Showing posts with label புத்தகங்கள். Show all posts
Showing posts with label புத்தகங்கள். Show all posts

Sunday, September 27, 2009

கடவுள் இருக்கிறாரா?

மில்லியன் டாலர் கேள்வி. இந்த உலகம் தோன்றியது முதல் இன்று வரை கோடானு கோடி முறை கேட்டு கேட்டு சலிக்காத கேள்வி. கேட்டவர் எவருக்கும் சரியான விடை கிடைக்காத கேள்வி. அல்லது, அவர்கட்கு கிடைத்த விடை மற்ற எவர்க்கும் புரியாத கேள்வி.. இந்தக் கேள்விக்கு விடை காண முயன்றிருக்கிறார் சுஜாதா, தனது "கடவுள் இருக்கிறாரா" புத்தகத்தில்...

"என்னிடம் அடிக்கடி கேட்கப் படும் ஒரு கேள்வி.. கடவுள் இருக்கிறாரா? இல்லையா? இருக்கிறார் என்றால் அவரைப் பார்க்க முடியுமா? இதற்கு பைனரியாக பதில் சொல்ல இயலாத நிலையில், இந்தக் கேள்விக்கு அறிவியல் என்ன சொல்கிறது என்பதை உங்களுடன் சிந்தித்துப் பார்க்க விரும்புகிறேன்."

என்று அக்மார்க் சுஜாதா முத்திரையுடன் (பைனரியாக பதில் சொல்ல இயலாத நிலை... ) துவங்கும் இந்தப் புத்தகம் கொஞ்சமும் குறையாத சுவாரஸ்யத்துடனும், குழப்பமான அறிவியல் சித்தாந்தங்கள் கடைக் கோடி வாசகனுக்கும் புரியும் எளிமையுடனும் இருப்பது "சுஜாதா ஸ்பெஷல்" சிறப்பு...


கடவுளைத் தெரிந்து கொள்ள முதலில் நாம் அவர் படைத்த (?) இந்தப் பிரபஞ்சத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு எறும்பு நடப்பது எவ்வளவு சிக்கலான சூத்திரங்களால் ஆனதோ, அதற்கு நேர் எதிர் எளிமையானது பிரபஞ்சம் என்ற மாபெரும் அமைப்பு வேலை செய்யும் விதம்.

இரண்டே விஷயங்களால் ஆனது தான் இந்தப் பிரபஞ்சம்.

1. திடப் பொருள், சக்தி என்ற இரண்டு விஷயங்களால் ஆனது தான் இந்த மொத்தப் பிரபஞ்சமும்.... அந்த இரண்டுமே ஒன்றுதான் என்பதை நிரூபிக்க விஞ்ஞானிகள் பட்ட அவஸ்தையை சொல்லியிருக்கிறார் சுஜாதா.
2. ஆரம்ப விதிகள் எனப்படும் பௌதீக விதிகள். இவற்றை விளக்கி விட்டால் பின் அடுத்த நிலை, அதன் பிறகான நிலை என்று, இன்று வரை சொல்லி விட முடியும்.. இந்த ஆரம்ப விதிகளையும், நிலையையும் உன்னிப்பாக உற்று நோக்கும்போது அவைகளில் ஒரு தேர்ந்தெடுப்பும், ஒரு ஒழுங்கும் இருப்பதைக் குறிப்பிட்டு வியக்கும் போது, எப்படி இந்த ராணுவ ஒழுங்கு? கடவுள் தான் காரணமோ என்று வாசனைக் கேட்டுவிட்டு, அடுத்த வரியிலேயே அதை நேர்த்தியாக மறுக்கவும் செய்கிறார்.

அன்த்ராபிக் தத்துவம், எக்ஸ்டென்டெட் சூப்பர் கிராவிட்டி, க்ராவிட்டான், குளுவான், சூப்பர் ஸ்டிரிங், ப்லான்க் எனர்ஜி என்று பல புரியாத வார்த்தைகளை தோரணம் கட்டித் தொங்க விட்டாலும், எப்படியோ "டு தி கோர்" மேட்டருக்கு வந்து விடுகிறார் தன திறமையான எழுத்து நடை மூலம்....

பிரபஞ்ச ஆரம்பத்தின் மகா வெடி பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். பதினைந்து பில்லியன் ஒளி வருடங்களுக்கு முன்னாள் வெடித்த அந்த பிக் பேங்கின் (Big Bang) உஷ்ணம் இன்னும் பிரபஞ்சம் முழுதும் லேசாக விரவி இருக்கிறதாம். அதன் வழியாகத் தான் வயதைக் கணிக்க முடிந்ததாம். இது போல கற்பனை செய்து பார்க்க முடியாத எண்ணற்ற விஷயங்கள் புத்தகம் முழும் பரவிக் கிடக்கின்றன. சுஜாதாவே சொல்லி இருப்பது போல, இந்தப் புத்தகம் சொல்லும் விஷயங்கள் எல்லாம் ஆயிரத்தில் ஒரு பாகம் தான். விரிவாகப் படிக்க ஒரு ஆயுள் போதாது போலிருக்கிறது.

நாத்திக - ஆத்திக விவாதங்கள், பிறந்த குழந்தையின் கிளீன் சிலேட் மூளை, இருந்தாலும் அதற்கு வரும் ஸ்பெஷல் மேதமை குணங்கள், உலக அழிவைப் பற்றிய ஹேஷ்யங்கள், என்று போகும் இந்த புத்தகத்தில் ஒரே ஒரு குறை தான். வெறும் 23 பக்கங்கள் மட்டுமே. என்ன நெருக்கடியோ, யாருக்குத் தெரியும்...

அவருடைய தேவன் வருகை சிறுகதை போலவே, இந்தப் புத்தக முடிவும் இருக்கிறது. இப்படி முடிக்கிறார்....

"எனவே, கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு அறிவியலின் பதில் - "இருக்கலாம்" ஆன்மீகத்தின் பதில் - "இருக்கிறார்". என் பதில் - It depends!"

Thursday, June 18, 2009

நான் வாங்கிய புத்தகங்கள்



புத்தகங்களுடனான எனது பரிச்சயம் காமிக்ஸ்களுடன் துவங்கியது. லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ், அம்புலிமாமா எல்லாம் என் அப்பா எனக்கு அறிமுகம் செய்தவை. அதில் வந்த முகமூடி வீரர் மாயாவி, இரும்புக்கை மாயாவி, ஆர்ச்சி, மாடஸ்தி, ஜேம்ஸ் பாண்ட் எல்லாரும், தூங்கும் நேரம் தவிர என்னுடன் கூடவே எந்நேரமும் இருநதார்கள். தூக்கத்தில் கூட கனவாய் வந்தார்கள். மாயாஜாலங்களும், மந்திர தந்திரங்களும், வீர தீர சாகஸங்களும் என் பால்யத்தை நிரப்பியதால் மற்ற சிறுவர்கள் போல கோலி (எங்கள் ஊரில் பளிங்கி என்பார்கள்), பம்பரம் எதுவும் என்னைக் கவர்ந்ததே இல்லை. பிறகு மெதுவாக என் கவனம் குமுதம், ஆனந்த விகடன், கல்கண்டு, மாலைமதி, குங்குமம், என்று திரும்பியது. அதன் பிறகு பாக்கெட் நாவல்கள். என் செலவுக்கென வீட்டில் கொடுக்கும் காசெல்லாம் சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ் குமார் என்றே செலவானது. (வீட்டுக்கு தெரியக் கூடாதென்று படித்து முடித்தவுடன் தூக்கி எறிந்து விடுவேன் - இப்போது நினைத்தால் என் மீது எனக்கே ஆத்திரம் வருகிறது, ஆனால் அப்போது வேறு வழி இல்லை)

ஒரு விடுமுறையில், எங்கள் சித்தி வீட்டுக்கு சென்றிருந்த போது, சித்தப்பாவின் புத்தக அலமாரியைக் குடைந்ததில் சுஜாதாவையும் (கி பி 2000-த்துக்கு அப்பால்) பாலகுமாரனையும் (நாவல் பெயர் நினைவில்லை) கண்டெடுத்தேன். என் வாசிப்பு வயசுக்கு வந்தது அன்று முதல் தான். ஆப்பிரிக்கா வந்தபிறகு, புத்தகங்கள் எனக்கு எட்டாக் கனி ஆகி விட்டன. ஒவ்வொரு முறையும் ஊருக்கு சென்று வரும்போதும், வாங்கி வர நெஞ்சு நிறைய ஆசை இருந்தாலும், மற்ற தேவைகள் அதைச் சுருக்கி விடும். கிட்டத்தட்ட எழு வருடங்கள் கழித்து, புத்தகம் வாங்கும் என் கனவு நினைவாகி இருக்கிறது - இங்கிருந்து ஊருக்கு சென்று வந்த என் தம்பியால். நாற்பது புத்தகங்களின் பட்டியல் கொடுத்தும், இருபத்தி ஆறு மட்டுமே கிடைத்தன. (உனக்கு வாங்கிட்டு வந்து குடுக்கறதே பெரிய விஷயம், இதுல கம்மியா இருக்குன்னு குறை வேறயா?)

சுஜாதா சிறுகதைத் தொகுப்பு - பாகம் ஒன்று & இரண்டு

கனவுத் தொழிற்சாலை - சுஜாதா

21-ம் விளிம்பு - சுஜாதா

கரையெல்லாம் செண்பகப் பூ - சுஜாதா

ராஸலீலா - சாரு நிவேதிதா

வார்ஸாவில் ஒரு கடவுள் - தமிழவன்

வனவாசம், மனவாசம் - கண்ணதாசன்

உப பாண்டவம் - எஸ்.ராமகிருஷ்ணன்

தந்தையும் தனயர்களும் - துர்கனேவ்

இரவாகி விடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய் விடுவதில்லை - ஆதவன் தீட்சண்யா

என் பெயர் ராமசேஷன் - ஆதவன்

எக்சிஸ்டென்ஷியலிசமும் பேன்சி பனியனும் - சாரு நிவேதிதா

ம் - ஷோபா ஷக்தி

ஏழாம் உலகம் - ஜெயமோகன்

யாமம் - எஸ்.ராமகிருஷ்ணன்

ஒரு புளிய மரத்தின் கதை - சுந்தர ராமசாமி

தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன்

உறுபசி - எஸ்.ராமகிருஷ்ணன்

ஜே ஜே சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி

இறந்த காலம் பெற்ற உயிர் - சுந்தர ராமசாமி
ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள் - பேராசிரியர் டி.வி.ஈச்சரவாரியர் (தமிழில் குளச்சல் மு.யூசுப்)

பெண் ஏன் அடிமையானாள் - பெரியார்

அன்னை வயல் - சிங்கிஸ் ஐத்மதேவ்

நீங்களும் முதல்வராகலாம் - ரா.கி.ரங்கராஜன்