மிகப் பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டு விட்டார் திருகல் தியாகராஜன். என்ன செய்வதென்றே புரியாத நிலை. விஷயம் மட்டும் அப்புக்குட்டிக்குத் தெரிந்தால் அவ்வளவுதான், இத்தனை நாளாய் காப்பாற்றி வைத்திருந்த மானம், மரியாதை அத்தனையும் கப்பலேறிக் காற்றோடு போய் விடும்.
இந்த தீபா சனியன், கட்டிக் கொடுத்த அன்றோடு தொலைந்து போகாமல் பிசாசு மாதிரி வந்து வந்து பிராணனை வாங்கியதால் தான் வந்தது இத்தனை தொல்லையும் என்று நினைத்துக் கொண்டார். அவ தான் ஒண்ணும் புரியாம ஏதோ கேட்டுட்டா, இந்த மூதேவி விசாலத்துக்குமா புத்தி இப்படி போகணும்? இவ சப்போர்ட் பண்ணப் போயிதான் நாம இப்படி செய்ய வேண்டியதா போச்சு...
திடீரென்று எல்லோரும் தன்னையே பார்ப்பது போல ஒரு உணர்வு வந்தது தியாகுவுக்கு. சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டார். தனக்குத் தானே பேசிக் கொண்டு தலையை ஆட்டிக் கொண்டிருக்கிறோம் என்று புரிந்ததும், ஒரு மாதிரி ஆகி விட்டது.
திருகல் தியாகராஜன் ஒரு டிபிகல் மிடில் க்ளாஸ் ஆசாமி. முப்பது வயதில் கல்யாணம், கண்ணுக்கு லட்சணமான மனைவி விசாலம். அதுவரை அடக்கி வைத்திருந்த ஆசைகள் எல்லாம் ஒரு நாளுக்கு மூன்று, நான்கு முறை கிளர்ந்ததில், சரியாய் பத்தாவது மாதம் தீபா பிறந்து விட்டாள். முதல் குழந்தை பெண் என்பதில் தியாகுவுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். அதன் பிறகு, ஒரு பையன் வேண்டும் என்று எவ்வளவோ முயன்றும்..ஒன்றும் நடக்கவில்லை. ஒரே பெண் என்பதால் தீபா, ரொம்பச் செல்லம். இருந்தாலும் பாசம் காட்டுவதிலும் அவர் கொஞ்சம் கஞ்சம் தான். பையனாய் இருந்திருந்தால், செல்லம் கொஞ்சி இருப்பாரோ என்னவோ.
தியாகுவுக்கு ஒரு எலக்டிரிகல் ஷாப்பில், கல்லாவில் வேலை. அந்தக் கடை முதலாளி அவரின் பால்ய நண்பன் என்பதால் வேலையில் ஒன்றும் பெரிய கஷ்டம் இல்லை, அதே போல சம்பளமும் அதிகம் இல்லை.
தீபாவுக்கு ஒரு வித்தியாசமான பிரச்சனை. ஏதாவது விஷயத்தில் ஏமாற்றம் என்றால் உடனே அவளுக்கு தாங்க முடியாமல் தலை வலி வந்து விடும். எங்கெங்கோ போய், என்னென்னவோ வைத்தியம் பார்த்தும் குணமாகவில்லை. அதனால் முடிந்த வரை அவள் ஆசை எதுவென்றாலும் நிறைவேற்றி வந்தார் திருகல் - உள்ளூர திட்டிக் கொண்டே தான்.
இதற்கிடையில் திருகலின் நண்பர், கடை முதலாளி, மண்டையை போட்டுவிட, அவர் பையன் அப்புக்குட்டி பொறுப்பேற்றுக் கொண்டுவிட்டான். வந்ததில் இருந்து ஏகப்பட்ட மாற்றங்கள் செய்து, கடையை விஸ்தரித்து விட்டான். இப்போது வெறும் எலக்டிரிகல் ஷாப் மட்டும் இல்லை, ஒரு ஷோ ரூம் வைத்து - டிவி, மிக்சி, கிரைண்டர் என எல்லாம் விற்பனை செய்தான். அவனுக்கு ஆரம்பம் முதலே திருகல் தியாகராசனைப் பிடிக்காது. அவ்வப்போது வேலையில் திட்டினாலும், புண்ணியவான் வேலையை விட்டு அனுப்பாமல் இருக்கிறான். அதற்கும் வேட்டு வைக்கிற மாதிரி வந்து சேர்ந்தது அந்தப் பிரச்சனை.
கஷ்டப் பட்டு சேர்த்த பணத்தில், காலா காலத்தில் தீபாவுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வைத்தார் - அதற்கே நட்டு கழண்டு விட்டது. இந்த இடத்தில் இவர் மனைவி விசாலத்தை பற்றியும் சொல்ல வேண்டும். பொறுமை என்றால் அப்படி ஒரு பொறுமை மகராசிக்கு. இல்லாவிட்டால், தீபா கல்யாணத்துக்கு என்று, குண்டு மணி குண்டு மணியாக சேர்த்து இருபது பவுன் நகையைப் போட்டிருக்க முடியுமா?
எல்லாம் முடிந்தது, அக்கடாவென்று உட்காரலாம் என்று பார்த்தால் தலை தீபாவளி ரூபத்தில் வந்தது பிரச்சனை. தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பே கண்ணைக் கசக்கிக் கொண்டு வந்து சேர்ந்தாள் தீபா. அவள் வீட்டுக்காரன் வேலைக்கு தினமும் பஸ்சில் தான் போகிறானாம். வரும்போது இரவாகி விடுகிறதாம், ஒரு ஸ்கூட்டர் வாங்கித் தந்தாலே ஆச்சு என்று ஒற்றைக் காலில் நின்றாள். தியாகராஜனுக்கு வந்த கடுப்பிற்கு அளவில்லை. எனக்கு எந்த நாயும் ஸ்கூட்டர் வாங்கித் தரலை. இத்தனை வருசமா நானும் பஸ்சில் தான் வந்து போயிட்டு இருக்கேன், நல்லா குத்துக் கலாட்டம் தானே இருக்கேன் என்று எகிறினார். அவ்வளவுதான், வந்தது தலை வலி தீபாவுக்கு, தலையைப் பிடித்தபடி அவள் கதறத் தொடங்கியதும், ஓ என்று ஒப்பாரி வைத்து அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிவிட்டாள் விசாலம்.
"இந்த வீணாப் போன மனுஷனை நம்பி வந்த எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும், எங்கப்பன் போய் சேர்ந்து வருஷம் எட்டாச்சு. இத்தனை வருஷம் கழிச்சு இப்படி ஒரு அவப் பேரா, நாயின்னு பேச்சு வாங்கனுமா, அதுவும் இந்த வக்கத்த மனுஷன் வாயில விழணுமா" அலறிய அலறலில் மிரண்டு போய் விட்டார் திருகல். இப்படி ஒரு சிக்கலை எதிர் பார்க்காததால் சற்று நிலை குலைந்து தான் போய் விட்டார். "நான் உங்கப்பனை சொல்லல, வாய மூட்றி முண்டம்" எகிறினார் விசாலத்திடம். இதற்கிடையில் தலை வலி பொறுக்க முடியாமல், தீபா, ஒரு மூலையில் மடங்கி உட்கார்ந்து விட்டாள். பயந்து போன திருகல், வேறு வழி இல்லாமல் வாக்குத் தந்து விட்டார் - ஒரு பைக் வாங்கி தீபாவளி அன்று தந்து விடுவதாக. பிறகு தான் ஓய்ந்தது அந்தப் பொல்லாத தலை வலி.
ஒரு மாதம் முன்பே கடன் வேட்டையைத் துவக்கி விட்டார். அப்போது தான் ஒரு உண்மை திருகலுக்குப் புரிந்தது, தன்னை நம்பி எந்தத் தறுதலையும் ஒரு பைசா கூட கடன் தராது என்பது தான் அந்த உண்மை. அலைந்து அலைந்து பஸ் டிக்கட்டுக்கு காசு அழுதுதான் மிச்சம். ஒன்றும் தேறவில்லை.
விசாலம் ஒரு உருப்படியான யோசனையை சொன்னாள். கட்டி வரும் சீட்டுப் பணத்தை இப்போது எடுத்தால், தள்ளுபடி போக ஒரு நாற்பது ஆயிரம் தேறும். ஆனால் சீட்டுக்காரனிடம் முன்பே சொல்லி வைக்க வேண்டும். வேறு யாரும் எடுக்காமல் இருக்க வேண்டும். சீட்டு போடும் சௌந்திரம் வீட்டுக்கு போகும் போது, ஊரில் உள்ள எல்லா சாமியையும் கும்பிட்டுக் கொண்டே தான் சென்றார். ஆனால் விதி யாரை விட்டது? சீட்டுப் பணம் கிடைத்து விட்டால், தெரு முக்குப் பிள்ளையாருக்கு நூற்றி எட்டு தேங்காய் உடைப்பதாய் வேண்டிக் கொண்டதும் வீணாகி விட்டது, எதிர் வீட்டு முருகேசன் எடுக்கப் போகிறானாம். எவ்வளவு கெஞ்சியும் சௌந்திரம் மசியவில்லை. வேண்டுமானால் முருகேசனிடம் பேசிப் பாருங்கள் என்றாள். "மனுஷன் பேசுவானா அவன் கிட்ட, எவனோ ஒரு களவாணிப் பய அவன் வீட்டுக் கோழிய திருடிட்டுப் போனதுக்கு, எதிர்த்த வீடுன்னு என்னை எப்படிலாம் கேவலமாப் பேசுனான். அவனக் கேக்குறதுக்கு நாண்டுகிட்டு சாவலாம்" என்றார். அவர் கோலத்தைப் பார்த்து பரிதாபப் பட்டாளோ என்னவோ, சௌந்திரம் கொஞ்சம் இறங்கி வந்தாள். தீபாவளி அன்று மத்தியானம் வருமாறும், தன் சொந்தப் பணத்தைக் கடனாகக் கொடுப்பதாகவும், சொன்னவுடன் தான் அவருக்கு நிம்மதி வந்தது.
வீட்டுக்குப் போனவுடன் தீபா, ஆகாசத்துக்கும், பூமிக்குமாக குதித்தாள். தீபாவளிக்கு ஒரு நாள் முன்னரே பைக் வேண்டுமாம், அப்போது தான் தீபாவளி அன்று காலை அவர்கள் ஜோடியாய் கோயிலுக்கு போக முடியுமாம். "என்ன எழவுடா இது, சை" என்றாகிவிட்டது தியாகராஜனுக்கு. மறுபடியும் அவளுக்கு தலை வலி வருமுன், சரி சரி என்று தலை ஆட்டி விட்டு கடைக்கு வந்து விட்டார்.
இன்னும் இரண்டு நாள் தான் இருந்தது, தீபாவளிக்கு. சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தவர், கடையில் கல்லாவில் இருந்த பணத்தில் ஒரு நாற்பதாயிரத்தை எடுத்துக் கொண்டு நேரே பைக் ஷோ ரூமுக்குப் போய், ஒரு பைக்கை வாங்கியே விட்டார். பேங்கில் கட்டவேண்டிய பணம். இரண்டு நாள் சமாளித்து விட்டால், பிறகு சௌந்திரம் தரும் பணத்தை கட்டி விடலாம்.
மாப்பிள்ளையை செல்லில் அழைத்தவுடன் வேகமாய் ஷோ ரூம் வந்தவன், "ப்ளு கலரா, சிகப்பு நல்லா இருக்குமே" என்றான். ஓங்கி செவிட்டில் அறையலாமா என்றிருந்தது இவருக்கு. தீபாவின் வாழ்கையை நினைத்து ஆத்திரத்தை அடக்கிக் கொண்டார்.
முதலாளி அப்புக்குட்டி இரண்டு நாளாய் ஊரில் இல்லை, வருவதற்குள் சமாளித்து விடலாம் என்று நினைத்து தான் பணத்தை எடுத்திருந்தார். அந்தக் கிராதகன் தீபாவளி அன்று காலையே வந்து விட்டான். இவருக்கு பயத்தில் காய்ச்சலே வரும்போல இருந்தது, உடம்பெல்லாம் ஒரே நடுக்கம், படபடப்பு. மத்தியானம் வரை பல்லைக் கடித்துக் கொண்டு ஓட்டியவர், லன்ச் டைமில் ஒரே ஓட்டமாக ஓடினார் - சௌந்திரம் வீட்டுக்கு. போனவருக்கு அதிர்ச்சி - சௌந்திரம் வீடு பூட்டி இருந்தது. யாரோ ஓங்கி நெஞ்சு மேலேயே மிதிப்பது போல இருந்தது அவருக்கு. அவள் செல்லுக்கு கால் போட்டால், சுவிட்ச் ஆப். அப்படியே எங்காவது ஓடிப் போய் பிச்சை எடுத்துப் பிழைத்துக் கொள்ளலாமா என்று ஒருக் கணம் நினைத்தவர், பிறகு ஏதோ நினைத்தபடி கடைக்கு சென்றார்.
வாசலிலேயே சிகரெட் பிடித்தபடி டென்ஷனாய் நின்றிருந்தான் அப்புக்குட்டி. சைடு வழியாக உள்ளே போக முயன்றவரை மறித்துக் கேட்டான்.
"எங்க போயிருந்தாப்ல..? சாப்பிட்டு வர இத்தன நேரம்...?"
"அது வந்து.. தம்பி.... " "சரி சரி... உள்ள போங்க, இதோ வர்றேன்...."
தண்ணீரை கடக் கடக்கென்று முழுங்கி, கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டவர் இருக்கையில் அமர்ந்தார். தம் அடித்து விட்டு வந்த அப்புக் குட்டி, அவரை, அவன் ரூமுக்கு அழைத்தான். படபடப்பில் எங்கே மயங்கி விழுந்து விடுவோமோ என்ற பயத்தில் மெதுவாக உள்ளே சென்றார் தியாகராஜன். போனதும் கேட்டான்.
"போன வாரக் கலெக்ஷன் பேங்கில சேப்பித்தாச்சு இல்லே?" ............."அது அது...."
"எந்தா, மறந்து போயோ.... வயசான காலத்துல உங்களையும் ஒன்னும் சொல்லாம் பாடில்லா..." சொல்லிக் கொண்டே ஒரு வவுச்சரை நீட்டினான். வாங்கிப் பார்த்தவருக்கு ஒன்றும் புரியவில்லை... "தம்பி.. இது என்னான்னு?"
"எந்தா இது, கண்ணும் தெரியலியா? உங்களுக்கு ஒரு சின்ன பரிசு, நீங்க எங்க கடைல சேந்து இன்னையோட முப்பது வருஷம் ஆயிடுச்சு. வருஷத்துக்கு இரண்டாயிரம்னு கணக்கு பண்ணி, ஒரு அறுபதாயிரம் எழுதிருக்கேன்... தீபாவளி போனஸ்....சந்தோசம் அல்லே..."
"தம்பி.... தம்பி... உங்களுக்கு நான் எப்படி கைம்மாறு.... என்னாலே பேச முடியல..." வார்த்தை தடுமாறி திக்கி திக்கிப் பேசும்போதே, சேல்ஸ் மேன் மணி உலுக்கினான், "என்ன பெருசு, பகல் கனவா, முதலாளி கூப்பிடுறாரு... உள்ள போ..."
கண்டதெல்லாம் வெறும் கனவு என்று நம்பவே முடியவில்லை... இருந்தாலும் கனவு தந்த தைரியத்தில் கொஞ்சம் தெம்பாக உள்ளே போனார். "எந்தா, போன வாரக் கலெக்ஷன் பேங்கில சேப்பித்தாச்சு இல்லே?" ....."தம்பி, அது.. வந்து... இனிமே தான்...."
"வயசானா அறிவு இல்லாமப் போயிருமா? ஒழுங்கா நாளைக்கு காலைல பணத்தைக் கட்டி ரசீதை என் வீட்டுல கொடுத்துட்டு போங்க. இந்த மாதிரி வீணாப் போனதை எல்லாம் என் தலை-ல கட்டிட்டு போனாரு பாரு எங்கப்பா, அவரை சொல்லணும்" எரிந்து விழுந்தான். நல்ல வேளை.... பணத்தைக் கேட்கவில்லை...
வீட்டுக்குப் போகும் போது, வழியெல்லாம் சிந்தனை.. என்ன செய்வது, இன்னும் எட்டு மணி நேரத்தில், பணம் எங்கிருந்து வரும்....யோசித்துக் கொண்டே போனவருக்கு வீட்டு வாசலில் நின்ற பைக்கைப் பார்த்ததும் இரத்தம் கொதித்தது.
உள்ளே போனதும் விசாலம் சிரித்துக் கொண்டே - "இன்னிக்கி கூட கடைக்கு போயி தான் ஆகணுமா? சரி வாங்க, சாப்பிடலாம்" என்றபடியே பையை வாங்கினாள். இருக்கட்டும் இருக்கட்டும் என்றவாறே சோபாவில் உட்கார்ந்து கண்ணை மூடினார். "மாமா..." குரல் கேட்டுக் கண்ணைத் திறந்தவருக்கு எதிரே உட்கார்ந்திருந்தான் அவர் மாப்பிள்ளை மகாலிங்கம். கையில் ஒரு மஞ்சள் பை "இந்தாங்க மாமா" என்று பையைக் கொடுத்தான்.
இது என்ன புதுக் குழப்பம், என்று எண்ணியவாக்கில் திறந்து பார்த்தவருக்கு திகைப்பு - உள்ளே கத்தை கத்தையாய் நோட்டுக் கற்றை.
"இதுல நாற்பதாயிரம் ரூபாய் இருக்கு மாமா, நீங்க பைக் வாங்கிக் கொடுத்த உடனே, சந்தோஷமா இருந்தாலும், அப்புறமா யோசிச்சுப் பார்த்ததும், தப்புன்னு தோணுச்சு. நீங்க கவர்மென்ட் எம்ப்ளாயீ கிடையாது, ரிடயர் ஆனா பென்ஷனும் கிடையாது, உங்களுக்கு தான் இந்தப் பணம் தேவை. எனக்கு இல்ல" என்று சொன்னவனைக் கை எடுத்துக் கும்பிடத் தோன்றியது. கைகளைப் பிடித்துக் கொண்டு, கண்ணில் நீர் கசிந்தார் திருகல் தியாகராஜன்.
அவர் அருமைப் பெண் தீபா அருகில் வந்து, "அப்பா, நீங்க என்னை மன்னிக்கணும், எனக்கு எப்பயுமே, தலை வலி வந்ததே இல்ல, சும்மாக் கேட்டா நீங்க வாங்கித் தர மாட்டீங்கனு அப்படி நடிக்க ஆரம்பிச்சேன். அப்புறம் அதுவே பழகிப் போச்சு. இவர் தான் எடுத்துச் சொல்லி எனக்குப் புரிய வச்சார்." என்று காலில் விழுந்தாள்.
அப்புறம் என்ன... ஹேப்பி தீபாவளி தான்...
Monday, October 19, 2009
Thursday, October 15, 2009
கவிதைக்கு அலைபவன்
"பசி" என்று தலைப்பிட்டு
எழுதத் துவங்கினேன்
ஒரு கவிதை...
எவ்வளவு யோசித்தும்
இரண்டு வரிக்கு மேல்
நகராமல் முரண்டியது
கற்பனைக் குதிரை...
சற்றுமுன் சாப்பிட்ட
பிரியாணிக்கு பில்லை வைத்துவிட்டு
பவ்யமாய் நின்றான்
ஓட்டல் சிறுவன்...
ஏக்கப் பெருமூச்சுடன்
நின்றிருக்கும் இவனுக்கொரு
ஏழு, எட்டு வயதிருக்குமா?
சட்டென்று வந்த சந்தோஷத்தில்
தாராளமாய் டிப்ஸ் வைத்து
நகர்ந்தேன்...
"குழந்தைத் தொழிலாளி" என்று
அடுத்தொரு கவிதை எழுத...
--- சுந்தர்
எழுதத் துவங்கினேன்
ஒரு கவிதை...
எவ்வளவு யோசித்தும்
இரண்டு வரிக்கு மேல்
நகராமல் முரண்டியது
கற்பனைக் குதிரை...
சற்றுமுன் சாப்பிட்ட
பிரியாணிக்கு பில்லை வைத்துவிட்டு
பவ்யமாய் நின்றான்
ஓட்டல் சிறுவன்...
ஏக்கப் பெருமூச்சுடன்
நின்றிருக்கும் இவனுக்கொரு
ஏழு, எட்டு வயதிருக்குமா?
சட்டென்று வந்த சந்தோஷத்தில்
தாராளமாய் டிப்ஸ் வைத்து
நகர்ந்தேன்...
"குழந்தைத் தொழிலாளி" என்று
அடுத்தொரு கவிதை எழுத...
--- சுந்தர்
Labels:
கவிதை முயற்சி
Friday, October 9, 2009
ஆறுதல்
கீற்று மின்னிதழில் பிரசுரம் ஆன, என்னுடைய கவிதை. நன்றி www.keetru.com
http://www.keetru.com/index.php/home/2009-10-06-12-15-36/2009-10-06-12-18-01/736-2009-10-09-00-20-49.html
வரதட்சணை கொடுமையின்னு
பொறந்த வீடு வந்து சேர்ந்தா
நான் பெத்த மூத்த மக...
காலேஜில் படிக்கும் கடைசி மகனுக்கு
பீஸ் கட்டப் பணமில்ல...
பாதில விட்டுப்போட்டு
காரேஜில் சேர்ந்துகிட்டான்...
வச்சிருந்த கால் பவுனும்
மளிகைக் கடை பாக்கின்னு
அடகுக் கடை போயிருச்சு...
கார்ப்பரேஷன் குழாயில்
குடிநீரே வர்ரதில்ல..
குடத்துக்கு ஒரு ரூபாய்
குடுத்து மாளவில்ல...
ஓலைக் குடிசைன்னாலும்
இருக்கிறது சொந்த வீடு
வாடகைப் பிரச்சனைன்னா
ரோட்டுக்கு வந்துருப்போம்...
இவ்வளவு பிடுங்கலிலும்
இருக்கவே இருக்குது...
இலவச தொலைக்காட்சி..!
காற்றாலை புண்ணியத்தில்
கரண்ட்டும் வந்துச்சுன்னா,
மறந்திருப்போம் கவலையெல்லாம்...
கரன்ட்டே இல்லன்னாலும்
சமாளிக்க வழி இருக்கு...
தெருமுக்கில் டாஸ்மாக்கு
பொண்டாட்டி மறைச்சு வச்ச
பணமிருக்கு குவாட்டர் வாங்க...
அழுத்தும் கஷ்டமெல்லாம்
ஆறுதல் சொல்லி சொல்லி
ஓடுது எங்க வாழ்க்கை...
எப்பத்தான் விடிவுகாலம்
அதுமட்டும் தெரியலங்க..
--சுந்தர்

கவிதை முயற்சி,
கீற்று
Wednesday, October 7, 2009
என் ராசி அப்படி - 1
உப்பு விற்கப் போனால் மழை பெய்வதும், மாவு விற்கப் போனால் காற்றடிப்பதும் பலருடைய வாழ்கையில் சகஜம். ஆனால் என்னுடைய கதை கொஞ்சம் ஸ்பெஷல். நான் பண்ணவே பண்ணாத தவறுகளுக்கெல்லாம்,பொறுப்பேற்றுக் கொண்டு "திரு திரு"க்க வேண்டி வந்து விடும்.
அப்படி மாட்டிக் கொண்டு, தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று அப்பீட்டு அய்யாசாமியாக மாறி, பெரும் சிரமப் பட்டு வெளிவந்த சம்பவங்கள் பலப்பல., குறிப்பாக, இந்தத் "தொலைபேசி" என்கிற வஸ்து, தொல்லை பேசியாக மாறி என் வாழ்க்கையில் நிறைய விளையாடி இருக்கிறது. எல்லாவற்றையும் சொல்லிவிட ஆசை. இருந்தாலும், பிரித்து பிரித்து சொன்னால், இன்னும் கொஞ்ச நாள் ஓட்டலாம் என்பதாலும்,பதிவு ரொம்ம்ம்ப நீண்ண்ண்டு விட்டால், நீங்கள் இந்த வலைப்பூ பக்கமே வராமல் போகும் அபாயம் இருப்பதாலும் (இப்போ வந்து போயிட்டு இருக்குற நாலு பேரை இழக்க மனசு வரலீங்.) , ஜஸ்ட் மூன்றே மூன்று சம்பவங்கள் - இதோ இங்கே...
சம்பவம் நம்பர் ஒன்று: என் அப்பாவிற்கு, அப்போது தேவஸ்தான விடுதியில் பதிவர் வேலை. விடுமுறை நாட்களில் நான் சாப்பாடு எடுத்துச் செல்வது வழக்கம். அந்த அலுவலகத்தில் அப்பா மேசையில் ஒரு தொலைபேசி இருக்கும். சுழட்டி டயல் செய்யும் விதத்தில் அமைந்த அந்தக் கால மாடல் அது. அதற்கு முன் போனைப் பார்த்திருந்தாலும் உபயோகிக்க வாய்ப்பு கிடைக்காததால், அந்த போன் மீது ஒரு ஈர்ப்பு எனக்கு. அலுவலகத்தில் என் அப்பா தான் இன்சார்ஜ் என்பதால், என்னைக் கேள்வி கேட்க யாரும் இல்லை. என் அப்பா சொல்வதைத் தான் நான் கேட்பதே இல்லையே. பிறகென்ன, சந்தோஷமாக இஷ்டத்திற்கு டயல் செய்வேன், தெரிந்த, தெரியாத நம்பர்கள் அனைத்திற்கும். எல்லா இடத்திற்கும் பேசிப் பேசி சீக்கிரமே போரடித்து விட்டது. பிறகு, டைரக்டரியில் பெயர், போன் நம்பர் பார்த்து டயல் செய்து பேச ஆரம்பித்தேன், ஏதேதோ பேசி விட்டு பிறகு ராங் நம்பர் என்று சொல்லி வைத்து விடுவேன். என் அப்பா எவ்வளவோ சொல்லி சொல்லிப் பார்த்து விட்டு, பிறகு ஒழிஞ்சு போ என்று விட்டு விட்டார். ஒரு நாள் சுழட்டி சுழட்டி டைம் பாஸ் செய்து கொண்டிருந்தேன் (போன் டயலரைத் தான்). அப்பா பத்து நிமிடத்தில் வந்து விடுவதாக சொல்லி விட்டு எங்கோ சென்றிருந்தார். டயல் செய்து களைத்துப் போய், நான் வைத்தவுடன், போன் ரிங்கியது. வேறு யாரும் அருகில் இல்லாததால் நானே எடுத்தேன்
"ஹலோ, வணக்கம் தண்டபாணி நிலையம்" - இது நான்
"ஏய், யார்ரா அது, இப்பல்லாம் சுள்ளானுங்களுகெல்லாம் தேவஸ்தானத்துல வேலை போட்டுக் குடுக்குறாங்களா ? " - இது எதிர் முனை
"நான் ஞானசேகரன் பையன் பேசுறேன் சார். நீங்க யாரு?"
"டேய், சுந்தரா பேசுற? நான் ரமேஷ் அப்பா பேசுறேன்டா..உன்னைப் பத்தி பேசத்தாண்டா போன் பண்ணேன், ராஸ்கல் - என்னோட போஸ்ட் ஆபீஸ்ல பாம் இருக்குன்னு போன் பண்ணியா மிரட்டுற? போலீஸ்ல சொல்லிட்டேன், உன் மேல தான் சந்தேகேமா இருக்குன்னு, இன்னும் பத்து நிமிஷத்துல வந்துருவாங்க, அங்கேயே இரு.."
"அங்கிள், உங்களுக்கு போன் பண்ணி ரொம்ப நாள் ஆச்சு, சத்தியமா நான் பண்ணவே இல்ல அங்கிள்"
"பொய் சொல்லாதடா, எல்லாம் எனக்கு தெரியும், ஓசி போன் கிடைச்சா யாருக்காவது போன் பண்ணி, மிரட்டுறது, இல்ல சும்மா ஒரு பேரைச் சொல்லி அவரு இருக்காரா, இவரு இருக்காரானு கேட்டு தொந்தரவு பண்றது. நீ பாம் இருக்குன்னு சொல்லி மிரட்டுனது - ஒரு பெரிய தப்பு, போலீஸ் அரெஸ்ட் பண்ணுவாங்க, இனிமே நீ ஜெயில்ல தான் எப்பயுமே இருக்கணும். அங்கே தான் படிக்கணும்.
தீவிரவாதின்னு கேஸ் போட்டா, நீ படிக்க முடியுமா முடியாதான்னு வேற தெரியல.
நினைச்சப்ப எல்லாம் போன் பண்ணிருக்க, பத்து தடவ பாம் த்ரெட் குடுத்துருக்க, இது போஸ்ட் ஆபீஸ், சென்ட்ரல் கவர்மென்ட். உன்னோட வாழ்க்கையே போச்சு. எனக்கு ஒரே ஒரு கவலை தான். உன்னால ஒரு நல்ல மனுஷன் - உங்க அப்பாவையும் அரெஸ்ட் பண்ணுவாங்க, உன்னை போன் பண்ண விட்டதுக்கு. எங்க உங்க அப்பா? அவர் கிட்ட போனைக் குடு"
"அங்கிள், அங்கிள் நான் பண்ணல, பிராமிசா நான் போன் பண்ணல, நீங்க வேணா ரமேஷைக் கேட்டுப் பாருங்க."
"அப்பா எங்கடா"
"அப்பா வெளில போயிருக்காங்க.."
"ஒ, உன்னை ஊரு பூரா போன் பண்ண சொல்லிட்டு, வேலை நேரத்துல சீட்டுல இருக்காம அவரும் வெளில போயிட்டாரா, இதுக்கு எத்தனை வருஷம் ஜெயில்னு கேக்கணும்"
இதற்கு பேச முடியாமல் நான் போனை வைத்துவிட்டேன். தாங்க முடியாமல் ஒரு பயப்பந்து வயிற்றில் இருந்து எழுந்து தொண்டைக் குழியில் வந்து முட்டி நின்று கொண்டது. சத்தம் போடாமல் அழ ஆரம்பித்தேன். அப்பா வந்தவுடன் கதறிக் கதறி அழுதுகொண்டே மேட்டரை சொன்னேன். சீரியசாய் யோசித்தவர், "சரி நான் பேசிப் பாக்குறேன், நீ வீட்டுக்கு போ" என்றார்.
"அப்பா, போலீஸ் வருவாங்கன்னு...... அங்கிள்......"
"வந்தா என்னை அரெஸ்ட் பண்ணட்டும், நான் தான் போன் பண்ணி மிரட்டினேன்னு சொல்லிர்றேன், வேற என்ன பண்ணுறது"
"(விசும்பலுடன்)... அப்பா... நீங்க ஏன் போகணும்.... நான் சத்தியமா போன் பண்ணவே இல்லை..."
"எப்படி நம்புறது.. நான் நம்புனாலும், இங்க இருக்குற எல்லாரும் சாட்சி சொல்லுவாங்க, நீ தான் இங்க வந்தாலே போனும் கையுமா இருப்பியே...சரி சரி.. போ வீட்டுக்கு"
வீட்டுக்கு வந்து விட்டாலும், மனம் எல்லாம் அங்கேயே இருந்தது, இரவு அப்பா வரும் வரை நரக வேதனை. அம்மாவிடமும் சொல்லவில்லை. அப்பா வந்தவுடன், பாய்ந்து அருகில் சென்று கிசுகிசுப்பாய்க் கேட்டேன் - "என்னப்பா ஆச்சு"
வசீகரப் புன்னகையுடன் அப்பா சொன்னார் - "ஒண்ணும் ஆகல, நான் சொல்லித்தான் ரமேஷ் அப்பா போன் பண்ணி உன்கிட்ட அப்படி எல்லாம் பேசினார் - இனிமே போன் பண்ணுவியா?"
விடுபட்டுவிட்ட பெருமகிழ்ச்சியில் நான் - "படிச்சு வேலைக்கு போன பின்னாடி, ஆபீஸ் போனுக்கு, எனக்கு கால் வந்தாலும், சத்தியமா பேச மாட்டேன்பா..."
சொன்ன சொல்லைக் காப்பாற்றி இருந்தால், அதற்கடுத்த இரண்டு சம்பவங்கள் நடந்தே இருக்காது.
---தொடரும்...

ச்சும்மா டைம் பாஸு....
Tuesday, October 6, 2009
குடைக்காளான்
பத்திரிகைச் செய்தி:
நடிகை புவனேஸ்வரி விபச்சார வழக்கில் கைது. அவருக்கு ஒன்பது வயதில் ஒரு மகன்.
***********************************************************************************************
சீருடையும் சத்துணவும்
புத்தகமும் புதுப்பையும்
இவன் மனதைக் கவர்ந்தாலும்
பள்ளிக்குச் செல்ல மட்டும் விரும்பியதேயில்லை இவன்...
அரைகுறை ஆடையோடு
போஸ்டரில் அம்மா
வேடிக்கை பார்த்துவிட்டு
பள்ளி நண்பன் கேள்வி கேட்பான்...
குரலில் குதூகலம்
நடையில் உற்சாகமென
வெளிச்சப் பட்டாசாய்
அலைபாயும் இவனுக்கு
சுத்தமாய்ப் பிடிப்பதில்லை....
இரவின் கருமையும்,
கட்டிலும் மெத்தையும்,
கதவடைக்கும் சத்தமும்...
தொட்டாற் சுருங்கி போல
தொடப்பட்ட ஆமை போல
சுருங்கிப் போய் விடுவான்
"ஒரு அப்பனுக்குப் பொறந்திருந்தா..."
யாரேனும் சொல்லிவிட்டால்...
அஞ்சுக்கும் பத்துக்கும்
ஆள் பிடித்து வரும்போதும்
தனக்கான தாய்மடியில்
வேறொருவன் விழும்போதும்
கடவுளை திட்டித் தீர்ப்பான்...
அழகி கைது என்று
பேப்பரில் செய்தி வந்தால்
பதறிப் போகுமிவன்
தாய் நிழலில் ஒரு குடைக்காளான்...

Subscribe to:
Posts (Atom)