
ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள் - பேராசிரியர் டி.வி.ஈச்சரவாரியர் (தமிழில் குளச்சல் மு.யூசுப்)

பெண் ஏன் அடிமையானாள் - பெரியார்

அன்னை வயல் - சிங்கிஸ் ஐத்மதேவ்

நீங்களும் முதல்வராகலாம் - ரா.கி.ரங்கராஜன்

Tuesday, June 16, 2009

உமுஸாஸி அல்லது நிறவெறியின் பசி

ருவாண்டா: - நான்கு காட்சிகள்

காட்சி ஒன்று : ஏப்ரல், 1994

அந்த அடி அவன் தலையில் நச் என்று இறங்கியது. தோட்டத்தில் புற்களை வெட்டப் பயன்படும், நீண்ட கத்தி போன்ற அந்த ஆயுதத்தின் முனை அவன் மண்டையில் சரக்கென்று பதிந்து கொண்டு, அடுத்த வெட்டுக்காக இழுக்கப் படும்போது வர மறுத்தது. வலிந்து இழுத்த போது, கூடவே ரத்தமும் பீய்ச்சி அடித்தது. வெட்டுப் பட்ட இடத்தை ஒரு கையால் அழுத்தி மூடிக் கொண்டு, காயம் பட்ட காலை விந்தி விந்தி உயிர் பிழைக்கும் ஆசையில் அவன் உயிரைக் கொடுத்து ஓடினான்.

காட்சி இரண்டு: மே, 1994

இனப்படுகொலை, அதைத் தொடர்ந்த பதில் தாக்குதல்களால் மிக மோசமாகக் காயம் அடைந்தவர்களுக்கு உதவவும், காணாமல் போன உறவுகளைக் கண்டுபிடித்து சேர்த்து வைக்கவும் ஆரம்பிக்கப் பட்டிருந்த முகாம்களில் ஒன்று. தலையில் ஆழமான வெட்டு, கை கால்களில் காயங்கள், வயிற்றில் கத்திக் கீறல்களுடன் அந்த பதினைந்து வயது சிறுவன் படுத்திருந்தான். தன் குடும்பத்தில் இருந்த அனைவரையும் போரில் இழந்து தனியனாய் எஞ்சி இருந்த அவனைச் சுற்றி இருந்த டாக்டர்கள், அவனுக்குப் புரியாத ஆங்கிலத்தில் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர்.


காட்சி மூன்று: ஏதோ ஒரு மாதம், 2004 -

உலக மக்கள் தொகையில் இரண்டாவது இடம் வகிக்கும் பெருமை மிகுந்த அந்த நாட்டின் சில பிரஜைகள் "பொழப்பு" தேடி மேலாளர்களாய் வேலைக்கு சேர்ந்த நிறுவனம்.

தலையில் பெரிய வெட்டுத் தழும்புடன் இருந்த அந்த ஆப்பிரிக்க இளைஞனுக்கு இருபத்தி ஐந்து வயதிருக்கும். ஓட்டுனர் உடையில் இருந்த அவன் தனது நிறுவனத்தின் மேலாளர் முன் தலை குனிந்து நின்றிருந்தான். அவன் கையில் இருந்த காகிதம், வேலையில் இருந்து அவன் நீக்கப்பட்டதை தெரிவித்தது. செய்த குற்றம் - மூன்று நாட்களாய்த் தொடர்ந்து வேலைக்கு தாமதமாய் வந்தது, மேலாளருக்கு உற்சாக பானம் வாங்கி வர அளித்த பணத்தை தொலைத்து விட்டு வெறுங்கையுடன் வந்து நின்றது, மன்னிப்பு கேட்கச் சொன்ன மேலாளரை நீண்ட நேரம் மௌனமாக வெறித்துப் பார்த்தது இன்ன பிற.....

வேலை இனிமேல் இல்லை என்று உறுதியாய்த் தெரிந்ததும் அவன் அங்கிருந்து அகன்றான். அவன் போனதும், உதவி மேலாளர், மேலாளரிடம் சொன்னார் "இந்தக் கருப்பு நாயிங்களே இப்படித் தான் சார், வேலையோட சீரியஸ்னஸ் தெரியாது, பொறுப்பு கிடையாது, மண்டைல மூளைன்னு ஒரு விஷயம் இவனுங்களுக்கெல்லாம் இல்லைன்னு தான் நினைக்கிறேன், நீங்க எவ்வளவு பாசமா நடத்துனீங்க, உறவைப் பத்திலாம் இந்தப் பண்ணாடைங்களுக்கு எங்க சார் தெரியப் போகுது, பைத்தியக்காரனுங்க....வேலை போச்சுன்னு ஒரு வருத்தம் தெரிஞ்சுதா பாருங்க மூஞ்சில, சாவட்டும் சார் இந்த கருப்பனுங்க"

காட்சி நான்கு: வேலை இழந்து ஒரு வாரம் கழித்து வந்த ஞாயிறு, கல்லறைகளின் அருகே அவன்......

ஒவ்வொரு ஞாயிறும் அவன் வாங்கி வரும் மலர்ச்செண்டு அந்த வாரம் கையில் இல்லை. வேலை இல்லாததால் காசும் இல்லை. பசித்த வயிறு, குளிக்காத உடல், வெறுமை ஏறிய கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர்.....

அவனுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை - பத்து வருடம் முன்பு அவன் தலையில் வாங்கிய அந்த அடி, மூளையின் டெம்போரல் லோப் - ஐ பாதித்ததும் அதன் காரணமாக அவன் இழந்த சில முக்கிய தகுதிகளும்.......


டிஸ்கி:

உமுஸாஸி - ருவாண்டாவின் மொழியில் இந்த வார்த்தைக்கு அர்த்தம் "பைத்தியக்காரன்"

Sunday, June 14, 2009

வ(எ)ண்ணச்சிதறல்கள்


"பசங்க" ளைப் பார்த்தேன். அட்டகாசம் என்று ஒரு வார்த்தையில் சொல்லி விட்டுப் போய் விட முடியாது. (அய்யய்யோ, இன்னொரு பதிவா- னு கேக்காதீங்க ப்ளீஸ்....என்னா கொல வெறி?). படத்தின் இயக்குனர் பாண்டிராஜ், ஆரம்பத்தில் ஏ.வி.எம் ஸ்டுடியோவில் வாட்ச்மேன் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் என்று அறிந்ததும் நெகிழ்ந்தேன். திரைத்துறை என்று மட்டும் இல்லாமல், எல்லா துறைகளிலும் இது போன்ற திறமைசாலிகள் அடிமட்டத்தில் இருந்து முன்னுக்கு வருவது ஆரோக்கியமான விஷயம். மன உணர்வுகளுடன் விளையாடும் ஒரு நல்ல படத்தை, முடிந்த வரை குறைகளின்றி கொடுத்ததற்கு இயக்குனர் பாண்டிராஜ் - க்கு நன்றி சொல்லலாம்.

*************************************************************************************************

கிரிக்கெட் உலக பிரபலம் பிரையன் லாரா (வெஸ்ட் இண்டீஸ் லாராவே தான்) சென்ற வாரம் ருவாண்டா வந்திருந்தார். செக்யுரிட்டி கெடுபிடிகளால் நேரில் பார்க்க முடியாவிட்டாலும், தெரிந்தவர்கள், லாராவுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் பேப்பரிலும் அவர்களின் கேமராவிலும் பார்த்து குஷியானேன். லாரா வந்து இறங்கியவுடன் அவரை இங்குள்ள "Genocide Memorial" -க்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். சென்று வந்ததும் அவர் சொன்ன விஷயம் ஹைலைட் - இங்கே ஏப்ரல் 1994 - ல், இனப் படுகொலை நடந்து கொண்டிருந்த போது, அவர் "பர்ஸ்ட் க்ளாஸ் கிரிக்கெட்டில்" அதிக பட்ச ஹை ஸ்கோரான 501 ரன்களைக் குவித்துக் கொண்டிருந்தாராம். "உலகம் கேளிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது இங்கே பேரழிவு நடந்து கொண்டிருந்திருக்கிறது" என்று வருத்தப் பட்டிருக்கிறார். இலங்கையில் நடக்கும் கொடுமைக்கும், இங்கு நடந்த படுகொலைகளுக்கும் நிறைய ஒற்றுமைகள். தனிப் பதிவாகப் போட உத்தேசம்.

************************************************************************************************************

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அதன் எளிமையான பயன்பாட்டுக்கு பெயர் பெற்றது அனைவருக்கும் தெரியும். பலருக்கும் தெரியாத ஒரு சின்ன விஷயம். CON என்ற பெயரில் உங்களால் ஒரு போல்டரை கிரியேட் செய்யவே முடியாது. ஒரு New Folder கிரியேட் செய்து CON என்று Rename செய்யவும் முடியாது. முயன்று பாருங்கள். மைக்ரோ சாப்ட் எவ்வளவு முயன்றும் காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லையாம்.

**********************************************************************************************************

எல்.கே.ஜி படிக்கும் என் பையன் (நாலரை வயது) என்னைக் கேட்டான். "இந்த ஊருல எல்லாரும் ஏன் கருப்பா, அசிங்கமாவே இருக்காங்க?" பூமத்திய ரேகை, நில அமைப்பு, இன வித்தியாசம் என்றெல்லாம் சொல்லி அவனுக்குப் புரிய வைக்க முடியாதென்பதால் இப்போதைக்கு "கருப்பா இருந்தாலும் அவுங்க எல்லாம் good boys, good girls தாண்டா" என்று சொல்லி வைத்திருக்கிறேன். கருப்பு என்பது அசிங்கம் என்ற விஷ விதை இத்தனை சின்ன வயதில் எப்படி, யாரால் ஊன்றப்பட்டதென்று தெரியவில்லை. வளர வளர, இந்த எண்ணம் மாறும் என நம்புகிறேன்.
********************************************************************************************************

விழுங்கி விட்ட
புகையை
சில கணங்கள்
நிறுத்திவைத்து
சுமந்து நின்றேன்...
என்னைக் கடந்து கொண்டிருந்தாள்
வயிற்றுள்
குழந்தையோடு

***************************************************************************************

Saturday, June 13, 2009

ஆற்றல் அழிவின்மை விதியும், கோர முடிவின் இறுதிக் கணங்களும்



எல்லாத் துவக்கங்களுக்கும் முடிவு என்று ஒன்று கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டும். பிறக்கும் அத்தனை உயிர்களும் இறந்தே ஆக வேண்டும். இது பிரபஞ்ச விதி. மனித வாழ்வின் முடிவுகள் எப்படி எப்படியோ, வித விதமான புது வழிகளில் வந்தாலும் சில முடிவுகளின் முகம் மிகக் கொடூரமாக அமைந்து விடுகிறது. இனப்போர்களில் கொல்லப் படும் மனிதர்களின் முடிவு, மனிதர்களாலேயே கட்டமைக்கப் படுகிறது. சுனாமி, புயல், வெள்ளம், வெய்யில், பூகம்பம் - இவையெல்லாம் இயற்கை கட்டமைக்கும் முடிவுகளின் முகங்கள். வாகன விபத்து - பல நேரங்களில் மனித அலட்சியத்தாலும், சில நேரங்களில் எதிர் பாராத எந்திரக் கோளாறுகளாலும் நேர்ந்தாலும், மனிதனின் தொழில்நுட்ப வளர்ச்சிதான் இதன் மூல காரணம் என்பது கண்கூடு.

மேலே நீங்கள் காணும் இரண்டு படங்கள், ஒரு விமானம் வெடித்துச் சிதறுவதற்கு சில வினாடிகள் முன்பு எடுக்கப் பட்டவை. மிக அரிதானவையாக கருதப் படும் இவை அந்த விமானத்தில் பயணம் செய்த Paulo G. Muller என்ற ஒரு நடிகரால் எடுக்கப் பட்டவை. கேமரா முழுமையாகச் சேதம் அடைந்து விட்டாலும், அதில் இருந்த மெமரி கார்ட் சேதம் அடையாமல் இருந்ததால் இந்தப் படங்கள் கிடைத்தன. 35,000 அடி உயரத்தில் தென் அமேரிக்காவில் பறந்து கொண்டிருந்த அந்த விமானம் எதன் மீது மோதியது என்று யாருக்கும் தெரியவில்லையாம். என்ஜின்கள் இரண்டும் உடனே கழன்று வீசியெறியப் பட்டு விட்டன. அதனால் விமானம் கீழே விழுந்த போது வேகம் குறைந்தாலும், உள்ளே மீதம் இருந்த ஆட்கள் இறப்பது தடுக்க முடியாத ஒன்றாகி விட்டது.

இந்தப் படங்களை பாருங்கள். உள்ளே இருந்த பயணிகளின் இறுதிக் கணங்கள் எப்படி இருந்திருக்கும்? அவர்கள் பார்க்கச் சென்ற தன் குடும்பத்தை அப்போது நினைத்திருப்பார்களா? அல்லது பதட்டத்தில் ஒன்றுமே தோன்றாத வெறுமை நிலை அவர்களை ஆட்கொண்டிருக்குமோ? இப்படிப் பட்ட ஒரு முடிவு, இவர்களுக்கு முன்பே விதிக்கப் பட்டிருந்ததா? (இது போன்ற விபத்துக்களில் மரணம் அடையும் அனைவருக்கும் சேர்த்தே கேட்கிறேன்). திறமையான ஒரு விமானி இருந்திருந்தால் இது தடுக்கப் பட்டிருக்கக் கூடுமோ? டெக்னாலஜிக்கு மனிதம் கொடுக்கும் விலையாகவே இவை போன்ற விபத்துக்கள் எனக்குப் படுகின்றன.

மெயிலில் வந்த இந்தப் புகைப் படங்களில் காணும் ஆட்கள் இப்போது உயிருடன் இல்லை. அல்லது, ஆற்றல் அழிவின்மை விதிப் படி, வேறு ஒரு வடிவத்தில் இன்னும் இருக்கக் கூடும். எது எப்படி இருந்தாலும், இயற்கையான முடிவு தான் எல்லாரும் விரும்புவதாக, ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது...

Monday, June 8, 2009

அலுவலகத்தின் ஒரு பகல்



வெயிலின் கடுமை
ஏறிக் கொண்டிருக்கிறது வெளியே...


தொலைந்து போன பனியன் கிடைத்து விட்டதென
தொலை பேசிச் சொல்கிறாள் மனைவி...


மதிய உணவு இடைவேளை வர
இன்னும் எத்தனை நேரம் பாக்கி...!
கணக்கிட்டுப் பார்க்கிறது பசித்த வயிறு....


டெஸ்க்டாப் பேக்கிரவுண்டில்
த்ரிஷா, அசினுக்குப் பின் குடியேறும் தமன்னா...


"ஈகை இம்சை" எனத் தலைப்பிட்டு
அடுத்த பதிவுக்காய் தட்டச்சிடும் விரல்கள்....!

வழக்கம் போல் வாட்ச்மேனால் துரத்தப்படும்
வாசல் பிச்சைக்காரியின் குரலை
சாப்பிட்டு விடுகிறது ஏஸியின் உறுமல்.....!



வணங்காமுடி - பெயர்க் காரணம்


எத்தனையோ கவித்துவமான பெயர்கள் இருக்கும்போது ஏன் இப்படி ஒரு பெயர்? அது என்ன முடிமட்டும் என்று வலைப்பூ முகவரி? என்று செல் பேசியில் அழைத்தும், மெயில் அனுப்பிக் குவித்தும், நேரிலும் என்னைக் கேட்ட கோடிக்கணக்கான (!?) மக்களுக்கு பதில் சொல்லவே இந்தப் பதிவு. (கோடிக்கணக்குல இல்ல, ஆனா லட்சக்கணக்கான அதாவது ஒரு ஆயிரக் கணக்கான, பத்து இருவது - சரிங்க உண்மையச் சொல்லிர்றேன், ஒரே ஒரு ஆள் தான் கேட்டார்)


நான் இங்கே ருவாண்டாவுக்கு வந்த புதிதில், ஒரு சனிக் கிமை இரவு விசிஆரில் "அலாவுதீன்" என்ற அற்புதக் காவியத்தைக் கண்டு களித்துக் கொண்டிருந்தோம். புதிதாக வந்திருந்தாலும், இங்கு இருந்த எல்லோரையும் சகட்டு மேனிக்கு கலாய்த்து அவர்களின் வயிற்றெரிச்சலை நான் கொட்டிக் கொண்டிருந்த நேரம் அது... நம்ம சகாக்கள் எல்லாம் கலந்து பேசி என்னை கவுக்க சமயம் பாத்துகிட்டே இருந்திருப்பாங்க போல. இந்தக் கொலவெறி தெரியாம சிங்கம் படத்துல மூழ்கி இருந்துச்சு. (யாரு அந்த அசிங்கம்னு கேக்கக் கூடாது, தெரியும்ல! ).


அப்பப் பாத்து படத்துல ஒரு அற்புதமான சீன். சனங்க எல்லாம் ரெண்டாவது ஆட்டம் சினிமா பாத்துட்டு வந்துக்கிட்டு இருக்கும், வழியில ஒரு குழ்ந்தை அழுவுற குரல் கேட்டுப் பாத்தா, அட நம்ம பிரபுதேவா, குழந்தையா கையை காலை ஆட்டி குப்பைத் தொட்டிக்குள்ள டான்ஸ் ஆடிக்கிட்டு இருப்பாரு. குழந்தய தூக்கி ஒரு பெருசு டயலாக் பேசிட்டு, சரி இந்தக் குழந்தைக்கு என்ன பேரு வக்கலாம்னு கேக்கும் போது, பசி சத்யா படக்குன்னு சொல்லுவாங்க "வணங்காமுடி" னு. இப்படி ஒரு டப்பா படத்தை வாங்கிட்டு வந்து உசுர வாங்குரானேனு வெந்து வெக்ஸ் ஆயி நொந்து நூடுல்ஸ் ஆகி இருந்த நம்ம மக்கள் எல்லாம் இந்த பேரை கேட்டவுடன, அப்படியே ஆகாசத்துல பறந்தாங்க. உடனே நமக்கு பேர் சூட்டு விழா இனிமையா நடந்து முடிஞ்சு போச்சு.


அவங்களை சொல்லி குத்தம் இல்லை. நமக்கு முடி அப்படி. கம்பி மாதிரி செம ஸ்ட்ராங். கரண்டு கம்பிக்கு பதிலா என் முடிய யூஸ் பண்ணா கவர்மெண்டுக்கு செலவும் மிச்சம், கடத்தலும் ஜாஸ்தி நடக்கும் (கரண்டை சொன்னேன்). காலைல சீவிட்டு ஆபிஸ் கிளம்புனா, ராத்திரி வந்து படுக்குற வரைக்கும், வால்டர் வெற்றிவேல் சத்தியராஜ் மாதிரியே வெறைப்பா (இங்கயும் முடியப்பத்திதாம்பா சொல்றேன்) நிக்கும். வணங்காமுடி-னு பேரு வச்சிட்டு கொஞ்ச நாள் கூப்பிட்டு கூப்பிட்டு குஷியாகிட்டு நம்ம மக்கள் மறந்துட்டாய்ங்க. ஆனா பாசக் கார பயபுள்ள நான் மறக்கல. அதான் நம்ம வலைப்பூவுக்கு இந்தப் பேரு (இப்ப சந்தோசமா ஐயா)


அதென்ன முடிமட்டும்? அதாவது.... என்னோட முடிமட்டும் தான் வணங்காமுடி.. என்னோட கேரக்டர் அப்படி இல்லைன்னு சொல்லத்தான் இந்த அட்ரஸ்... சரியா... இனிமேலாவது நிம்மதியா தூக்கம் வரும்னு நம்புறேன்... (இனிமே கேப்பியா, கேப்பியா...)


"வணங்காமுடி - என்ன ஒரு கம்பீரமான பெயர்" என்று பாராட்டிய அண்ணன் எம்.பி.உதயசூரியன் அவர்களுக்கு இந்த இடத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். (எம்.பி.உதயசூரியன் - சுடச்சுட சிரிக்க வைத்துக் கொண்டிருப்பவர்.....சூரியனுக்கே டார்ச்சா? நாம லிங்க் குடுத்து தான் தெரியனும்னு இல்ல.... இந்த லிங்க், இது வரைக்கும் தெரியாதவங்களுக்கு.... )...


இந்தப் பேருல நம்ம நடிகர் திலகம் நடிச்ச ஒரு படம் இருக்குன்னு தெரியும். அடுத்த முறை இந்தியா போகும் போது சிடி வாங்கணும்.


(டிஸ்கி: மேல உள்ள ரஜினி படத்துக்கும், இந்தப் பதிவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அப்புறம் எதுக்கு இந்த படம்னு கேக்குறீங்களா.... தெரியுமே, கேக்க மாட்டிங்களே .....கேட்டா.... மறுபடியும் அதுக்கு ஒரு பதிவு போட்டுட மாட்டேன்?)

Sunday, June 7, 2009

மசால் வடையும், முதல் கதையும்..... !



அவளா அது? என்னால் நம்பவே முடியவில்லை. கண்கள் இடுங்கி, உடல் இளைத்து, முடி எல்லாம் கொட்டிப் போய்..........


"நரை கூடிக் கிழப் பருவமெய்தி....." மேடையில் பாடி பரிசு வாங்கிய என் ரம்யாவா அவள்? பத்து வருட மண வாழ்க்கை ஒரு அழகியை இப்படியா சீர்குலைத்துவிடும்......................?


யோசித்துக் கொண்டே எதிரே வந்த ஐஸ் வண்டியைக் கவனிக்காமல்...... சட்...... "யோவ், பாத்து போய்யா, கூட்டமாப் பொண்ணுங்களப் பாத்தா உங்களுக்கெல்லாம் கண்ணு தெரியாதில்ல?"

அவனை அலட்சியப் படுத்திவிட்டு அவளை மீண்டும் பார்த்தேன். அட.... இங்கே தானே நின்று கொண்டிருந்தாள்? ஒரு வேளை அது அவள் இல்லையோ? ச்சே, ச்சே.... அது அவள் தான்.... என்ன தான் தோற்றம் மாறிவிட்டாலும் அந்த தெத்துப் பல் அது அவள் தான் என்று காட்டிக் கொடுத்ததே.... எங்கே போயிருப்பாள்.... ம்ஹூம்.....

"க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" இடையில் இந்த செல் போன் சனியன் வேறு.... எடுத்தால் மறுமுனையில்..... ஐஸ்வர்யா ராய்..................!!!!"


சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தேன்... நெட்டி முறித்து நீண்ட பெருமூச்சை விட்டேன்.... கதை எழுதுவது இவ்வளவு கஷ்டமா.? செந்தில் கணேஷ் சொன்னது சரிதான்..... எனக்கெல்லாம் கதை எழுத வராது போலிருக்கிறது... மூக்கைத் துளைக்கும் வாசனையால் கவரப் பட்டு, கவனம் கலைந்தேன். எதிரே டேபிளின் மேல் சற்று முன் மாதவி வைத்து விட்டு போன மசால் வடை, ஆவி பறக்க சுண்டி இழுத்தது.

கதை எழுதிய பேப்பரை அப்படியே மடித்து வடையை சரியாக நடுவில் வைத்து மறுபடியும் ஒரு மடிப்பில் அப்படியே நசுக்கி, எடுத்து ஒரு விள்ளல் வாயில் போட்டு மென்று கொண்டே ஆவி பறக்கும் காப்பியை உறிஞ்சினேன். கூடவே ஒரு வில்ஸ் பில்டர் இருந்தால் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் வீட்டில் சிகரெட் பற்ற வைத்தால் வேறு ஏதாவது பற்றிக் கொள்ளும் அபாயம் இருப்பதால் அந்த நினைப்பை உடனே உதறினேன்.


வடை ஆசை முடிந்ததும், கதை ஆசை லேசாகத் தலை தூக்கியது. எழுதிப் பார்க்கலாமா? இது வரை எழுதிய பேப்பரை பார்த்தேன். அடடா, கதை போச்சே....

சரி வேறு ஒரு பேப்பரை எடுப்போம். யோசிக்கும் போதே உள்ளே இருந்து ஒரு குரல்..... "டேய் எவ்வளவு நேரமா கத்துறேன் - பால் வேணும், சக்கரை வேற தீந்து போச்சு, வாங்கிட்டு வானு? என்னடா பண்ணுற?" என் பிரிய சகியின் குரல் தான்... அன்பு மிகுந்தால் "டேய்"...

"அது ஒன்னும் இல்லம்மா, ஒரு கதை எழுதிப் பாக்கலாம்னு......"


"உன்னை நம்பி வந்த என்னோட கதையே இங்க சிரிப்பா சிரிக்குது.. இதுல நீ வேறயா? போடா.... போயி பால வாங்கிட்டு வா... வந்தா மத்தியானம் சாப்பாடு... இல்லன்ன்னா கொலப்பட்டினி போட்டுருவேன்..."

காப்பியை ஒரே உறிஞ்சலில் முடித்துவிட்டு சரேலென்று எழுந்தேன் - வடை மடித்த கதை பேப்பரை கசக்கிக் கொண்டே.....


Friday, June 5, 2009

வ(எ)ண்ணச்சிதறல்கள்

வலைப்பூவின் ஜாம்பவான்கள் எல்லாரும் மிக்ஸிங் பதிவுகள் போட்டு வருவது நீங்கள் அறிந்ததே. காக்டெயில் என்று கார்க்கியும், அவியல் என்று பரிசலும், மிக்ஸ்டு ஊறுகாய் என்று ஆதிமூல கிருஷ்ணனும், இன்னும் பலப் பல பெயர்களில் பல மூத்த பதிவர்களும் பதிவிட்டு வருகிறார்கள். பெரியவர்கள் செய்யும் செயல்களைப் பார்த்து குழந்தைகள் தாங்களும் அவ்வாறே முயற்சி செய்யும் இல்லையா? அது போன்ற ஒரு முயற்சி தான் இந்த வ(எ)ண்ணச்சிதறல்கள். இனி அடிக்கடி பார்க்கலாம் எனது எண்ணச் சிதறல்களை - வண்ணச்சிதறல்களாய்.
**************************************************************************

ஆரம்பித்து விட்டது டுவென்டி டுவென்டி உலகக் கோப்பை. அடிக்கடி பார்ப்பதால் சுவாரஸ்யம் குறைந்து விடுவதற்கான சாத்தியங்கள் அதிகம். சென்ற ஐபிஎல் போட்டிகளே, ஏதோ முடிவு தெரிந்து விட்ட ஒரு பக்க கதை போல தான் இருந்தன. யாரும் எதிர் பார்க்காத இரண்டு சொத்தை அணிகள் பைனலுக்கு வந்தால் யாருக்கு லாபம்? புக்கிகளுக்கு பணம் கொழிக்கும் வரம் இந்த டுவென்டி டுவென்டி. பார்க்கும் நமக்கு? - பெரிய பட்டை நாமம்.

**************************************************************************
மிகப் பாதுகாப்பான விமான சேவை அளிப்பதாக நம்பப் பட்டு வந்த ஏர் பிரான்ஸ் - ன் விமானம் பிரேசிலில் இருந்து பாரிஸ் வரும் போது காணாமல் போயிருக்கிறது - 228 பயணிகளுடன். இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை என்பது பெரும் சோகம். ஏர் பிரான்சின் விமானத்துக்கே இந்த கதி என்றால், அற்புத சேவை தரும் ஆப்பிரிக்க விமானங்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். அடுத்த முறை ஊருக்குப் போவதற்கு டிக்கெட் எடுக்கும் போது இது நினைவுக்கு வந்து தொலைக்காமல் இருக்க வேண்டும் என்று வாழைப்பாடி தண்டு மாரியம்மனை வேண்டிக் கொள்கிறேன்.
**************************************************************************

உலகப் புகை ஒழிப்பு தினம் சென்ற வாரம் கொண்டாடப் பட்டது. அன்றைய தினமே விட்டு விட வேண்டும் என்று முடிவு செய்திருந்தும், முடியாமல் போய் விட்டது. இருந்தாலும் இன்றோடு டாட்டா பைபை சொல்லி மூட்டை கட்டியாகி விட்டது, புகை, இனி எனக்குப் பகை. இதைப் படிக்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் - நீங்கள் புகைப்பவர் என்றால் சிறிது நேரம் செலவு செய்து ஒரு சின்ன கணக்கு போட்டு பாருங்கள். ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட், ஒரு மாதம் எத்தனை, ஒரு வருடம் எத்தனை, அதற்கான செலவைப் பார்த்தால் உங்கள் மனம் மாறக் கூடும்.

**************************************************************************

மொபைல் போன் பற்றிய புது செய்தி ஒன்றை அறிய நேர்ந்தது. பாட்டரி பவர் மிகக் குறைவாக இருந்து, சார்ஜரும் உங்கள் வசம் இல்லாதிருந்தால் *3370# டயல் செய்து ok அழுத்தினால் போதுமாம். ரிசர்வில் இருக்கும் பவர் எடுக்கப் பட்டு பாட்டரி லெவல் பாதியாகக் கூடி விடுமாம். இன்னும் முயற்சி செய்து பார்க்கவில்லை. யாராவது ரிஸ்க் எடுத்து ட்ரை பண்ணிப் பார்த்து தகவல் சொன்னால் நல்லது.

**************************************************************************

சென்ற மாதம் ஊருக்குப் போய் விட்டு வந்த தம்பியின் புண்ணியத்தில் முப்பது புதிய புத்தகங்கள் வாங்க முடிந்தது. பல வருடக் கனவு பலித்தது. எவ்வளவு ஆசையோடு ஆற்று நீரை அள்ளி அள்ளிக் குடித்தாலும் வயிறு நிரம்பும் வரை தான் குடிக்க முடியும் என்பதைப் போல, புதுப் புத்தகவாசத்தை முகர்ந்து பார்ப்பதிலேயே மனசு நிறைந்து விடுகிறது. படிக்கத்தான் நேரம் இல்லை. வாத்தியார் சாருவின் ராசலீலாவும் நான் படிப்பதற்காக அலமாரியில் காத்திருக்கிறது. சீக்கிரம் படிக்க வேண்டும்.
**************************************************************************

ஒரு கேள்வி : First of first is first in me, middle of you is double in me, first of last is last in me, who am I?


விடையைக் கண்டு பிடித்தவர்களுக்கு : என்னை அறிந்து கொண்டதற்கு நன்றி.

**************************************************************************

ஆசிரியர்: முட்டாள்! உன் வயசுலே பில் கேட்ஸ் ஸ்கூல் பர்ஸ்ட்டா இருந்தார் தெரியுமா?

மாணவன்: சார்! உங்க வயசுலே ஹிட்லர் தற்கொலை பண்ணிக்கிட்டார் தெரியுமா?

**************************************************************************

மிக்ஸிங் பதிவு கவிதையோடு முடிய வேண்டுமாம். இதோ நான் ரசித்தது...


அசிங்கமாய் தான் பட்டிருக்கும்
அவளுக்கு என் பார்வை

உணர்ந்து பார்த்த என் விழிகளை
உற்று நோக்கி விட்டாள்

பயணம் நீடித்த பல மணி நேரமும்
பார்த்து கொண்டேதானிருந்தேன்

வேறெங்கும் இடமிருந்திருப்பின்
மாறி அமர்ந்திருக்கக் கூடுமவள்

பொறுக்கி என்றவள் நினைத்தது
பொருத்தமாய்த தான் இருந்திருக்கும் அவ்வேளையில்;


இறுதி வரை சொல்லவில்லை
இறந்த என் தங்கையின் பிரதி அவளென்று

-----செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி


**************************************************************************

Tuesday, June 2, 2009

மீரா பவனம் - தொடர்ச்சி


இரண்டாவது ப்ளாஷ்பேக் - மீரா பவனம் -- இப்படித் தான் எல்லாம் துவங்கியது....

தொடர்ச்சி.... கீழே.....

அவளின் வெற்று மார்பில் கை பட்டவுடன் உடல் பதறி சட்டென்று கையை உதறி விலகினேன். பக்கத்தில் பார்த்தால்.........


கணேசன் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தான். கேவலமாக ஒரு பார்வை பார்த்து விட்டுக் கேட்டான்.

"என்னடா, மல்லிகா அக்கா உன்னைக் கூப்பிட்டிச்சி அப்படின்னு தான் சொன்னேன். அதுக்குள்ளே கனவு சீன் போயிட்டியா?"

"ஓ... அப்ப எல்லாம் என்னோட கற்பனையா...? டேய், சைக்கிள் கேப்புல என்ன என்னவோ நடந்து போச்சுடா....!"


"ஏன்டா நீ திருந்தவே மாட்டியா? என்ன என்னவோ புக் எல்லாம் படிக்கிர, நீ படிக்கறது மட்டும் இல்லாம என்னையும் படிடா படிடா-னு இம்சை பண்ற... எந்தப் பொண்ணை பத்தி பேச்சு எடுத்தாலும் அவ வயசு என்ன நம்ம வயசு என்னன்னு கூட யோசிக்காம கண்ட மாதிரி கனவு எல்லாம் கண்டு, அதை எங்கிட்ட வேற சொல்லி விடியக்காலைல என்னோட டவுசரும் நனையுற மாதிரி பண்ணிர்ற, வேணாண்டா ராசா.... இனிமே உன் கூட காளிதாஸ் வீட்டுக்கு வரவும் வேணாம்... வீட்டுல தேவை இல்லாம திட்டு வாங்கவும் வேணாம். நான் கிளம்புறேன்"


சொல்லிவிட்டு நான் தடுக்கத் தடுக்க நடந்து போய்....யே .... விட்டான். என்னை அறியாமல் எனது வலக்கை, என் இடது தோளில் கிள்ளிப் பார்த்துக் கொண்டது.


"நிசமாவே எல்லாம் கற்பனையா? வெறும் கனவா?... அடடா....."


ஆசையோடு அசை போட்டுக்கொண்டே நடந்தேன் மல்லிகா அக்கா வீட்டை நோக்கி. நான் கற்பனையில் பார்த்த அதே கலர் பாவாடை சட்டையில் இருந்தாள். துணிகளைக் கொடியில் காயப் போட்டுக் கொண்டிருந்தாள்.


"ஏண்டா, இன்னைக்கி கூப்பிட்டு விட்டா, அய்யா அடுத்த வருஷம் தான் வருவீகளோ...?"


நான் ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்து விட்டு... அவளின் சட்டையின் முதல் பட்டன் போடாமல் விட்ட இடைவெளியைப் பார்த்துக் கொண்டே கேட்டேன்....

"பூ பறிக்கவா கூப்பிட்ட?"......


"ஆமா டா, சீக்கிரம் வா... அம்மா வெளில போயிருக்குது.. அது வர்றதுக்குள்ள பூ பறிச்சிட்டு வந்திருவோம், என்ன?"


-----முற்றும்-----

***************************************************************************************************************