நேற்று முன்தினம் தீபாவளி. ஊரில் இருந்திருந்தால் கோலாகலமாக கொண்டாடிஇருக்கலாம். இங்கே என்ன செய்ய முடியும். இனிப்புகள் பரிமாறிக்கொள்ளும்ஒரு வாய்ப்பாகவே ஒவ்வொரு தீபாவளியும் கடந்து போகிறது. அதே போலசம்பிரதாயமான வாழ்த்தும்.
அப்படி நினைத்துக்கொண்டுதான் ஒரு வாழ்த்தை இ-மெயிலில் நண்பர்களுக்கெல்லாம் அனுப்பி வைத்தேன். "தீப ஒளி அறியாமை இருளை அகற்றி நம் வாழ்வை வளப்படுத்தட்டும்" இதுதான் அதன் சாரம்.இந்தசம்பிரதாயமான வார்த்தைகளுக்கு ஒரு தீவிரமான எதிர்வினையை சத்தியமாகநான் எதிர்பார்க்கவில்லை.
நண்பர் ஒருவர் உடனே பதில் கொடுத்திருந்தார். பதில் வாழ்த்தை எதிர்பார்த்துஅசுவாரசியத்துடன் மெயிலை திறந்த எனக்கு காத்திருந்தது ஓலை வெடி. நண்பர் தன்னை நாத்திகன் என்றும், இது போன்ற வாழ்த்துக்களை தனக்கு அனுப்பவேண்டாம் என்றும் குறிப்பிட்டு அதற்கெல்லாம் உச்சமாக தீபாவளியே ஒருஅறியாமை தான் என்றும் சுட்டியிருந்தார். நிறைய யோசிக்க வைத்துவிட்டதுஇந்த எதிர்வினை.
தீபாவளிக்கென்று நான் விபூதி, குங்குமம் ஒன்றும் அனுப்பி வைத்து விடவில்லை. கடவுள் பூமிக்கு வருகிறார் என்று பிரசங்கமும் செய்யவில்லை. அட... அதெல்லாம் போகட்டும். இந்த வாழ்த்தை பத்து பேருக்கு உடனே அனுப்பாத, தீபாவளியை நம்பாத நாத்திகர் யாவரும் நாசமாய்ப் போவார்கள் என்று சாபம் கூட இடவில்லை. அனுப்பியது ஒரு வாழ்த்து. நல்லா இருங்க என்று வாழ்த்த ஆன்மிக சக்தி தேவை இல்லை. மனம் இருந்தால் போதும்.
என் பரம விரோதி என்று நான் கருதும் ஒருவர் எதிரில் வந்து எதாவது வாழ்த்தும் விதமாக முகமன் கூறினால், அது நான் உடன்படாத ஒரு விஷயம் என்றாலும், என்னை அறியாமல் அதை ஏற்கும் விதமாக புன்னகை என் முகத்தில் அரும்பிவிடுவதை இப்போது எண்ணிப்பார்க்கிறேன்.
மனிதனை ஆற்றுப்படுத்த தோன்றியவையே மதங்கள். குழந்தை மனம் கொள் என்று கிருஷ்ணரும், உன்னில் சிறியோனுக்கு உதவு என ஏசுவும், எந்த காரணத்திற்காகவும் வன்முறை ஏற்கப்படாது என நபி அவர்களும் வித விதமாக கூறிய எல்லாம் வலியுறுத்தும் கருத்து ஒன்றேதான்.
ஆனால் பண்பாடும் கலாச்சாரமும் முழுமையாய் ஏற்பட்டுவிட்ட சமுதாயத்தில் மதங்களின் அவசியம் இல்லாமல் போய் விடலாம்.
வாழ்த்துக்கு எதிர்வினை ஆற்றிய நண்பரின் நிலையில் நான் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்று எண்ணிப்பார்த்தேன். நேரில் சந்திக்கும்போது இதமாக அந்த வாழ்த்தை மறுத்திருப்பேன் அல்லது பேசாமல் அந்த மெயிலை டெலீட் செய்து விட்டு வேலையை பார்த்திருக்க கூடும்.
பற்பல மூட நம்பிக்கைகள் நிறைந்த, மக்களை இன்னும் பிரிவினைப்படுத்தியே வைத்திருக்கிற ஒரு மதத்தை வாழ்முறையாய் கொண்டிருக்கும் எனக்கு அடுத்தவர் மனம் எந்த விதத்திலும் புண்பட்டுவிடக் கூடாது என்ற தன்முனைப்பு இருக்கும்போது, எதையும் பகுத்து ஆராய்ந்து பின்பே ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உள்ள நாத்திகன் எப்படி இருக்க வேண்டும்?
எனக்கு தெரியவில்லை.... என் கருத்து தவறாகவும் இருக்கலாம்...... இதற்கு உங்கள் பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்.
Showing posts with label தீபாவளி வாழ்த்து. Show all posts
Showing posts with label தீபாவளி வாழ்த்து. Show all posts
Wednesday, October 29, 2008
Subscribe to:
Posts (Atom)
