Showing posts with label கவிதை முயற்சி. Show all posts
Showing posts with label கவிதை முயற்சி. Show all posts

Saturday, July 16, 2011

என்ன வாழ்க்கைடா இது?



என்னதான் மனதில் பட்டதை பளிச்சென்று சொல்லி விடும் பழக்கம் இருந்தாலும், சிலவற்றை, சிலரிடம் நேர்ப்பேச்சில் சொல்லவே முடிவதில்லை.

என்ன? ஒண்ணும் புரியலயா? சரி விடுங்க... இதை நீங்க எல்லாரும் புரிஞ்சுக்கணும்னு  நான் எழுதலை.


I am not a privy paper
For a Use and throw... 
Don’t dare for a caper
Am not a pros, Bro..!

Never take me as a scratcher
When you itch
Am neither it,
Nor a bitch..!

All and sundry has their story
And Proud of themselves;
Talkative is not any Glory...
Stop making chums only to filch their shelves!

        By, 
        
            Sundar

பின்குறிப்பு: This is not a Verse.... rather I would call it, a missive. If this makes any sense to the person whom it is intended for, then It justifies its reason to have been written.


Thursday, October 15, 2009

கவிதைக்கு அலைபவன்

"பசி" என்று தலைப்பிட்டு
எழுதத் துவங்கினேன்
ஒரு கவிதை...


எவ்வளவு யோசித்தும்
இரண்டு வரிக்கு மேல்
நகராமல் முரண்டியது
கற்பனைக் குதிரை...


சற்றுமுன் சாப்பிட்ட
பிரியாணிக்கு பில்லை வைத்துவிட்டு
பவ்யமாய் நின்றான்
ஓட்டல் சிறுவன்...


ஏக்கப் பெருமூச்சுடன்
நின்றிருக்கும் இவனுக்கொரு
ஏழு, எட்டு வயதிருக்குமா?


சட்டென்று வந்த சந்தோஷத்தில்
தாராளமாய் டிப்ஸ் வைத்து
நகர்ந்தேன்...
"குழந்தைத் தொழிலாளி" என்று
அடுத்தொரு கவிதை எழுத...


--- சுந்தர்

Friday, October 9, 2009

ஆறுதல்

கீற்று மின்னிதழில் பிரசுரம் ஆன, என்னுடைய கவிதை. நன்றி www.keetru.com


http://www.keetru.com/index.php/home/2009-10-06-12-15-36/2009-10-06-12-18-01/736-2009-10-09-00-20-49.html



வரதட்சணை கொடுமையின்னு
பொறந்த வீடு வந்து சேர்ந்தா
நான் பெத்த மூத்த மக...

காலேஜில் படிக்கும் கடைசி மகனுக்கு
பீஸ் கட்டப் பணமில்ல...
பாதில விட்டுப்போட்டு
காரேஜில் சேர்ந்துகிட்டான்...


வச்சிருந்த கால் பவுனும்
மளிகைக் கடை பாக்கின்னு
அடகுக் கடை போயிருச்சு...

கார்ப்பரேஷன் குழாயில்
குடிநீரே வர்ரதில்ல..
குடத்துக்கு ஒரு ரூபாய்
குடுத்து மாளவில்ல...

ஓலைக் குடிசைன்னாலும்
இருக்கிறது சொந்த வீடு
வாடகைப் பிரச்சனைன்னா
ரோட்டுக்கு வந்துருப்போம்...

இவ்வளவு பிடுங்கலிலும்
இருக்கவே இருக்குது...
இலவச தொலைக்காட்சி..!
காற்றாலை புண்ணியத்தில்
கரண்ட்டும் வந்துச்சுன்னா,
மறந்திருப்போம் கவலையெல்லாம்...

கரன்ட்டே இல்லன்னாலும்
சமாளிக்க வழி இருக்கு...
தெருமுக்கில் டாஸ்மாக்கு
பொண்டாட்டி மறைச்சு வச்ச
பணமிருக்கு குவாட்டர் வாங்க...

அழுத்தும் கஷ்டமெல்லாம்
ஆறுதல் சொல்லி சொல்லி
ஓடுது எங்க வாழ்க்கை...
எப்பத்தான் விடிவுகாலம்
அதுமட்டும் தெரியலங்க..

                          --சுந்தர்

Tuesday, October 6, 2009

குடைக்காளான்

பத்திரிகைச் செய்தி:
நடிகை புவனேஸ்வரி விபச்சார வழக்கில் கைது. அவருக்கு ஒன்பது வயதில் ஒரு மகன்.

***********************************************************************************************

சீருடையும் சத்துணவும் 
புத்தகமும் புதுப்பையும் 
இவன் மனதைக் கவர்ந்தாலும்
பள்ளிக்குச் செல்ல மட்டும் விரும்பியதேயில்லை இவன்...
அரைகுறை ஆடையோடு
போஸ்டரில் அம்மா
வேடிக்கை பார்த்துவிட்டு
பள்ளி நண்பன் கேள்வி கேட்பான்...


குரலில் குதூகலம்
நடையில் உற்சாகமென
வெளிச்சப் பட்டாசாய்
அலைபாயும் இவனுக்கு
சுத்தமாய்ப் பிடிப்பதில்லை....
இரவின் கருமையும்,
கட்டிலும் மெத்தையும்,
கதவடைக்கும் சத்தமும்...

தொட்டாற் சுருங்கி போல
தொடப்பட்ட ஆமை போல
சுருங்கிப் போய் விடுவான்
"ஒரு அப்பனுக்குப் பொறந்திருந்தா..."
யாரேனும் சொல்லிவிட்டால்...


அஞ்சுக்கும் பத்துக்கும்
ஆள் பிடித்து வரும்போதும்
தனக்கான தாய்மடியில்
வேறொருவன் விழும்போதும்
கடவுளை திட்டித் தீர்ப்பான்...

அழகி கைது என்று
பேப்பரில் செய்தி வந்தால்
பதறிப் போகுமிவன்
தாய் நிழலில் ஒரு குடைக்காளான்...


--சுந்தர்

Tuesday, September 29, 2009

நல்லவன்

நான் மட்டும் நல்மனிதன்
என்கின்ற எண்ணமொன்று
எப்போதும் உண்டெனக்கு.....

ஏய்க்காமல் வரி கட்டி
வாங்கி வந்த சம்பளத்தில்
மிச்ச சொச்ச செலவு போக
அநாதை விடுதிக்கென
ஒருபகுதி எடுத்து வைப்பேன்
அடடா என்ன சொல்ல? - மறை சொல்லும் வாழ்நெறிதான் !


உற்சாக பானம், 
சிகரெட்டுப் பெட்டியென 
வேகமாய்ப் போயொழியும் 
எடுத்து வைத்த அந்தப் பணம்.......


மாதம் ஒரு சனிக்கிழமை
தெருக்களை சுத்தம் செய்ய
அரசாங்க விடுமுறை நாள்.......
"தெருமுனையின் பள்ளத்தை
சமனாக்கி விட வேணும்
மழத்தண்ணி தேங்காம
அடைப்பெடுத்துப் போடோணும்"
நல்ல எண்ணங்கள்தான் - சந்தேகமே இல்லை !


மண்வெட்டி கடப்பாரை
தோட்டம் வெட்டும் கத்திரிக்கோல்
எல்லாமே வைத்திருந்தும்
ஒருபோதும் சென்றதில்லை
நீண்ட வார இறுதிஎன்று
வெள்ளி இரவு பார்த்த படம்
எழுந்திருக்க விடுவதில்லை...........


சாலையோரம் பிச்சை கேட்கும்
எண்ணற்ற சிறுமடல்கள்
சாப்பிட்டு நாளிருக்கும்
ஒட்டிப் போன வயிறு சொல்லும்
"ஏதாவது செய்திடணும்
கரையேத்த வழி பண்ணனும்"
வருமா வேறெவர்க்கும் - இவ்வாறு சிந்தனைகள் ?
பை துழாவி வரும் சில்லறை
அதற்குமேல் செய்ததில்லை........


ஆண் பெண் பாகுபாடு
கூடவே கூடாது
பெண்ணை எப்போதும்
உயரத்தில் வைக்க வேணும்
அப்படி முடியலன்னா
சம உரிமை தரவேணும்..


வாய் கிழியப் பேசி விட்டு
வீட்டுக்கு வரும்போது
சமையல் ரெடி ஆவலன்னா
செவுளு கிழிஞ்சு போகும்
பொண்டாட்டி அழுதழுது
பூமியே நிறைஞ்சு போகும்.......


எத்தனையோ விஷயங்கள்
எழுதிக் கொண்டே போகலாம்
என்னதான் இருந்த போதும்


அடுத்தவன் பணத்துக்கு
ஆசை என்றும் பட்டதில்லை
எவனுடைய வயிற்றினிலும்
எப்போதும் அடித்ததில்லை.......


நான் மட்டும் நல்மனிதன்
என்கின்ற எண்ணமொன்று
எப்போதும் உண்டெனக்கு.....


--சுந்தர்

Thursday, September 24, 2009

முள்ளிடை வாழ்க்கை


உலகத் திரைப்படங்களை
அலசிக் காயப்போடும் எனக்கு
உள்ளூர் விஷயங்கள்
என்றுமே தெரிந்ததில்லை
பக்கத்து வீட்டின்
மாமியார் மருமகள் சண்டை முதல்
செட்டியார் கடையின்
அநியாய விலைவாசி வரை
விடாமல் ஒலிபரப்புவாய் நீ....

பாகிஸ்தான் கலவரம்
பங்குச் சந்தை நிலவரம்
லேட்டஸ்ட் விஜய் படம்
விவாதம் எதுவெனினும்
பட்டென்று பதில் சொல்லும்
கருத்து கந்தசாமி நான்...
ஆனாலும்
குளித்து முடித்து வந்தால்
ஜட்டி கூட நீதான் எடுத்து தர வேண்டும்...

CBSE பாடத் திட்டம்
நிறையா குறையா
விமர்சிக்கத் தெரிந்தவன்
விஷ்வாவின் வீட்டுப் பாடத்தில்
ஒருபோதும் உதவியதில்லை.....

எல்லாம் தெரிந்த
ஏகாம்பரம் எனக்கு
ஒரு விஷயம் மட்டும்
இன்று வரை புரியவில்லை.....

வேட்டியில் படுகின்ற
வாழைக்காய் கறை முதலாய்
வீட்டு பட்ஜெட்டில்
விழுகின்ற துண்டு வரை
முகத்தின் புன்னகை
மாறாமல் சரி செய்வாய்........

அவ்வப்போது
ஏறுகின்ற (ஏத்துகின்ற?)
தலைக்கிறுக்கில்
"ரசனை இல்லாதவள்"
"அறிவிலிகளின் முகவரி"
இன்னபிற இன்னபிறவென்று
பேசிக் கொண்டே போகையில்
சற்றும் வலிக்காமல்
முகத்தை சுளிக்காமல்
சிரிப்பினால் கடந்திடுவாய்.....

எனக்காக நீ செய்யும் சமரசங்கள் ஏராளம்.......

இன்னமும் புரியவில்லை எனக்கு.....
அதுசரி.....
காகிதப் பூக்களுக்கு எங்கே புரியும்....
நிஜப் பூவின் நறுமணமும்
முள்ளிடை வாழ
அது கைக்கொள்ளும் சாமர்த்தியமும்.......

-----சுந்தர்

Monday, June 8, 2009

அலுவலகத்தின் ஒரு பகல்



வெயிலின் கடுமை
ஏறிக் கொண்டிருக்கிறது வெளியே...


தொலைந்து போன பனியன் கிடைத்து விட்டதென
தொலை பேசிச் சொல்கிறாள் மனைவி...


மதிய உணவு இடைவேளை வர
இன்னும் எத்தனை நேரம் பாக்கி...!
கணக்கிட்டுப் பார்க்கிறது பசித்த வயிறு....


டெஸ்க்டாப் பேக்கிரவுண்டில்
த்ரிஷா, அசினுக்குப் பின் குடியேறும் தமன்னா...


"ஈகை இம்சை" எனத் தலைப்பிட்டு
அடுத்த பதிவுக்காய் தட்டச்சிடும் விரல்கள்....!

வழக்கம் போல் வாட்ச்மேனால் துரத்தப்படும்
வாசல் பிச்சைக்காரியின் குரலை
சாப்பிட்டு விடுகிறது ஏஸியின் உறுமல்.....!