Friday, October 31, 2008

ஒரு அழகிய மனமும், ஆழ் மன நனவிலியும்




எதாவது ஒரு கவிஞரின் அல்லது எழுத்தாளரின் புதிய படைப்பு வெளியாகி, பரபரப்பை கிளப்பி புது அலையை ஏற்படுத்தும் போதெல்லாம், அந்த படைப்பாசிரியரிடம் "இதை எழுத உங்களைத் தூண்டியது எது" என்று பேட்டிகளில் கேட்கப்படுவதும், அதற்கு அவர் "சரியாக சொல்ல முடியவில்லை. அந்த படைப்புதான் என்னை வைத்து தன்னை எழுதிக் கொண்டதாக நினைக்கிறேன்" என்று கூறுவதும் பல முறை படிக்க நேர்ந்திருக்கிறது. கவிஞர் வைரமுத்துவின் "கள்ளிக்காட்டு இதிகாசம்" தொடராக விகடனில் வெளிவந்து வரவேற்பு பெற்று புத்தகமாக வடிவுரும்போது அதன் முன்னுரையில் கவிஞர் இவ்வாறு எழுதியிருந்தார் "அந்த இடங்களுக்கெல்லாம் சென்று வானம் பார்த்து கண்ணீர் வடித்தவாறு பல கணங்கள் படுத்துகிடந்திருக்கிறேன். இப்போது யோசிக்கும்போது இந்த மண் மற்றும் அதன் மனிதர்கள் அவர்களின் வலி இவை யாவும் என்னை வைத்து தங்களை பதிந்து கொண்டதன் விளைவுதான் இந்த படைப்போ என்று எண்ணத் தலைப்படுகிறேன்". இம்மாதிரி நிகழ்வுகள் கவிஞர்கள் எழுத்தாளர்களுக்கு மட்டுமன்றி மற்ற துறைகளின் வித்தகர்களுக்கும் நிறையவே நடந்தவாறு இருக்கின்றன. கணித மேதை ராமானுஜம் சிக்கலான கணிதப் புதிர்களுக்கு விடைதேடி தூங்காமல் பலநேரம் போராடி ஓய்ந்துவிட்டு உறங்கப் போகும்போதெல்லாம் அவர் கனவில் சரஸ்வதி (சி.கே.சரஸ்வதி அல்ல, சாட்சாத் கலைவாணி சரஸ்வதி தேவி) தோன்றி அப்புதிர்களுக்கு விடை அளித்ததாக அவரே சொல்லியதுண்டாம்.

சமகாலத்தில் பார்த்தாலும் ஏகப்பட்ட சம்பவங்கள். சாரு நிவேதிதா கூட சில முறை தனக்கு அப்படி அனுபவங்கள் ஏற்பட்டதாக எழுதியிருக்கிறார். எழுத்தின் இடையே உறங்கிப் போவதும், விழித்து எழும்போது பாதியில் விட்ட கதை முற்றுப் பெற்றிருந்தும் என அலாதி அனுபவம். இவ்வாறாக கண்ணுக்கு தெரியாத (அல்லது கனவில் தெரிந்த) சக்தியின் மூலமாக படைப்புகள், கண்டுபிடிப்புகள் உருவாவது தொன்று தொட்டே நடந்து வரும் விஷயம் தான். சினிமா காரர்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. (பட்டாம்பூச்சியின் சிறகசைப்பையும் மைதா மாவு மேக் அப் - ஐயும் ஒருங்கிணைத்த கமலின் கேயாஸ் தியரியும் இந்த வகையை சார்ந்தது தானா என்று எனக்கு தெரியவில்லை). யோசித்தால் எனக்கும் கூட இம்மாதிரி அனுபவங்கள் நிகழ்ந்தே இருக்கின்றன (தோ.. பார்றா.. அட்ரா அட்ரா)... உண்மையைத்தான் சொல்கிறேன். வலைப்பூ ஆரம்பித்ததும், பல உன்னதமான (???) விஷயங்களை அதில் எழுதி வருவதும் - இவை எல்லாமே ஒரு இரவில் ஓவராய் சரக்கு அடித்த பின்பு எனக்கு மட்டும் கேட்ட அசரீரியினால் தான். இப்படி நடப்பவை யாவும் ஆழ் மன நனவிலியின் (Sub-Conscious Mind) அற்புதங்கள் என்கிறது அறிவியல். மனித மூளையின் அளவிட முடியாத விந்தைகளில் ஆழ் மன நனவிலி முக்கிய பங்கை ஆற்றுகிறது. ஜெயமோகனின் ஒரு அறிவியல் புனை கதையில் மனிதன், தன் மூளையின் வெறும் ஐந்து சதவீதம் மட்டுமே உபயோகிப்பதாக வரும் ("மூளை என்பதை அமெரிக்க வெள்ளை மாளிகை எனக்கொண்டால் பல மனிதர்கள் அதன் வராந்தாவிலேயே வாழ்ந்து விட்டுப் போகிறார்கள்") A Beautiful Mind என்ற திரைப்படத்தை சமீபத்தில் காண நேர்ந்தது. அதி அற்புதமான ஒரு காட்சியனுபவமாக அது அமைந்துவிட்டது. படம் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து மீண்டு வருவது அவ்வளவு சாதாரணமாய் இருக்கவில்லை. ஒரு பல்கலைக்கழகத்தில் கணித ஆராய்ச்சியாளனாக (Russell Crowe) சேரும் ஒரு மாணவனின் வாழ்க்கை தான் களம். தீவிர சிந்தனை மற்றும் மிதமிஞ்சிய கற்பனையின் விளைவால் அவனுக்கு செயற்கை மனிதர்கள் கண்ணுக்கு தெரிகிறார்கள். அவனுடன் உரையாடுகிறார்கள். பைத்தியமாய் மாற நேரும் அபாயத்தில் இருந்து அவன் தன்னை எப்படி காத்துகொள்கிறான். நோபல் பரிசு பெறும் அளவு எப்படி உயர்கிறான் என்பது கதை. இதற்கு மேல் இந்த படத்தை பற்றி இங்கே சொன்னால் நன்றாக இருக்காது. ஒரு தனி பதிவாக போட வேண்டிய விஷயம் அது. என்னை பொறுத்தவரை இத்திரைப் படத்தை ரசித்து, தனிமையில் பார்ப்பதே ஒரு சுகானுபவம். பார்த்து அனுபவித்து பின் சொல்லுங்கள். விஷயத்துக்கு வருகிறேன் (அடப்பாவி... இன்னும் நீ விஷயத்துக்கே வரலியா)... கண், காது இந்த இரண்டு புலன்களாலும் உணரப்படுவதே நம் உலகம். கண் என்ற அதிசக்தி வாய்ந்த கேமரா முன் எது இருந்தாலும் ஷட்டரை திறந்தவுடன் அப்படியே அதை தலைகீழாக்கி மூளையில் பிம்பமாக குவிக்கிறது. அதை நம் மூளை காட்சியாக புரிந்து கொள்கிறது. அதைப் போலவே காது, சத்தங்களை எல்லாம் ஒலி அதிர்வுகளாக மாற்றி மூளைக்கு அனுப்புகிறது. சரியா? இப்போது என் கேள்விகள்... (இது வேறயா? கேட்டு தொலை..நாய்க்கு வாக்கப்பட்டா குலைச்சு தான ஆகணும்?)

* இப்படி இந்த புலன்களால் உணரப் படும் உலகத்துக்கு மாற்றாக, நேரடியாக மூளையே உணர முடிகின்ற உலகமும் இருந்து தானே ஆக வேண்டும்? ** கண் மற்றும் காதுகளின் வழியாக மூளையால் பெறப்படும் தகவல்கள் அங்கே (மூளையில்) எப்படி கையாளப் படுகின்றன என்பதைக் கண்டறிந்துவிட்டால், பிறகு கண் இல்லாமல் பார்ப்பதும், காதுகள் இல்லாமல் கேட்பதும் சாத்தியமாகி விடாதா? பிறவியிலேயே கண், காது குறைபாடு உள்ளவர்கள், நன்றாக இருந்து இடையில் பாதிக்கப் பட்டவர்களுக்கெல்லாம் இது எப்பேற்பட்ட ஒரு விஷயமாக இருக்கும் ? ***கொடூரமான கிரிமினல்கள் அப்படி மாறக் காரணமான விஷயங்களை ஆழ் மன நனவிலியில் இருந்து அகற்றி விடும் தொழில் நுட்பம் வந்துவிட்டால் நம் நாட்டில் சிறைச்சாலைகளே இல்லாமல் போய் விடும் இல்லையா? ****நல்லதை மட்டுமே நினைத்து, நல்லன மட்டுமே செயல்படுத்தும் படி அரசியல்வாதிகளை மாற்றியமைத்து விட இயலாதா? *****மோசமான படம் எடுத்து மக்களை, மாக்கள் ஆகும் இயக்குனர்களுக்கு எல்லாம் நல்ல படங்கள் பற்றிய அறிவை இன்ஜெக்க்ஷன் மூலம் ஏற்றி விட முடியாதா? இவை யாவும், Beautiful Mind படம் பார்த்த பிறகு தோன்றிய எண்ணங்கள். கனவில் வருகின்ற மனிதர்கள் நனவுலகிலும் வந்துவிட்டால் ? என்ற கேள்வியே இந்த படம். ஆனால் நாம் காணும் கனவை எல்லாம் நனவாக்க முடிந்து விட்டால்? என்ற கேள்வியை விதைத்து விட்டது. இன்னொரு விஷயம். இந்த படத்தில் வரும் ஹீரோவுக்கு நேர்வது போலவே எனக்கும் அவ்வப்போது நேர்கிறது. புதிய புதிய உருவங்கள் வந்து உரையாடுவதும், சிரிப்பதும் பல முறை நடந்துள்ளது. ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால் நான் மூச்சு முட்டக் குடித்துவிட்டு குப்புறப் படுத்திருக்கும்போது மட்டுமே அவை வருவதுதான். இதை யாராவது ஒரு திரைப்படமாக எடுக்க முனைந்தால் சம்பளம் வாங்காமல் கதாநாயகனாக நடித்து கொடுக்க நான் தயார். (ஒரே ஒரு கண்டிஷன். த்ரிஷா தான் ஹீரோயின்)

2 comments:

வணங்காமுடி...! said...

test

Vinothkumar KN said...

யப்பா.... வெகு அருமை...
எனக்கு புரிந்துகொள்ள சற்று நேரமாயிற்று...

நான் ரொம்ப காலமாக பார்க்கணும் பார்க்கணும்னு நினைச்சுட்டு இருக்கற படம் இது. Academy Award winner. One of the movies recommended by Dr. Shalini (Psychiatrist).