Showing posts with label வ(எ)ண்ணச்சிதறல்கள். Show all posts
Showing posts with label வ(எ)ண்ணச்சிதறல்கள். Show all posts

Wednesday, September 30, 2009

வ(எ)ண்ணச்சிதறல்கள்

ஆதி தாமிராவின் "குருவி விமர்சனம் - மீள் பதிவைப்" படித்து குலுங்கி குலுங்கி சிரித்ததில் ஒண்ணே கால் கிலோ எடை குறைந்து விட்டது. மனிதர், இருநூற்று ஐம்பது பதிவுகள் கடந்து வெற்றி நடை போடும் ரகசியம் தெளிவாய்ப் புரிந்தது. இவருடைய "7.10pm மூன்றாவது பிளாக்" கதை, இவர் எழுதிய அனைத்திலும் ஆகச் சிறந்ததென்பது எனது எண்ணம். படிக்காதவர்கள், இங்கே படித்து விடுங்கள். கொசுறுத் தகவல் : புகைப்படம் எடுப்பதிலும், குறும்படத்திலும் தாமிரா அலையஸ் ஆதி, ஒரு கில்லாடிக் கிட்டு. ****************************************************************************************
இரண்டு நாட்களுக்கு முன்பு படித்த ஒரு செய்தி, ஒரு இன்ப அதிர்ச்சி தந்து விட்டது. ஜம்மு காஷ்மீரில் ஒரு வீட்டில் துப்பாக்கிகளோடு நுழைந்து இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்ல முயன்ற தீவிரவாதிகளில் ஒருவனது துப்பாக்கியைப் பறித்து அனைவரையும் சுட்டு விரட்டி விட்டாள் அந்த வீரப் பெண். இதைப் படித்தாவது, பெண்களிடம் ரவுசு செய்யும் கூட்டம் திருந்துமா? தோசை மட்டும் தான் சுடுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் பலருக்கு அதிர்ச்சியில் அட்டாக் வந்திருக்கும் இதைக் கேள்விப் பட்டு. சபாஷ். ****************************************************************************************
உன்னைப் போல் ஒருவன் - கிட்டத் தட்ட வலைப்பூ எழுதும் அத்தனை பேரும் கிழித்துத் தோரணம் கட்டித் தொங்கப் போட்டு விட்டார்கள். பாராட்டி எழுதியவர்கள்தான் அதிகம் என்றாலும், திட்டமிட்டு ஒரு கூட்டம், இந்தப் படத்திற்கு பார்ப்பன சாயம் பூசுவது முகம் சுளிக்க வைக்கிறது. காமன் மேன் - ஒரு சாதரண மனிதன் தீவிர வாதத்துக்கு எதிராய் வெகுண்டெழுந்தால் என்ன நடக்கும்? ஒன்றும் நடக்காது - அவனை காயடித்து கசக்கிப் போட்டு விடுவார்கள் நடைமுறை யதார்த்தத்தில். ஆனால் அவனை ஒரு சூப்பர் மேன் ரேஞ்சுக்கு காட்டியிருக்கும் ஒரு குறையத் தவிர, படத்தில் வேறு எந்தக் குறையும் தெரியவில்லை. பெரும்பாலானோர் சொன்னது போல், உ போ ஒ - வை விட, புதன் கிழமை அற்புதம்.
****************************************************************************************
இங்கிருந்து ஊருக்கு விடுப்பில் சென்று திரும்பிய ஒரு நண்பரின் மூன்று வயது மகளைப் பார்த்துக் கேட்டேன் - "மொட்டை எங்கம்மா அடிச்சாங்க?" பளிச்சென்று பதில் வந்தது, "தலைல தான் அங்கிள், வேற எங்க அடிப்பாங்க (அம்மா, இந்த அங்கிளுக்கு மொட்டை எங்க அடிப்பாங்கன்னே தெரியல, பாரேன்).
சிறுவர்களின் சமயோசிதம் வளர்ந்து கொண்டே போகிறது, அவர்களை ஒன்றும் புரியாதவர்களாய் நாம் நினைத்துக் கொள்வது தான் நகைச்சுவை.

*****************************************************************************************
ஏற்கெனெவே மதுர, கில்லி, பகவதி, வில்லு, ஆதி, குருவி என்று விஜய் நடித்த அத்தனை படங்களும் ஆயிரம் முறைகளுக்கு மேல் ஓடியாகி விட்டது - எங்கள் வீட்டு ப்ளேயரில். இப்போது, "நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மட்ட, மோதிப் பாரு வீடு போயி சேர மாட்ட" ஒலிக்க ஆரம்பித்து இருக்கிறது, மனைவியின் மொபைல் போனில். சனி, ஞாயிறு வந்தாலே குலை நடுங்குகிறது "வேட்டைக்காரன்" பாடல்களைக் கேட்டு கேட்டு.  

மனைவி மொபைல் என்றதும் அவர் தான் விஜய் ரசிகரோ என்று நினைத்து விட்ட அப்பாவிகளுக்கு - விஜயின் தீவிர வெறியன் என்னுடைய நாலரை வயது பையன். என்ன கொடுமை சார் இது.


போடு அடியப் போடு... போடு அடியப் போடு... ஹே...  
டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கருனா..
****************************************************************************************
ரசித்த தத்துவம்


காதல்ங்கறது விஜய் படம் மாதிரி, பாக்காதவன் பாக்கத் துடிப்பான், பாத்தவன் சாகத் துடிப்பான்.
****************************************************************************************


எழுதியவனுக்கு
நன்றி கூறாமல்
வாசித்து முடித்தான்


பலத்த
கைத்தட்டல்களின்
முடிவில்

அவன் மனதை
உறுத்த ஆரம்பித்திருந்தது...
கவிதை

-செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி http://cliffnabird.blogspot.com

*****************************************************************

Sunday, June 14, 2009

வ(எ)ண்ணச்சிதறல்கள்


"பசங்க" ளைப் பார்த்தேன். அட்டகாசம் என்று ஒரு வார்த்தையில் சொல்லி விட்டுப் போய் விட முடியாது. (அய்யய்யோ, இன்னொரு பதிவா- னு கேக்காதீங்க ப்ளீஸ்....என்னா கொல வெறி?). படத்தின் இயக்குனர் பாண்டிராஜ், ஆரம்பத்தில் ஏ.வி.எம் ஸ்டுடியோவில் வாட்ச்மேன் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் என்று அறிந்ததும் நெகிழ்ந்தேன். திரைத்துறை என்று மட்டும் இல்லாமல், எல்லா துறைகளிலும் இது போன்ற திறமைசாலிகள் அடிமட்டத்தில் இருந்து முன்னுக்கு வருவது ஆரோக்கியமான விஷயம். மன உணர்வுகளுடன் விளையாடும் ஒரு நல்ல படத்தை, முடிந்த வரை குறைகளின்றி கொடுத்ததற்கு இயக்குனர் பாண்டிராஜ் - க்கு நன்றி சொல்லலாம்.

*************************************************************************************************

கிரிக்கெட் உலக பிரபலம் பிரையன் லாரா (வெஸ்ட் இண்டீஸ் லாராவே தான்) சென்ற வாரம் ருவாண்டா வந்திருந்தார். செக்யுரிட்டி கெடுபிடிகளால் நேரில் பார்க்க முடியாவிட்டாலும், தெரிந்தவர்கள், லாராவுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் பேப்பரிலும் அவர்களின் கேமராவிலும் பார்த்து குஷியானேன். லாரா வந்து இறங்கியவுடன் அவரை இங்குள்ள "Genocide Memorial" -க்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். சென்று வந்ததும் அவர் சொன்ன விஷயம் ஹைலைட் - இங்கே ஏப்ரல் 1994 - ல், இனப் படுகொலை நடந்து கொண்டிருந்த போது, அவர் "பர்ஸ்ட் க்ளாஸ் கிரிக்கெட்டில்" அதிக பட்ச ஹை ஸ்கோரான 501 ரன்களைக் குவித்துக் கொண்டிருந்தாராம். "உலகம் கேளிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது இங்கே பேரழிவு நடந்து கொண்டிருந்திருக்கிறது" என்று வருத்தப் பட்டிருக்கிறார். இலங்கையில் நடக்கும் கொடுமைக்கும், இங்கு நடந்த படுகொலைகளுக்கும் நிறைய ஒற்றுமைகள். தனிப் பதிவாகப் போட உத்தேசம்.

************************************************************************************************************

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அதன் எளிமையான பயன்பாட்டுக்கு பெயர் பெற்றது அனைவருக்கும் தெரியும். பலருக்கும் தெரியாத ஒரு சின்ன விஷயம். CON என்ற பெயரில் உங்களால் ஒரு போல்டரை கிரியேட் செய்யவே முடியாது. ஒரு New Folder கிரியேட் செய்து CON என்று Rename செய்யவும் முடியாது. முயன்று பாருங்கள். மைக்ரோ சாப்ட் எவ்வளவு முயன்றும் காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லையாம்.

**********************************************************************************************************

எல்.கே.ஜி படிக்கும் என் பையன் (நாலரை வயது) என்னைக் கேட்டான். "இந்த ஊருல எல்லாரும் ஏன் கருப்பா, அசிங்கமாவே இருக்காங்க?" பூமத்திய ரேகை, நில அமைப்பு, இன வித்தியாசம் என்றெல்லாம் சொல்லி அவனுக்குப் புரிய வைக்க முடியாதென்பதால் இப்போதைக்கு "கருப்பா இருந்தாலும் அவுங்க எல்லாம் good boys, good girls தாண்டா" என்று சொல்லி வைத்திருக்கிறேன். கருப்பு என்பது அசிங்கம் என்ற விஷ விதை இத்தனை சின்ன வயதில் எப்படி, யாரால் ஊன்றப்பட்டதென்று தெரியவில்லை. வளர வளர, இந்த எண்ணம் மாறும் என நம்புகிறேன்.
********************************************************************************************************

விழுங்கி விட்ட
புகையை
சில கணங்கள்
நிறுத்திவைத்து
சுமந்து நின்றேன்...
என்னைக் கடந்து கொண்டிருந்தாள்
வயிற்றுள்
குழந்தையோடு

***************************************************************************************

Friday, June 5, 2009

வ(எ)ண்ணச்சிதறல்கள்

வலைப்பூவின் ஜாம்பவான்கள் எல்லாரும் மிக்ஸிங் பதிவுகள் போட்டு வருவது நீங்கள் அறிந்ததே. காக்டெயில் என்று கார்க்கியும், அவியல் என்று பரிசலும், மிக்ஸ்டு ஊறுகாய் என்று ஆதிமூல கிருஷ்ணனும், இன்னும் பலப் பல பெயர்களில் பல மூத்த பதிவர்களும் பதிவிட்டு வருகிறார்கள். பெரியவர்கள் செய்யும் செயல்களைப் பார்த்து குழந்தைகள் தாங்களும் அவ்வாறே முயற்சி செய்யும் இல்லையா? அது போன்ற ஒரு முயற்சி தான் இந்த வ(எ)ண்ணச்சிதறல்கள். இனி அடிக்கடி பார்க்கலாம் எனது எண்ணச் சிதறல்களை - வண்ணச்சிதறல்களாய்.
**************************************************************************

ஆரம்பித்து விட்டது டுவென்டி டுவென்டி உலகக் கோப்பை. அடிக்கடி பார்ப்பதால் சுவாரஸ்யம் குறைந்து விடுவதற்கான சாத்தியங்கள் அதிகம். சென்ற ஐபிஎல் போட்டிகளே, ஏதோ முடிவு தெரிந்து விட்ட ஒரு பக்க கதை போல தான் இருந்தன. யாரும் எதிர் பார்க்காத இரண்டு சொத்தை அணிகள் பைனலுக்கு வந்தால் யாருக்கு லாபம்? புக்கிகளுக்கு பணம் கொழிக்கும் வரம் இந்த டுவென்டி டுவென்டி. பார்க்கும் நமக்கு? - பெரிய பட்டை நாமம்.

**************************************************************************
மிகப் பாதுகாப்பான விமான சேவை அளிப்பதாக நம்பப் பட்டு வந்த ஏர் பிரான்ஸ் - ன் விமானம் பிரேசிலில் இருந்து பாரிஸ் வரும் போது காணாமல் போயிருக்கிறது - 228 பயணிகளுடன். இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை என்பது பெரும் சோகம். ஏர் பிரான்சின் விமானத்துக்கே இந்த கதி என்றால், அற்புத சேவை தரும் ஆப்பிரிக்க விமானங்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். அடுத்த முறை ஊருக்குப் போவதற்கு டிக்கெட் எடுக்கும் போது இது நினைவுக்கு வந்து தொலைக்காமல் இருக்க வேண்டும் என்று வாழைப்பாடி தண்டு மாரியம்மனை வேண்டிக் கொள்கிறேன்.
**************************************************************************

உலகப் புகை ஒழிப்பு தினம் சென்ற வாரம் கொண்டாடப் பட்டது. அன்றைய தினமே விட்டு விட வேண்டும் என்று முடிவு செய்திருந்தும், முடியாமல் போய் விட்டது. இருந்தாலும் இன்றோடு டாட்டா பைபை சொல்லி மூட்டை கட்டியாகி விட்டது, புகை, இனி எனக்குப் பகை. இதைப் படிக்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் - நீங்கள் புகைப்பவர் என்றால் சிறிது நேரம் செலவு செய்து ஒரு சின்ன கணக்கு போட்டு பாருங்கள். ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட், ஒரு மாதம் எத்தனை, ஒரு வருடம் எத்தனை, அதற்கான செலவைப் பார்த்தால் உங்கள் மனம் மாறக் கூடும்.

**************************************************************************

மொபைல் போன் பற்றிய புது செய்தி ஒன்றை அறிய நேர்ந்தது. பாட்டரி பவர் மிகக் குறைவாக இருந்து, சார்ஜரும் உங்கள் வசம் இல்லாதிருந்தால் *3370# டயல் செய்து ok அழுத்தினால் போதுமாம். ரிசர்வில் இருக்கும் பவர் எடுக்கப் பட்டு பாட்டரி லெவல் பாதியாகக் கூடி விடுமாம். இன்னும் முயற்சி செய்து பார்க்கவில்லை. யாராவது ரிஸ்க் எடுத்து ட்ரை பண்ணிப் பார்த்து தகவல் சொன்னால் நல்லது.

**************************************************************************

சென்ற மாதம் ஊருக்குப் போய் விட்டு வந்த தம்பியின் புண்ணியத்தில் முப்பது புதிய புத்தகங்கள் வாங்க முடிந்தது. பல வருடக் கனவு பலித்தது. எவ்வளவு ஆசையோடு ஆற்று நீரை அள்ளி அள்ளிக் குடித்தாலும் வயிறு நிரம்பும் வரை தான் குடிக்க முடியும் என்பதைப் போல, புதுப் புத்தகவாசத்தை முகர்ந்து பார்ப்பதிலேயே மனசு நிறைந்து விடுகிறது. படிக்கத்தான் நேரம் இல்லை. வாத்தியார் சாருவின் ராசலீலாவும் நான் படிப்பதற்காக அலமாரியில் காத்திருக்கிறது. சீக்கிரம் படிக்க வேண்டும்.
**************************************************************************

ஒரு கேள்வி : First of first is first in me, middle of you is double in me, first of last is last in me, who am I?


விடையைக் கண்டு பிடித்தவர்களுக்கு : என்னை அறிந்து கொண்டதற்கு நன்றி.

**************************************************************************

ஆசிரியர்: முட்டாள்! உன் வயசுலே பில் கேட்ஸ் ஸ்கூல் பர்ஸ்ட்டா இருந்தார் தெரியுமா?

மாணவன்: சார்! உங்க வயசுலே ஹிட்லர் தற்கொலை பண்ணிக்கிட்டார் தெரியுமா?

**************************************************************************

மிக்ஸிங் பதிவு கவிதையோடு முடிய வேண்டுமாம். இதோ நான் ரசித்தது...


அசிங்கமாய் தான் பட்டிருக்கும்
அவளுக்கு என் பார்வை

உணர்ந்து பார்த்த என் விழிகளை
உற்று நோக்கி விட்டாள்

பயணம் நீடித்த பல மணி நேரமும்
பார்த்து கொண்டேதானிருந்தேன்

வேறெங்கும் இடமிருந்திருப்பின்
மாறி அமர்ந்திருக்கக் கூடுமவள்

பொறுக்கி என்றவள் நினைத்தது
பொருத்தமாய்த தான் இருந்திருக்கும் அவ்வேளையில்;


இறுதி வரை சொல்லவில்லை
இறந்த என் தங்கையின் பிரதி அவளென்று

-----செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி


**************************************************************************