Friday, October 31, 2008

இரண்டு பிளாஷ்பேக்குகள் : பாகம் ஒன்று


பிளாஷ்பேக் ஒன்று:

அப்போது எனக்கு ஒரு 14 வயதிருக்கும். ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாக ஞாபகம். எங்களுடைய அன்றாட வாழ்விலிருந்து பிரிக்கவே முடியாத ஒரு இடமாக ரயில்வே ஸ்டேஷன் இருந்த காலம் அது. ஒரு நாளில் ஒரு முறையாவது ஸ்டேஷனுக்கு போகாமல் அந்த நாளின் இரவு வந்ததே இல்லை. சிகரெட் என்னுடைய உதடுகளின் ஸ்பரிசம் உணர்ந்ததும், பியரின் வாசத்தை என் நாசிகள் அறிந்ததும் இந்த ரயில்வே ஸ்டேஷனில்தான்.

பொதுவாக எங்களுக்கு அந்த இடம் வீட்டில் இருந்து தப்பிக்க ஒரு வசதியான காரணமாகவே முதலில் இருந்தது. படிக்கச்செல்வதாக கதை சொல்லிவிட்டு இங்கே ஓடி வந்து விடுவோம். என் நண்பர்களில் ஒருவனின் தந்தை ரயில்வேயில் வேலை பார்த்ததும் இன்னொரு முக்கியமான காரணம். எதாவது பிரச்சனை என்றால் உதவி கிடைக்கும் இல்லையா.


அப்படி தான் ஒரு நாள் பள்ளிகூடத்திலிருந்தே திட்டம் எல்லாம் பக்காவாக போடப்பட்டு மாலை சரியாக ஆறு மணிக்கு இரண்டாவது பிளாட்பார்மில் சந்திப்பதாக நண்பர் குழாமில் முடிவு ஆகியது. (எங்கள் ஊரின் ஸ்டேஷனில் மொத்தமே இரண்டு பிளாட்பாரம் தான் என்பது வேறு விஷயம்).


அன்றைக்கு பார்த்து எனது நாசமாய்ப் போன BSA SLR சைக்கிள் பங்ச்சர். அதற்காக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மீட்டிங்கை புறக்கணிக்க முடியுமா? எடுத்தேன் என் அப்பாவின் ராலே சைக்கிளை. கிளம்பினேன் புயல் வேகத்தில்.... (30 வருஷம் பழைய சைக்கிள் அது... எதாவது சின்ன டேமேஜ் என்றாலும் அடி பழுத்துவிடும்.. இருந்தாலும் நட்புக்கு முன் அதெல்லாம் தூசி ஆனது).


சரியாக 6 மணிக்கு நான் மட்டும் ஸ்டேஷனில். எனக்கு ஒரு கெட்ட பழக்கம். எந்த ஒரு முன்திட்டமிடப்பட்ட விஷயம் ஆனாலும் பேசியபடி நேரத்துக்கு சென்று சேருவது. (இப்போது என் மனைவியிடம் வாங்கி கட்டிக் கொண்டிருக்கிறேன்).


பிளாட்பாரம் முழுதும் காலியாக இருந்தது. பார்த்தவுடன் ஒரு குஷி. பரங்கி மலை ஜோதியில் முதல் டிக்கட் எடுத்து முதலில் உள்ளே சென்றது போல ஒரு குறுகுறுப்பு. பிளாட்பார்மில் எந்த வாகனத்தையும் ஓட்டக் கூடாது என்று தெரிந்தும் கிளப்பினேன் என் ராலேவை. சரியாக போலீஸ்காரனின் அருகில் சென்று நின்று போனது அந்த இரு சக்கர மூதேவி.


சைக்கிளை தனியாகவும் என்னைத் தனியாகவும் பிரிக்கும் போதே எனக்கு தெரிந்து விட்டது, இது பாகிஸ்தானின் சதி என்று. இருந்தும் மௌனம் காத்தேன். என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே.


என் அப்பாவின் ராலே சைக்கிள், திருட்டு போய் பிடிபட்ட மற்ற சைக்கிள்களுடன் நிறுத்தப்பட்டது. நான் ஒரு ஓரமாக ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் பெஞ்சில். தடக் தடக் என்று நெஞ்சு அடித்துக்கொள்ளும் ஓசை எனக்கே கேட்கிறது. இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் இறுக்கத்துடன் நான். போலீஸ்காரர்கள் பக்கத்தில் ஒருவனை போட்டு அடி பின்னி எடுக்கிறார்கள். வலி தாங்க முடியாமல் அவன் கதறும் ஒலி அடி வயிற்றை பிசைவதாக இருக்கிறது. அப்படியும் மிராசுதார் முகபாவத்தில் நான்.

இன்ஸ்பெக்டர் என்னை அழைத்ததும் ஜட்டியிலேயே ஒன்னுக்கு போயி விடும் உணர்வு ஏற்பட்டாலும், அதை அடக்கி அருகில் சென்றேன். "என்னடா, திமிரா? துரை, வெளில சைக்கிள பார்க் பண்ண மாட்டிங்களோ" என்றார். ஒன்றும் சொல்லத் தோணாமல் அமைதியாய் திரு திருவென விழித்த போது அவருக்கு பின்னால், எதிரே வாசலில் நண்பன். கைவிரலை கண்ணில் வைத்து எதோ சைகை காட்டுகிறான். முதலில் புரியவில்லை. நன்கு உத்து பார்த்ததும் புரிந்தது. "அழு... அழு.... அழுடா... கூ...." என்கிறான். ம்ஹூம்... எவ்வளவு முயற்சித்தும் எனக்கு அழுகை வரவில்லை.

கடைசியில் வெள்ளை பேப்பரில் கை எழுத்து வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தார்கள். அதிகம் கெஞ்ச விடாமல், இரண்டு மணிநேரத்திலேயே சைக்கிளையும் திருப்பி கொடுத்து விட்டார்கள். இந்த வெள்ளை பேப்பர் மேட்டர் என்னை பல நாட்கள் தூங்க விடாமல் பண்ணியது ஒரு தனிக்கதை. எதாவது ஒரு கொலை கேசில் யாரும் மாட்டாவிட்டால், வெள்ளை பேப்பரில் கை எழுத்து போட்டு கொடுத்த என் போன்ற பாவாத்மாக்களை பிடித்துச் சென்று விடுவார்கள் என பரவலாய் நான் கேள்விப் பட்டிருந்தது தான் காரணம்.

இச்சம்பவம் நடந்து சரியாக ஒரு வாரம் கழித்து அதே இன்ஸ்பெக்டரை நான் சந்தித்தது மார்க்கெட்டில். என்னுடன் என் அப்பாவும். ஸ்டேஷனில் விதைகளை நசுக்கும் ஒலி எனக்கு அப்போதே மானசீகமாக கேட்டது. அதற்கு பின்பு நடந்து தான் கிளைமாக்ஸ். அவர் என் அப்பாவிடம் சொன்னார், "தம்பி உங்க பையன்னு தெரியாது சார், இல்லன்னா உடனே விட்டுருப்பேன்"

********************************************************************

ஒரு அழகிய மனமும், ஆழ் மன நனவிலியும்




எதாவது ஒரு கவிஞரின் அல்லது எழுத்தாளரின் புதிய படைப்பு வெளியாகி, பரபரப்பை கிளப்பி புது அலையை ஏற்படுத்தும் போதெல்லாம், அந்த படைப்பாசிரியரிடம் "இதை எழுத உங்களைத் தூண்டியது எது" என்று பேட்டிகளில் கேட்கப்படுவதும், அதற்கு அவர் "சரியாக சொல்ல முடியவில்லை. அந்த படைப்புதான் என்னை வைத்து தன்னை எழுதிக் கொண்டதாக நினைக்கிறேன்" என்று கூறுவதும் பல முறை படிக்க நேர்ந்திருக்கிறது. கவிஞர் வைரமுத்துவின் "கள்ளிக்காட்டு இதிகாசம்" தொடராக விகடனில் வெளிவந்து வரவேற்பு பெற்று புத்தகமாக வடிவுரும்போது அதன் முன்னுரையில் கவிஞர் இவ்வாறு எழுதியிருந்தார் "அந்த இடங்களுக்கெல்லாம் சென்று வானம் பார்த்து கண்ணீர் வடித்தவாறு பல கணங்கள் படுத்துகிடந்திருக்கிறேன். இப்போது யோசிக்கும்போது இந்த மண் மற்றும் அதன் மனிதர்கள் அவர்களின் வலி இவை யாவும் என்னை வைத்து தங்களை பதிந்து கொண்டதன் விளைவுதான் இந்த படைப்போ என்று எண்ணத் தலைப்படுகிறேன்". இம்மாதிரி நிகழ்வுகள் கவிஞர்கள் எழுத்தாளர்களுக்கு மட்டுமன்றி மற்ற துறைகளின் வித்தகர்களுக்கும் நிறையவே நடந்தவாறு இருக்கின்றன. கணித மேதை ராமானுஜம் சிக்கலான கணிதப் புதிர்களுக்கு விடைதேடி தூங்காமல் பலநேரம் போராடி ஓய்ந்துவிட்டு உறங்கப் போகும்போதெல்லாம் அவர் கனவில் சரஸ்வதி (சி.கே.சரஸ்வதி அல்ல, சாட்சாத் கலைவாணி சரஸ்வதி தேவி) தோன்றி அப்புதிர்களுக்கு விடை அளித்ததாக அவரே சொல்லியதுண்டாம்.

சமகாலத்தில் பார்த்தாலும் ஏகப்பட்ட சம்பவங்கள். சாரு நிவேதிதா கூட சில முறை தனக்கு அப்படி அனுபவங்கள் ஏற்பட்டதாக எழுதியிருக்கிறார். எழுத்தின் இடையே உறங்கிப் போவதும், விழித்து எழும்போது பாதியில் விட்ட கதை முற்றுப் பெற்றிருந்தும் என அலாதி அனுபவம். இவ்வாறாக கண்ணுக்கு தெரியாத (அல்லது கனவில் தெரிந்த) சக்தியின் மூலமாக படைப்புகள், கண்டுபிடிப்புகள் உருவாவது தொன்று தொட்டே நடந்து வரும் விஷயம் தான். சினிமா காரர்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. (பட்டாம்பூச்சியின் சிறகசைப்பையும் மைதா மாவு மேக் அப் - ஐயும் ஒருங்கிணைத்த கமலின் கேயாஸ் தியரியும் இந்த வகையை சார்ந்தது தானா என்று எனக்கு தெரியவில்லை). யோசித்தால் எனக்கும் கூட இம்மாதிரி அனுபவங்கள் நிகழ்ந்தே இருக்கின்றன (தோ.. பார்றா.. அட்ரா அட்ரா)... உண்மையைத்தான் சொல்கிறேன். வலைப்பூ ஆரம்பித்ததும், பல உன்னதமான (???) விஷயங்களை அதில் எழுதி வருவதும் - இவை எல்லாமே ஒரு இரவில் ஓவராய் சரக்கு அடித்த பின்பு எனக்கு மட்டும் கேட்ட அசரீரியினால் தான். இப்படி நடப்பவை யாவும் ஆழ் மன நனவிலியின் (Sub-Conscious Mind) அற்புதங்கள் என்கிறது அறிவியல். மனித மூளையின் அளவிட முடியாத விந்தைகளில் ஆழ் மன நனவிலி முக்கிய பங்கை ஆற்றுகிறது. ஜெயமோகனின் ஒரு அறிவியல் புனை கதையில் மனிதன், தன் மூளையின் வெறும் ஐந்து சதவீதம் மட்டுமே உபயோகிப்பதாக வரும் ("மூளை என்பதை அமெரிக்க வெள்ளை மாளிகை எனக்கொண்டால் பல மனிதர்கள் அதன் வராந்தாவிலேயே வாழ்ந்து விட்டுப் போகிறார்கள்") A Beautiful Mind என்ற திரைப்படத்தை சமீபத்தில் காண நேர்ந்தது. அதி அற்புதமான ஒரு காட்சியனுபவமாக அது அமைந்துவிட்டது. படம் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து மீண்டு வருவது அவ்வளவு சாதாரணமாய் இருக்கவில்லை. ஒரு பல்கலைக்கழகத்தில் கணித ஆராய்ச்சியாளனாக (Russell Crowe) சேரும் ஒரு மாணவனின் வாழ்க்கை தான் களம். தீவிர சிந்தனை மற்றும் மிதமிஞ்சிய கற்பனையின் விளைவால் அவனுக்கு செயற்கை மனிதர்கள் கண்ணுக்கு தெரிகிறார்கள். அவனுடன் உரையாடுகிறார்கள். பைத்தியமாய் மாற நேரும் அபாயத்தில் இருந்து அவன் தன்னை எப்படி காத்துகொள்கிறான். நோபல் பரிசு பெறும் அளவு எப்படி உயர்கிறான் என்பது கதை. இதற்கு மேல் இந்த படத்தை பற்றி இங்கே சொன்னால் நன்றாக இருக்காது. ஒரு தனி பதிவாக போட வேண்டிய விஷயம் அது. என்னை பொறுத்தவரை இத்திரைப் படத்தை ரசித்து, தனிமையில் பார்ப்பதே ஒரு சுகானுபவம். பார்த்து அனுபவித்து பின் சொல்லுங்கள். விஷயத்துக்கு வருகிறேன் (அடப்பாவி... இன்னும் நீ விஷயத்துக்கே வரலியா)... கண், காது இந்த இரண்டு புலன்களாலும் உணரப்படுவதே நம் உலகம். கண் என்ற அதிசக்தி வாய்ந்த கேமரா முன் எது இருந்தாலும் ஷட்டரை திறந்தவுடன் அப்படியே அதை தலைகீழாக்கி மூளையில் பிம்பமாக குவிக்கிறது. அதை நம் மூளை காட்சியாக புரிந்து கொள்கிறது. அதைப் போலவே காது, சத்தங்களை எல்லாம் ஒலி அதிர்வுகளாக மாற்றி மூளைக்கு அனுப்புகிறது. சரியா? இப்போது என் கேள்விகள்... (இது வேறயா? கேட்டு தொலை..நாய்க்கு வாக்கப்பட்டா குலைச்சு தான ஆகணும்?)

* இப்படி இந்த புலன்களால் உணரப் படும் உலகத்துக்கு மாற்றாக, நேரடியாக மூளையே உணர முடிகின்ற உலகமும் இருந்து தானே ஆக வேண்டும்? ** கண் மற்றும் காதுகளின் வழியாக மூளையால் பெறப்படும் தகவல்கள் அங்கே (மூளையில்) எப்படி கையாளப் படுகின்றன என்பதைக் கண்டறிந்துவிட்டால், பிறகு கண் இல்லாமல் பார்ப்பதும், காதுகள் இல்லாமல் கேட்பதும் சாத்தியமாகி விடாதா? பிறவியிலேயே கண், காது குறைபாடு உள்ளவர்கள், நன்றாக இருந்து இடையில் பாதிக்கப் பட்டவர்களுக்கெல்லாம் இது எப்பேற்பட்ட ஒரு விஷயமாக இருக்கும் ? ***கொடூரமான கிரிமினல்கள் அப்படி மாறக் காரணமான விஷயங்களை ஆழ் மன நனவிலியில் இருந்து அகற்றி விடும் தொழில் நுட்பம் வந்துவிட்டால் நம் நாட்டில் சிறைச்சாலைகளே இல்லாமல் போய் விடும் இல்லையா? ****நல்லதை மட்டுமே நினைத்து, நல்லன மட்டுமே செயல்படுத்தும் படி அரசியல்வாதிகளை மாற்றியமைத்து விட இயலாதா? *****மோசமான படம் எடுத்து மக்களை, மாக்கள் ஆகும் இயக்குனர்களுக்கு எல்லாம் நல்ல படங்கள் பற்றிய அறிவை இன்ஜெக்க்ஷன் மூலம் ஏற்றி விட முடியாதா? இவை யாவும், Beautiful Mind படம் பார்த்த பிறகு தோன்றிய எண்ணங்கள். கனவில் வருகின்ற மனிதர்கள் நனவுலகிலும் வந்துவிட்டால் ? என்ற கேள்வியே இந்த படம். ஆனால் நாம் காணும் கனவை எல்லாம் நனவாக்க முடிந்து விட்டால்? என்ற கேள்வியை விதைத்து விட்டது. இன்னொரு விஷயம். இந்த படத்தில் வரும் ஹீரோவுக்கு நேர்வது போலவே எனக்கும் அவ்வப்போது நேர்கிறது. புதிய புதிய உருவங்கள் வந்து உரையாடுவதும், சிரிப்பதும் பல முறை நடந்துள்ளது. ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால் நான் மூச்சு முட்டக் குடித்துவிட்டு குப்புறப் படுத்திருக்கும்போது மட்டுமே அவை வருவதுதான். இதை யாராவது ஒரு திரைப்படமாக எடுக்க முனைந்தால் சம்பளம் வாங்காமல் கதாநாயகனாக நடித்து கொடுக்க நான் தயார். (ஒரே ஒரு கண்டிஷன். த்ரிஷா தான் ஹீரோயின்)

Wednesday, October 29, 2008

எரிகின்ற வீட்டில் பிடுங்கியது வரை லாபம்..!


உங்களில் சிலர் இன்று தினமலரில் அந்த கேவலத்தை வாசித்திருக்கக்கூடும். மக்களை இதற்கு மேல் அவமானப்படுத்தவோ அசிங்கப்படுத்தவோ முடியாது. ஒரு நாளிதழின் வேலையை விட்டுவிட்டு தினமலர் எப்போது புலனாய்வு பத்திரிக்கை ஆனது? அதாவது பரவாயில்லை. அந்த செய்தியின் தொனி என்னவென்றே புரியவில்லை? நக்கலா அல்லது உண்மையிலேயே அதை ஒரு செய்தியாக எண்ணித்தான் வெளியிட்டார்கள?
சரி சரி. பூடகம் வேண்டாம். செய்தி இதுதான்.
ரஜினி அதிரடி. இலங்கை பிரச்சனையில் தனி ஆவர்த்தனம் செய்ய முடிவு. தமிழகத்தின் எந்த ஒரு பிரச்சனைக்கும் தன்னுடைய பாணியில் தனியாக போராடுவது (?) ரஜினி ஸ்டைல். அதையே தற்போதைய இலங்கை பிரச்சனைக்கும் கடைபிடிக்க போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குசேலன் தோல்வி, அரசியலுக்கு வரச்சொல்லி ரசிகர்களின் தொந்தரவு, அதனால் எழுந்த அதிருப்தி, சரிந்த இமேஜ் மற்றும் பல கோடிகளில் கோலாகலமாக உருவாகி வரும் எந்திரனின் கலெக்க்ஷன் பற்றிய பயம் - ஆக தன்னை சூழ்ந்துள்ள இத்தனை தொல்லைகளுக்கும் எதிராகவும் இலங்கை விஷயத்தைகையில் எடுத்தால்? வேறு என்ன வெற்றி தான்.... எப்போதும் இளிச்சவாயனாக்குவது தமிழ் நாட்டின் தமிழனை. இந்த முறையும் அதேதான் ஆனால் அதற்கு இலங்கை தமிழனின் பிரச்சனை தானா கிடைத்தது. இதைஎல்லாம் படிக்கும் போது அசூசையாய் இருக்கிறது.
தமிழனுக்கு என்றுதான் விடிவு காலமோ?

************************************************************************************

அதே நாளிதழில் கண்ட இன்னொரு புகைப்படம் கொதிக்க வைத்து விட்டது. வைரமுத்து கருணாநிதிக்கு இலங்கை தமிழஅனுக்கு உதவ காசோலை அளிக்கிறார். வாயெல்லாம் பல். ச்சீ . வெட்கம் கெட்டவர்கள்.

அந்த புகைப்படத்தை இங்கே கொடுக்கலாம் என்று மறுபடியும் தினமலரை மேய்ந்த போது அதே விஷயம், ஆனால் இந்த முறை சரவணபவன் அதிபர். தன் படை சூழ சிரித்துக்கொண்டே காசோலை வழங்கும் அற்புதமான காட்சி. இவர்கள் கொடுக்கும் காசு எதற்கு ? அங்கே அவர்களின் பிணத்தின் மீது போடவா? தூத்தேரி. இலவச உணவாம். மத்திய அரசு உதவியாம். அதையும் இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே வழியாக தமிழனை சென்று சேருமாம். ஒரு பக்கம் தமிழன் மேல் குண்டு வீசிவிட்டு இன்னொரு கையால் உணவு கொடுப்பார்களாம். இதற்கு பேசாமல் இலவச பாடை வழங்கலாம்.

*************************************************************************************

வாழ்த்தும், வெடியும் மற்றும் முகத்தில் கரியும்

நேற்று முன்தினம் தீபாவளி. ஊரில் இருந்திருந்தால் கோலாகலமாக கொண்டாடிஇருக்கலாம். இங்கே என்ன செய்ய முடியும். இனிப்புகள் பரிமாறிக்கொள்ளும்ஒரு வாய்ப்பாகவே ஒவ்வொரு தீபாவளியும் கடந்து போகிறது. அதே போலசம்பிரதாயமான வாழ்த்தும்.
அப்படி நினைத்துக்கொண்டுதான் ஒரு வாழ்த்தை இ-மெயிலில் நண்பர்களுக்கெல்லாம் அனுப்பி வைத்தேன். "தீப ஒளி அறியாமை இருளை அகற்றி நம் வாழ்வை வளப்படுத்தட்டும்" இதுதான் அதன் சாரம்.இந்தசம்பிரதாயமான வார்த்தைகளுக்கு ஒரு தீவிரமான எதிர்வினையை சத்தியமாகநான் எதிர்பார்க்கவில்லை.
நண்பர் ஒருவர் உடனே பதில் கொடுத்திருந்தார். பதில் வாழ்த்தை எதிர்பார்த்துஅசுவாரசியத்துடன் மெயிலை திறந்த எனக்கு காத்திருந்தது ஓலை வெடி. நண்பர் தன்னை நாத்திகன் என்றும், இது போன்ற வாழ்த்துக்களை தனக்கு அனுப்பவேண்டாம் என்றும் குறிப்பிட்டு அதற்கெல்லாம் உச்சமாக தீபாவளியே ஒருஅறியாமை தான் என்றும் சுட்டியிருந்தார். நிறைய யோசிக்க வைத்துவிட்டதுஇந்த எதிர்வினை.
தீபாவளிக்கென்று நான் விபூதி, குங்குமம் ஒன்றும் அனுப்பி வைத்து விடவில்லை. கடவுள் பூமிக்கு வருகிறார் என்று பிரசங்கமும் செய்யவில்லை. அட... அதெல்லாம் போகட்டும். இந்த வாழ்த்தை பத்து பேருக்கு உடனே அனுப்பாத, தீபாவளியை நம்பாத நாத்திகர் யாவரும் நாசமாய்ப் போவார்கள் என்று சாபம் கூட இடவில்லை. அனுப்பியது ஒரு வாழ்த்து. நல்லா இருங்க என்று வாழ்த்த ஆன்மிக சக்தி தேவை இல்லை. மனம் இருந்தால் போதும்.
என் பரம விரோதி என்று நான் கருதும் ஒருவர் எதிரில் வந்து எதாவது வாழ்த்தும் விதமாக முகமன் கூறினால், அது நான் உடன்படாத ஒரு விஷயம் என்றாலும், என்னை அறியாமல் அதை ஏற்கும் விதமாக புன்னகை என் முகத்தில் அரும்பிவிடுவதை இப்போது எண்ணிப்பார்க்கிறேன்.
மனிதனை ஆற்றுப்படுத்த தோன்றியவையே மதங்கள். குழந்தை மனம் கொள் என்று கிருஷ்ணரும், உன்னில் சிறியோனுக்கு உதவு என ஏசுவும், எந்த காரணத்திற்காகவும் வன்முறை ஏற்கப்படாது என நபி அவர்களும் வித விதமாக கூறிய எல்லாம் வலியுறுத்தும் கருத்து ஒன்றேதான்.
ஆனால் பண்பாடும் கலாச்சாரமும் முழுமையாய் ஏற்பட்டுவிட்ட சமுதாயத்தில் மதங்களின் அவசியம் இல்லாமல் போய் விடலாம்.
வாழ்த்துக்கு எதிர்வினை ஆற்றிய நண்பரின் நிலையில் நான் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்று எண்ணிப்பார்த்தேன். நேரில் சந்திக்கும்போது இதமாக அந்த வாழ்த்தை மறுத்திருப்பேன் அல்லது பேசாமல் அந்த மெயிலை டெலீட் செய்து விட்டு வேலையை பார்த்திருக்க கூடும்.
பற்பல மூட நம்பிக்கைகள் நிறைந்த, மக்களை இன்னும் பிரிவினைப்படுத்தியே வைத்திருக்கிற ஒரு மதத்தை வாழ்முறையாய் கொண்டிருக்கும் எனக்கு அடுத்தவர் மனம் எந்த விதத்திலும் புண்பட்டுவிடக் கூடாது என்ற தன்முனைப்பு இருக்கும்போது, எதையும் பகுத்து ஆராய்ந்து பின்பே ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உள்ள நாத்திகன் எப்படி இருக்க வேண்டும்?
எனக்கு தெரியவில்லை.... என் கருத்து தவறாகவும் இருக்கலாம்...... இதற்கு உங்கள் பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்.


Monday, October 27, 2008

படித்ததில் பிடித்தது



நம் ரத்தத்திலேயே 0.1 சதவீதமாவது ஆல்கஹால் இருக்கும். அது சிலருக்கு குறிப்பிட்ட அளவை விட குறைவாக இருந்தால் அவர்களுக்கு மது மீது ஈர்ப்பு வரும். உடம்பெல்லாம் எண்ணை பூசி தெருவெல்லாம் உருண்டாலும் என்ற‌ பழமொழி இங்கும் பொருந்தும். ரத்தத்தில் உள்ள ஆல்க்கஹாலை(வெளியிலிருந்து தரப்பட்ட) கிட்னி சிறு நீர் மூலம் வெளியேற்றிக்கொண்டே இருக்கும். பார்ரட்டிக்கு மீண்டும் குடிக்க எண்ணம் பிறக்கும். இது ஃபிஸிக்கல் காஸ் /தாய்ப்பாலை அவசரப்பட்டு நிறுத்தினாலும் அக்குழந்தைக்கு நிப்பிள் காம்ப்ளெக்ஸ் ஏற்பட்டு குடிக்க ஆரம்பிக்கும். மிக முக்கியமாக ஆல்க்கஹால் என்பது எஸ்கேப்பிஸ்டுகளின் சரணாலயம். இது பிரச்சினைகளிலிருந்து தப்பித்தலில் ஆரம்பித்து பால் வாங்கி வரும்போதும் என்னடா இது அசதியாயிருக்கு ஒரு கட்டிங்க் போடலாமா என்ற எண்ணம் வந்து விடும். ஆல்கஹால் நேரிடையாக உறிஞ்சப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. உணவு செரிக்கப்பட்டாலன்றி ரத்தத்தில் கலக்காது. நேரிடையாக உறிஞ்ச பழக்கப்பட்ட உடம்பு ஜீரண சக்தியை இழந்து தின்னது தின்ன மாதிரியே வெளித்தள்ளப்படும்.

த‌ண்ணி போட்ட‌ போது ஒரு எண்ண‌ம்,போடாத‌ போது ஒரு எண்ண‌ம் என்று ஆர‌ம்பித்து ம‌னித‌ ம‌ன‌மே ஆள‌வ‌ந்தான் க‌ம‌ல் மாதிரி ஆகிவிடும். முக்கிய‌மாய் ஆண்மை குறையும், ம‌ற‌தி அதிக‌ரிக்கும், ஞாப‌க‌ங்க‌ளில் குழ‌ப்ப‌ம் ஏற்ப‌ட்டு ச‌ந்தேக‌ புத்தி அதிக‌ரிக்கும். ர‌த்த‌த்துக்கு மான‌ம்,ஈன‌ம் ,சூடு,சுர‌ணை,பாச‌ம்,நேச‌ம்,ப‌ண்பு,க‌லாச்சார‌ம் தாய்/ம‌னைவி/ம‌க‌ள் வேறுபாடு தெரியும். ர‌த்த‌த்தில் க‌ல‌ந்த‌ ஆல்க்க‌ஹாலின் ச‌த‌வீத‌ம் அதிக‌ரிக்க‌ அதிக‌ரிக்க‌ ..மேற்சொன்ன‌வை காணாம‌ல் போய் விடும்.

நன்றி: சிரிஷா

Thursday, October 16, 2008

தூக்கம் வரல சாமி

தூங்க முடியலங்க. வடிவேலு முதல்வர் ஆக ஆசைப்பட்டது மாதிரி நானும் சுஜாதா மாதிரி பெரீய்ய எழுத்தாளர் ஆக ஆசைப்பட்டு தொலைச்சுட்டேன். வலைல பதிஞ்சு பதிவரும் ஆயிட்டேன். ரெண்டு நாள் கழிச்சு இந்த பரபரப்பெல்லாம் ஓஞ்ச பின்னாடி சாவகாசமா எதாவது பதியலாம்னு நினைச்சா அதுக்குள்ள என்னை எழுத தூண்டுது (!?!?) இந்த மேட்டர்... (நீ எழுதி கிழிக்கலன்னா யாருக்கும் சாப்பாடு கிடைக்காது... போடாங்க...)
நம்ம ஜெட் ஏர்வேய்ஸ் ஓனர், அவருதாங்க - நரேஷ் கோயல் ஒரு ஸ்டண்ட் அடிச்சு ஒட்டு மொத்த இந்தியாவையும் பெருமைப்பட வச்சுருக்கார். நேத்து 1,900 ஊழியர்கள வேலைய விட்டு அசால்ட்டா தூக்கிட்டு இன்னைக்கி அத்தனை பேருக்கும் திருப்பி வேலை போட்டு கொடுத்து ஒரே நாள்ல ஹீரோ ஆயிட்டார். அதுக்கு அவர் சொல்லுற காரணம் தான் என்னால தாங்க முடியல. அவுரு பொண்ணுக்கு 19 வயசாம். வேலை இழந்த அத்தனை பேருக்கும் 20,21 வயசாம். அதுனால அவங்க கண்ணீரை தாங்கிக்க முடியலையாம். அடங்க மாட்டேன்றானுங்கப்பா.
அரசியல் அழுத்தம் (political pressure) காரணமாத்தான் திருப்பி வேலை கொடுக்குறீங்களானு பேட்டில கேட்டதுக்கு நம்ம ஆளு அவுங்க செத்து போன அம்மா மேல சத்தியமா எந்த அரசியலும் இதுல இல்லன்னு சொல்லுறார். ஐயா இந்த பேட்டி வெளியான பத்திரிக்கை தினத்தந்தி இல்லீங்கோ. டைம்ஸ் ஆப் இந்தியால பிரசுரம் பண்ணதுதானுங்கோ.
இந்த இட்லி வாயன் இத்தாம் பெரிய கம்பெனிக்கு ஓனர்னு சொன்னா நம்ப முடியலீங்களே....

என்னவோ.... வேலை போன அத்தனை பேருக்கும் திருப்பி வேலை கிடைச்சதுல சந்தோசம்.


நம்ம முடி விஷயத்த தான் பதியலாம்னு நினைச்சேன். அதுக்குள்ளே மூடு மாறிடிச்சு. சரி.. பொறுமையா அந்த மேட்டருக்கு வர்றேன்.

இதோ வந்துட்டேன்.....

உலகத்தமிழனுக்கு இருக்கும் பல கோடி பிரச்சனைகள் போதாதென்று இதோ நானும் களத்தில்.... "இவன் ஓசி ல குடுத்தா பினாயில கூட குடிப்பான்" னு ஒரு படத்தில் வரும் வசனத்தை போல ஓசியில் கூகிளார் கொடுக்கும் ப்ளாகில் ஆரம்பித்தாயிற்று கணக்கை... என்ன எழுதப்போகிறேன்? வானத்திற்கு கீழே உள்ள அத்தனையும் ப்ளாக்குகளில் லோல் படும்போது, புதிதாக எதை எழுத முடியும்?
எழுத்து என்பது எதாவது ஒரு வகையில் யாரையாவது பாதிக்க வேண்டும், அப்போது தான் அதை எழுதியதின் காரணம் முழுமை பெறும் என்று நம்புபவன் நான். நீண்ட நாள் திட்டமிட்டு உங்களை எல்லாம் பெருசா பாதிக்க.... இதோ வந்துட்டேன்...

ஹப்பாடா... கணக்கை ஆரம்பிக்கவே நாக்கு தள்ளுது... ரெண்டு நாள்ல திரும்பி வர்றேன்... மயிரை (அதாங்க முடி) பத்தி அடுத்த பதிவில பேசலாம்.