Showing posts with label ச்சும்மா டைம் பாஸு..... Show all posts
Showing posts with label ச்சும்மா டைம் பாஸு..... Show all posts

Wednesday, October 7, 2009

என் ராசி அப்படி - 1

உப்பு விற்கப் போனால் மழை பெய்வதும், மாவு விற்கப் போனால் காற்றடிப்பதும் பலருடைய வாழ்கையில் சகஜம். ஆனால் என்னுடைய கதை கொஞ்சம் ஸ்பெஷல். நான் பண்ணவே பண்ணாத தவறுகளுக்கெல்லாம்,பொறுப்பேற்றுக் கொண்டு "திரு திரு"க்க வேண்டி வந்து விடும்.


அப்படி மாட்டிக் கொண்டு, தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று அப்பீட்டு அய்யாசாமியாக மாறி, பெரும் சிரமப் பட்டு வெளிவந்த சம்பவங்கள் பலப்பல., குறிப்பாக, இந்தத் "தொலைபேசி" என்கிற வஸ்து, தொல்லை பேசியாக மாறி என் வாழ்க்கையில் நிறைய விளையாடி இருக்கிறது. எல்லாவற்றையும் சொல்லிவிட ஆசை. இருந்தாலும், பிரித்து பிரித்து சொன்னால், இன்னும் கொஞ்ச நாள் ஓட்டலாம் என்பதாலும்,பதிவு ரொம்ம்ம்ப நீண்ண்ண்டு விட்டால், நீங்கள் இந்த வலைப்பூ பக்கமே வராமல் போகும் அபாயம் இருப்பதாலும் (இப்போ வந்து போயிட்டு இருக்குற நாலு பேரை இழக்க மனசு வரலீங்.) , ஜஸ்ட் மூன்றே மூன்று சம்பவங்கள் - இதோ இங்கே...


சம்பவம் நம்பர் ஒன்று: என் அப்பாவிற்கு, அப்போது தேவஸ்தான விடுதியில் பதிவர் வேலை. விடுமுறை நாட்களில் நான் சாப்பாடு எடுத்துச் செல்வது வழக்கம். அந்த அலுவலகத்தில் அப்பா மேசையில் ஒரு தொலைபேசி இருக்கும். சுழட்டி டயல் செய்யும் விதத்தில் அமைந்த அந்தக் கால மாடல் அது. அதற்கு முன் போனைப் பார்த்திருந்தாலும் உபயோகிக்க வாய்ப்பு கிடைக்காததால், அந்த போன் மீது ஒரு ஈர்ப்பு எனக்கு. அலுவலகத்தில் என் அப்பா தான் இன்சார்ஜ் என்பதால், என்னைக் கேள்வி கேட்க யாரும் இல்லை. என் அப்பா சொல்வதைத் தான் நான் கேட்பதே இல்லையே. பிறகென்ன, சந்தோஷமாக இஷ்டத்திற்கு டயல் செய்வேன், தெரிந்த, தெரியாத நம்பர்கள் அனைத்திற்கும். எல்லா இடத்திற்கும் பேசிப் பேசி சீக்கிரமே போரடித்து விட்டது. பிறகு, டைரக்டரியில் பெயர், போன் நம்பர் பார்த்து டயல் செய்து பேச ஆரம்பித்தேன், ஏதேதோ பேசி விட்டு பிறகு ராங் நம்பர் என்று சொல்லி வைத்து விடுவேன். என் அப்பா எவ்வளவோ சொல்லி சொல்லிப் பார்த்து விட்டு, பிறகு ஒழிஞ்சு போ என்று விட்டு விட்டார். ஒரு நாள் சுழட்டி சுழட்டி டைம் பாஸ் செய்து கொண்டிருந்தேன் (போன் டயலரைத் தான்). அப்பா பத்து நிமிடத்தில் வந்து விடுவதாக சொல்லி விட்டு எங்கோ சென்றிருந்தார். டயல் செய்து களைத்துப் போய், நான் வைத்தவுடன், போன் ரிங்கியது. வேறு யாரும் அருகில் இல்லாததால் நானே எடுத்தேன்


"ஹலோ, வணக்கம் தண்டபாணி நிலையம்" - இது நான்


"ஏய், யார்ரா அது, இப்பல்லாம் சுள்ளானுங்களுகெல்லாம் தேவஸ்தானத்துல வேலை போட்டுக் குடுக்குறாங்களா ? " - இது எதிர் முனை
"நான் ஞானசேகரன் பையன் பேசுறேன் சார். நீங்க யாரு?"
"டேய், சுந்தரா பேசுற? நான் ரமேஷ் அப்பா பேசுறேன்டா..உன்னைப் பத்தி பேசத்தாண்டா போன் பண்ணேன், ராஸ்கல் - என்னோட போஸ்ட் ஆபீஸ்ல பாம் இருக்குன்னு போன் பண்ணியா மிரட்டுற? போலீஸ்ல சொல்லிட்டேன், உன் மேல தான் சந்தேகேமா இருக்குன்னு, இன்னும் பத்து நிமிஷத்துல வந்துருவாங்க, அங்கேயே இரு.."
"அங்கிள், உங்களுக்கு போன் பண்ணி ரொம்ப நாள் ஆச்சு, சத்தியமா நான் பண்ணவே இல்ல அங்கிள்"
"பொய் சொல்லாதடா, எல்லாம் எனக்கு தெரியும், ஓசி போன் கிடைச்சா யாருக்காவது போன் பண்ணி, மிரட்டுறது, இல்ல சும்மா ஒரு பேரைச் சொல்லி அவரு இருக்காரா, இவரு இருக்காரானு கேட்டு தொந்தரவு பண்றது. நீ பாம் இருக்குன்னு சொல்லி மிரட்டுனது - ஒரு பெரிய தப்பு, போலீஸ் அரெஸ்ட் பண்ணுவாங்க, இனிமே நீ ஜெயில்ல தான் எப்பயுமே இருக்கணும். அங்கே தான் படிக்கணும்.
தீவிரவாதின்னு கேஸ் போட்டா, நீ படிக்க முடியுமா முடியாதான்னு வேற தெரியல.
நினைச்சப்ப எல்லாம் போன் பண்ணிருக்க, பத்து தடவ பாம் த்ரெட் குடுத்துருக்க, இது போஸ்ட் ஆபீஸ், சென்ட்ரல் கவர்மென்ட். உன்னோட வாழ்க்கையே போச்சு. எனக்கு ஒரே ஒரு கவலை தான். உன்னால ஒரு நல்ல மனுஷன் - உங்க அப்பாவையும் அரெஸ்ட் பண்ணுவாங்க, உன்னை போன் பண்ண விட்டதுக்கு. எங்க உங்க அப்பா? அவர் கிட்ட போனைக் குடு"
"அங்கிள், அங்கிள் நான் பண்ணல, பிராமிசா நான் போன் பண்ணல, நீங்க வேணா ரமேஷைக் கேட்டுப் பாருங்க."
"அப்பா எங்கடா"
"அப்பா வெளில போயிருக்காங்க.."
"ஒ, உன்னை ஊரு பூரா போன் பண்ண சொல்லிட்டு, வேலை நேரத்துல சீட்டுல இருக்காம அவரும் வெளில போயிட்டாரா, இதுக்கு எத்தனை வருஷம் ஜெயில்னு கேக்கணும்"


இதற்கு பேச முடியாமல் நான் போனை வைத்துவிட்டேன். தாங்க முடியாமல் ஒரு பயப்பந்து வயிற்றில் இருந்து எழுந்து தொண்டைக் குழியில் வந்து முட்டி நின்று கொண்டது. சத்தம் போடாமல் அழ ஆரம்பித்தேன். அப்பா வந்தவுடன் கதறிக் கதறி அழுதுகொண்டே மேட்டரை சொன்னேன். சீரியசாய் யோசித்தவர், "சரி நான் பேசிப் பாக்குறேன், நீ வீட்டுக்கு போ" என்றார்.
 

"அப்பா, போலீஸ் வருவாங்கன்னு...... அங்கிள்......"


"வந்தா என்னை அரெஸ்ட் பண்ணட்டும், நான் தான் போன் பண்ணி மிரட்டினேன்னு சொல்லிர்றேன், வேற என்ன பண்ணுறது"
"(விசும்பலுடன்)... அப்பா... நீங்க ஏன் போகணும்.... நான் சத்தியமா போன் பண்ணவே இல்லை..."
"எப்படி நம்புறது.. நான் நம்புனாலும், இங்க இருக்குற எல்லாரும் சாட்சி சொல்லுவாங்க, நீ தான் இங்க வந்தாலே போனும் கையுமா இருப்பியே...சரி சரி.. போ வீட்டுக்கு"
வீட்டுக்கு வந்து விட்டாலும், மனம் எல்லாம் அங்கேயே இருந்தது, இரவு அப்பா வரும் வரை நரக வேதனை. அம்மாவிடமும் சொல்லவில்லை. அப்பா வந்தவுடன், பாய்ந்து அருகில் சென்று கிசுகிசுப்பாய்க் கேட்டேன் - "என்னப்பா ஆச்சு"
வசீகரப் புன்னகையுடன் அப்பா சொன்னார் - "ஒண்ணும் ஆகல, நான் சொல்லித்தான் ரமேஷ் அப்பா போன் பண்ணி உன்கிட்ட அப்படி எல்லாம் பேசினார் - இனிமே போன் பண்ணுவியா?"
விடுபட்டுவிட்ட பெருமகிழ்ச்சியில் நான் - "படிச்சு வேலைக்கு போன பின்னாடி, ஆபீஸ் போனுக்கு, எனக்கு கால் வந்தாலும், சத்தியமா பேச மாட்டேன்பா..."
சொன்ன சொல்லைக் காப்பாற்றி இருந்தால், அதற்கடுத்த இரண்டு சம்பவங்கள் நடந்தே
இருக்காது.



---தொடரும்...

Friday, September 25, 2009

Chatting-ஐ கண்டுபுடிச்சவன சாவடிங்கடா....

வணங்காமுடி: வணக்கம் நண்பரே.. எப்படி இருக்கீங்க.. வீட்டுல எல்லோரும் நலமா...

நண்பர்: எல்லாரும் நலம், நீங்க நல்லா இருக்கீங்களா?

வ.முடி: நல்லா இருக்கேன்.... அப்புறம் ஒரு விஷயம்... ஹி ஹி.. ஒன்னும் இல்ல..நேத்து ஒரு கவிதை எழுதுனேன்....

நண்பர்: அய்யய்யோ...

வ.முடி: ?

நண்: அதாவது.... நான் "அய்.." னு டைப் பண்ணேனா... அது டிஸ்ப்ளே-ல மாறிடுச்சி... நீங்க சொல்லுங்க.. என்ன கவிதை...

வ.முடி: கவிதை எழுதிட்டு உடனே என்னோட "முடிமட்டும்" வலைப்பூ-ல போட்டுட்டேன்.. நீங்களே ஓபன் பண்ணி பாருங்க.. பாத்துட்டு மறக்காம பின்னூட்டம் மட்டும் போட்ருங்க...

நண்: அதுக்கென்ன... பாத்துட்டா போச்சு.. எவ்வளவோ பண்ணிட்டோம்.. இதப் பண்ண மாட்டோமா...

சிறிது நேரம் கழித்து....

நண்: வீட்டுக்காரம்மா தலை-ல பெரிய ஐஸா வச்சுட்டீங்க போல...

வ.முடி: அதிருக்கட்டும்.. கவிதை எப்படின்னு சொல்லவே இல்லையே...

நண்: பிரமாதம்.... எப்படிங்க இந்தச் சின்ன வயசுல உங்களுக்கு இவ்வளவு அறிவு...

வ.முடி: ஹி ஹி...ரொம்பப் புகழாதிங்க...

நண்: இருந்தாலும் உங்க வார்த்தை வீச்சும், கவிதைய கையாள்ற உங்களோட லாவகமும்... அப்பப்பா... புல்லரிக்குதுங்க... நீங்க என்னோட நண்பர்னு சொல்லிக்கவே பெருமையா இருக்குங்க....

வ.முடி: அது... வந்து.... அது...

நண்: இருங்க.. இருங்க.. நான் சொல்லி முடிச்சர்றேன்... எப்படிங்க இப்படிலாம் முடியுது.. இப்ப தானா...இல்ல சின்ன புள்ளேல இருந்தே இப்படியா .. படிச்சதும் ஒன்னு தோணுச்சுங்க ... நீங்க வாழ்ந்துட்டு இருக்குற அதே காலத்துல நானும் வாழுறேன்னு நினைக்கிறப்ப... வாந்தி வருதுங்க.. சாரி... வார்த்தையே வரலங்க...

வ.முடி: (என்ன இது... கொஞ்சம் ஓவர் டோஸா இருக்கு... )... இருந்தாலும் இந்தக் கவிதைக்கு உங்களோட புகழ்ச்சி ரொம்ப அதிகம்...

நண்: அட நீங்க வேற.. உங்களை பாராட்ட சரியான வார்த்தை கிடைக்காம தடுமாறிட்டு இருக்கேன்... வெறும் வார்த்தைல என்னத்த பெருசா சொல்லிற முடியும்... எப்படி தான் இவ்வளவு ஞானம், அறிவு, தேடல், மொழிப்பற்று, ஆளுமை எல்லாம் வந்ததோ.... நீங்க பொறந்ததால இந்த தமிழ் மண்ணுக்கே பெருமைங்க... தயவு செஞ்சு கூடிய சீக்கிரம் நம்ம ஊருக்கு வந்துருங்க... தமிழ் நாட்டுக்கு உங்க சேவை கண்டிப்பாத் தேவை...

வ.முடி: நிஜமாத்தான் சொல்லுறீங்களா... (இல்ல.. பயபுள்ள சும்மா போட்டுப் பாக்குதோ ...)

நண்: அடிங்...ங்கொய்யால... ஏண்டா நாயே.. கக்கூஸ்-ல உக்காந்து கவிதை எழுதுற பழ்க்கம் இன்னும் உன்னை விட்டு போகலியா... பொண்டாட்டிக்கு லெட்டர் எழுதினா நேர்ல குடுக்கணும்... பயமா இருந்தா அவுங்க பாக்குற எடத்துல வச்சிட்டு பம்மிரனும்... அதுவும் முடியலன்னா தபால் ஆபீஸ்-ல பொட்டில போடணும்.... இதுல எதுவும் பண்ணாம, ப்ளாக்-ல போட்டு படிக்கரவன எல்லாம் பயித்தியக்காரன் ஆக்குனதும் இல்லாம, சும்மா போன என்னை வலியக் கூப்பிட்டு படிக்கச் சொல்லி பின்னூட்டம் வேற கேக்குறியா...

வ.முடி: ஹலோ... என்னங்க வார்த்தை நீளுது... கொஞ்சம் பாத்து பேசுங்க..

நண்: பாத்து பேசுரதுனாலதாண்டா இப்படி.. இல்லைனா நாறிடும்.. சின்னை புள்ளத் தனமா ஒரு வேலை பண்ணிட்டு பேசுது பாரு பேச்சு... நாயே நாயே.. என்னை பாத்து ஏண்டா இப்படி ஒரு கவிதைய படிக்க சொன்ன.... உனக்கு நான் என்னடா பாவம் பண்ணேன்...

வ.முடி: (உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... யப்பா.. இப்பவே கண்ணைக் கட்டுதே. நல்லவேளை.. கவிதைக்கு பதிலா நாம எழுதுன கதையக் குடுத்திருந்தா சிக்கி சீனாகிருப்பேன்... எஸ்கேப்புடா...)

நண்: டேய் டேய்.. என்னடா சைலெண்டா இருக்க.. ஏதாவது பேசுடா... வேலைக்கு கூட போக விடாம பண்ணிட்டு இப்ப என்னடா அமைதியா இருக்க... டேய்..
வணங்காமுடி is offline now... and will receive your messages next time when signing in...

Wednesday, September 23, 2009

வேட்டைக்காரன்

ரொம்ப நாளாச்சு கடைப் பக்கம் ஒதுங்கி... எத்தனையோ ஆணிகள்... பிடுங்க நாள் ஆகிவிட்டதே இந்த இடைவெளிக்கு காரணம் (யாராவது உன்னை கேட்டாங்களா?). இரண்டு வாரங்களுக்கு முன்பு இங்கே தமிழ் சங்க விழாவில் நடந்த கவியரங்கத்தில் நான் வாசித்த கவிதையை போன பதிவில் வெளியிட்டு (திரு.என்.விநாயக முருகனின் கவிதை அது), என்னுடைய இரண்டாவது இன்னிங்சை (இரண்டாவதா? மூன்றாவதா? அடிக்கடி காணமப் போறவனுக்கு அதுல கணக்கு வேற....!) வெற்றிகரமாக ஆரம்பித்திருக்கிறேன். உங்கள் அனைவருடைய ஆதரவையும் வழக்கம் போல அள்ளி அள்ளி வீசுவீர்கள்... சாரி.... வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.

சரி... இந்த மேட்டருக்கும், பதிவோட தலைப்புக்கும் ஏன்னா சம்மந்தம்னு யோசிக்கிறீங்களா? ரொம்ப நாள் இடைவெளி ஆனதால டச் விட்டு போச்சு இல்ல.... என்ன பதிவு போடறதுன்னு தெரியல...(இல்லன்னாலும் அப்படியே அருவி மாதிரி விஷயமா கொட்டும்... எதுக்குடா இந்த விளம்பரம்....) அதான் வேட்டைக்காரனா மாறி (விஜய் இல்லீங்...) பதிவுக்கு மேட்டர் தேடி வேட்டை ஆடிட்டு இருக்கேன் (மனசுக்குள்ள தாங்க) ஹி..ஹி..

Monday, June 8, 2009

வணங்காமுடி - பெயர்க் காரணம்


எத்தனையோ கவித்துவமான பெயர்கள் இருக்கும்போது ஏன் இப்படி ஒரு பெயர்? அது என்ன முடிமட்டும் என்று வலைப்பூ முகவரி? என்று செல் பேசியில் அழைத்தும், மெயில் அனுப்பிக் குவித்தும், நேரிலும் என்னைக் கேட்ட கோடிக்கணக்கான (!?) மக்களுக்கு பதில் சொல்லவே இந்தப் பதிவு. (கோடிக்கணக்குல இல்ல, ஆனா லட்சக்கணக்கான அதாவது ஒரு ஆயிரக் கணக்கான, பத்து இருவது - சரிங்க உண்மையச் சொல்லிர்றேன், ஒரே ஒரு ஆள் தான் கேட்டார்)


நான் இங்கே ருவாண்டாவுக்கு வந்த புதிதில், ஒரு சனிக் கிமை இரவு விசிஆரில் "அலாவுதீன்" என்ற அற்புதக் காவியத்தைக் கண்டு களித்துக் கொண்டிருந்தோம். புதிதாக வந்திருந்தாலும், இங்கு இருந்த எல்லோரையும் சகட்டு மேனிக்கு கலாய்த்து அவர்களின் வயிற்றெரிச்சலை நான் கொட்டிக் கொண்டிருந்த நேரம் அது... நம்ம சகாக்கள் எல்லாம் கலந்து பேசி என்னை கவுக்க சமயம் பாத்துகிட்டே இருந்திருப்பாங்க போல. இந்தக் கொலவெறி தெரியாம சிங்கம் படத்துல மூழ்கி இருந்துச்சு. (யாரு அந்த அசிங்கம்னு கேக்கக் கூடாது, தெரியும்ல! ).


அப்பப் பாத்து படத்துல ஒரு அற்புதமான சீன். சனங்க எல்லாம் ரெண்டாவது ஆட்டம் சினிமா பாத்துட்டு வந்துக்கிட்டு இருக்கும், வழியில ஒரு குழ்ந்தை அழுவுற குரல் கேட்டுப் பாத்தா, அட நம்ம பிரபுதேவா, குழந்தையா கையை காலை ஆட்டி குப்பைத் தொட்டிக்குள்ள டான்ஸ் ஆடிக்கிட்டு இருப்பாரு. குழந்தய தூக்கி ஒரு பெருசு டயலாக் பேசிட்டு, சரி இந்தக் குழந்தைக்கு என்ன பேரு வக்கலாம்னு கேக்கும் போது, பசி சத்யா படக்குன்னு சொல்லுவாங்க "வணங்காமுடி" னு. இப்படி ஒரு டப்பா படத்தை வாங்கிட்டு வந்து உசுர வாங்குரானேனு வெந்து வெக்ஸ் ஆயி நொந்து நூடுல்ஸ் ஆகி இருந்த நம்ம மக்கள் எல்லாம் இந்த பேரை கேட்டவுடன, அப்படியே ஆகாசத்துல பறந்தாங்க. உடனே நமக்கு பேர் சூட்டு விழா இனிமையா நடந்து முடிஞ்சு போச்சு.


அவங்களை சொல்லி குத்தம் இல்லை. நமக்கு முடி அப்படி. கம்பி மாதிரி செம ஸ்ட்ராங். கரண்டு கம்பிக்கு பதிலா என் முடிய யூஸ் பண்ணா கவர்மெண்டுக்கு செலவும் மிச்சம், கடத்தலும் ஜாஸ்தி நடக்கும் (கரண்டை சொன்னேன்). காலைல சீவிட்டு ஆபிஸ் கிளம்புனா, ராத்திரி வந்து படுக்குற வரைக்கும், வால்டர் வெற்றிவேல் சத்தியராஜ் மாதிரியே வெறைப்பா (இங்கயும் முடியப்பத்திதாம்பா சொல்றேன்) நிக்கும். வணங்காமுடி-னு பேரு வச்சிட்டு கொஞ்ச நாள் கூப்பிட்டு கூப்பிட்டு குஷியாகிட்டு நம்ம மக்கள் மறந்துட்டாய்ங்க. ஆனா பாசக் கார பயபுள்ள நான் மறக்கல. அதான் நம்ம வலைப்பூவுக்கு இந்தப் பேரு (இப்ப சந்தோசமா ஐயா)


அதென்ன முடிமட்டும்? அதாவது.... என்னோட முடிமட்டும் தான் வணங்காமுடி.. என்னோட கேரக்டர் அப்படி இல்லைன்னு சொல்லத்தான் இந்த அட்ரஸ்... சரியா... இனிமேலாவது நிம்மதியா தூக்கம் வரும்னு நம்புறேன்... (இனிமே கேப்பியா, கேப்பியா...)


"வணங்காமுடி - என்ன ஒரு கம்பீரமான பெயர்" என்று பாராட்டிய அண்ணன் எம்.பி.உதயசூரியன் அவர்களுக்கு இந்த இடத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். (எம்.பி.உதயசூரியன் - சுடச்சுட சிரிக்க வைத்துக் கொண்டிருப்பவர்.....சூரியனுக்கே டார்ச்சா? நாம லிங்க் குடுத்து தான் தெரியனும்னு இல்ல.... இந்த லிங்க், இது வரைக்கும் தெரியாதவங்களுக்கு.... )...


இந்தப் பேருல நம்ம நடிகர் திலகம் நடிச்ச ஒரு படம் இருக்குன்னு தெரியும். அடுத்த முறை இந்தியா போகும் போது சிடி வாங்கணும்.


(டிஸ்கி: மேல உள்ள ரஜினி படத்துக்கும், இந்தப் பதிவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அப்புறம் எதுக்கு இந்த படம்னு கேக்குறீங்களா.... தெரியுமே, கேக்க மாட்டிங்களே .....கேட்டா.... மறுபடியும் அதுக்கு ஒரு பதிவு போட்டுட மாட்டேன்?)

Sunday, June 7, 2009

மசால் வடையும், முதல் கதையும்..... !



அவளா அது? என்னால் நம்பவே முடியவில்லை. கண்கள் இடுங்கி, உடல் இளைத்து, முடி எல்லாம் கொட்டிப் போய்..........


"நரை கூடிக் கிழப் பருவமெய்தி....." மேடையில் பாடி பரிசு வாங்கிய என் ரம்யாவா அவள்? பத்து வருட மண வாழ்க்கை ஒரு அழகியை இப்படியா சீர்குலைத்துவிடும்......................?


யோசித்துக் கொண்டே எதிரே வந்த ஐஸ் வண்டியைக் கவனிக்காமல்...... சட்...... "யோவ், பாத்து போய்யா, கூட்டமாப் பொண்ணுங்களப் பாத்தா உங்களுக்கெல்லாம் கண்ணு தெரியாதில்ல?"

அவனை அலட்சியப் படுத்திவிட்டு அவளை மீண்டும் பார்த்தேன். அட.... இங்கே தானே நின்று கொண்டிருந்தாள்? ஒரு வேளை அது அவள் இல்லையோ? ச்சே, ச்சே.... அது அவள் தான்.... என்ன தான் தோற்றம் மாறிவிட்டாலும் அந்த தெத்துப் பல் அது அவள் தான் என்று காட்டிக் கொடுத்ததே.... எங்கே போயிருப்பாள்.... ம்ஹூம்.....

"க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" இடையில் இந்த செல் போன் சனியன் வேறு.... எடுத்தால் மறுமுனையில்..... ஐஸ்வர்யா ராய்..................!!!!"


சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தேன்... நெட்டி முறித்து நீண்ட பெருமூச்சை விட்டேன்.... கதை எழுதுவது இவ்வளவு கஷ்டமா.? செந்தில் கணேஷ் சொன்னது சரிதான்..... எனக்கெல்லாம் கதை எழுத வராது போலிருக்கிறது... மூக்கைத் துளைக்கும் வாசனையால் கவரப் பட்டு, கவனம் கலைந்தேன். எதிரே டேபிளின் மேல் சற்று முன் மாதவி வைத்து விட்டு போன மசால் வடை, ஆவி பறக்க சுண்டி இழுத்தது.

கதை எழுதிய பேப்பரை அப்படியே மடித்து வடையை சரியாக நடுவில் வைத்து மறுபடியும் ஒரு மடிப்பில் அப்படியே நசுக்கி, எடுத்து ஒரு விள்ளல் வாயில் போட்டு மென்று கொண்டே ஆவி பறக்கும் காப்பியை உறிஞ்சினேன். கூடவே ஒரு வில்ஸ் பில்டர் இருந்தால் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் வீட்டில் சிகரெட் பற்ற வைத்தால் வேறு ஏதாவது பற்றிக் கொள்ளும் அபாயம் இருப்பதால் அந்த நினைப்பை உடனே உதறினேன்.


வடை ஆசை முடிந்ததும், கதை ஆசை லேசாகத் தலை தூக்கியது. எழுதிப் பார்க்கலாமா? இது வரை எழுதிய பேப்பரை பார்த்தேன். அடடா, கதை போச்சே....

சரி வேறு ஒரு பேப்பரை எடுப்போம். யோசிக்கும் போதே உள்ளே இருந்து ஒரு குரல்..... "டேய் எவ்வளவு நேரமா கத்துறேன் - பால் வேணும், சக்கரை வேற தீந்து போச்சு, வாங்கிட்டு வானு? என்னடா பண்ணுற?" என் பிரிய சகியின் குரல் தான்... அன்பு மிகுந்தால் "டேய்"...

"அது ஒன்னும் இல்லம்மா, ஒரு கதை எழுதிப் பாக்கலாம்னு......"


"உன்னை நம்பி வந்த என்னோட கதையே இங்க சிரிப்பா சிரிக்குது.. இதுல நீ வேறயா? போடா.... போயி பால வாங்கிட்டு வா... வந்தா மத்தியானம் சாப்பாடு... இல்லன்ன்னா கொலப்பட்டினி போட்டுருவேன்..."

காப்பியை ஒரே உறிஞ்சலில் முடித்துவிட்டு சரேலென்று எழுந்தேன் - வடை மடித்த கதை பேப்பரை கசக்கிக் கொண்டே.....