Friday, June 5, 2009

வ(எ)ண்ணச்சிதறல்கள்

வலைப்பூவின் ஜாம்பவான்கள் எல்லாரும் மிக்ஸிங் பதிவுகள் போட்டு வருவது நீங்கள் அறிந்ததே. காக்டெயில் என்று கார்க்கியும், அவியல் என்று பரிசலும், மிக்ஸ்டு ஊறுகாய் என்று ஆதிமூல கிருஷ்ணனும், இன்னும் பலப் பல பெயர்களில் பல மூத்த பதிவர்களும் பதிவிட்டு வருகிறார்கள். பெரியவர்கள் செய்யும் செயல்களைப் பார்த்து குழந்தைகள் தாங்களும் அவ்வாறே முயற்சி செய்யும் இல்லையா? அது போன்ற ஒரு முயற்சி தான் இந்த வ(எ)ண்ணச்சிதறல்கள். இனி அடிக்கடி பார்க்கலாம் எனது எண்ணச் சிதறல்களை - வண்ணச்சிதறல்களாய்.
**************************************************************************

ஆரம்பித்து விட்டது டுவென்டி டுவென்டி உலகக் கோப்பை. அடிக்கடி பார்ப்பதால் சுவாரஸ்யம் குறைந்து விடுவதற்கான சாத்தியங்கள் அதிகம். சென்ற ஐபிஎல் போட்டிகளே, ஏதோ முடிவு தெரிந்து விட்ட ஒரு பக்க கதை போல தான் இருந்தன. யாரும் எதிர் பார்க்காத இரண்டு சொத்தை அணிகள் பைனலுக்கு வந்தால் யாருக்கு லாபம்? புக்கிகளுக்கு பணம் கொழிக்கும் வரம் இந்த டுவென்டி டுவென்டி. பார்க்கும் நமக்கு? - பெரிய பட்டை நாமம்.

**************************************************************************
மிகப் பாதுகாப்பான விமான சேவை அளிப்பதாக நம்பப் பட்டு வந்த ஏர் பிரான்ஸ் - ன் விமானம் பிரேசிலில் இருந்து பாரிஸ் வரும் போது காணாமல் போயிருக்கிறது - 228 பயணிகளுடன். இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை என்பது பெரும் சோகம். ஏர் பிரான்சின் விமானத்துக்கே இந்த கதி என்றால், அற்புத சேவை தரும் ஆப்பிரிக்க விமானங்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். அடுத்த முறை ஊருக்குப் போவதற்கு டிக்கெட் எடுக்கும் போது இது நினைவுக்கு வந்து தொலைக்காமல் இருக்க வேண்டும் என்று வாழைப்பாடி தண்டு மாரியம்மனை வேண்டிக் கொள்கிறேன்.
**************************************************************************

உலகப் புகை ஒழிப்பு தினம் சென்ற வாரம் கொண்டாடப் பட்டது. அன்றைய தினமே விட்டு விட வேண்டும் என்று முடிவு செய்திருந்தும், முடியாமல் போய் விட்டது. இருந்தாலும் இன்றோடு டாட்டா பைபை சொல்லி மூட்டை கட்டியாகி விட்டது, புகை, இனி எனக்குப் பகை. இதைப் படிக்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் - நீங்கள் புகைப்பவர் என்றால் சிறிது நேரம் செலவு செய்து ஒரு சின்ன கணக்கு போட்டு பாருங்கள். ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட், ஒரு மாதம் எத்தனை, ஒரு வருடம் எத்தனை, அதற்கான செலவைப் பார்த்தால் உங்கள் மனம் மாறக் கூடும்.

**************************************************************************

மொபைல் போன் பற்றிய புது செய்தி ஒன்றை அறிய நேர்ந்தது. பாட்டரி பவர் மிகக் குறைவாக இருந்து, சார்ஜரும் உங்கள் வசம் இல்லாதிருந்தால் *3370# டயல் செய்து ok அழுத்தினால் போதுமாம். ரிசர்வில் இருக்கும் பவர் எடுக்கப் பட்டு பாட்டரி லெவல் பாதியாகக் கூடி விடுமாம். இன்னும் முயற்சி செய்து பார்க்கவில்லை. யாராவது ரிஸ்க் எடுத்து ட்ரை பண்ணிப் பார்த்து தகவல் சொன்னால் நல்லது.

**************************************************************************

சென்ற மாதம் ஊருக்குப் போய் விட்டு வந்த தம்பியின் புண்ணியத்தில் முப்பது புதிய புத்தகங்கள் வாங்க முடிந்தது. பல வருடக் கனவு பலித்தது. எவ்வளவு ஆசையோடு ஆற்று நீரை அள்ளி அள்ளிக் குடித்தாலும் வயிறு நிரம்பும் வரை தான் குடிக்க முடியும் என்பதைப் போல, புதுப் புத்தகவாசத்தை முகர்ந்து பார்ப்பதிலேயே மனசு நிறைந்து விடுகிறது. படிக்கத்தான் நேரம் இல்லை. வாத்தியார் சாருவின் ராசலீலாவும் நான் படிப்பதற்காக அலமாரியில் காத்திருக்கிறது. சீக்கிரம் படிக்க வேண்டும்.
**************************************************************************

ஒரு கேள்வி : First of first is first in me, middle of you is double in me, first of last is last in me, who am I?


விடையைக் கண்டு பிடித்தவர்களுக்கு : என்னை அறிந்து கொண்டதற்கு நன்றி.

**************************************************************************

ஆசிரியர்: முட்டாள்! உன் வயசுலே பில் கேட்ஸ் ஸ்கூல் பர்ஸ்ட்டா இருந்தார் தெரியுமா?

மாணவன்: சார்! உங்க வயசுலே ஹிட்லர் தற்கொலை பண்ணிக்கிட்டார் தெரியுமா?

**************************************************************************

மிக்ஸிங் பதிவு கவிதையோடு முடிய வேண்டுமாம். இதோ நான் ரசித்தது...


அசிங்கமாய் தான் பட்டிருக்கும்
அவளுக்கு என் பார்வை

உணர்ந்து பார்த்த என் விழிகளை
உற்று நோக்கி விட்டாள்

பயணம் நீடித்த பல மணி நேரமும்
பார்த்து கொண்டேதானிருந்தேன்

வேறெங்கும் இடமிருந்திருப்பின்
மாறி அமர்ந்திருக்கக் கூடுமவள்

பொறுக்கி என்றவள் நினைத்தது
பொருத்தமாய்த தான் இருந்திருக்கும் அவ்வேளையில்;


இறுதி வரை சொல்லவில்லை
இறந்த என் தங்கையின் பிரதி அவளென்று

-----செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி


**************************************************************************

9 comments:

கடைக்குட்டி said...

அட என்னங்க??? இவ்ளோ சரக்க வெச்சுகிட்டு எங்க போய்டீங்க...


தொடர்ந்து எழுதவும் :-)

வணங்காமுடி...! said...

நன்றி கடைக்குட்டி. உங்கள் வார்த்தைகள் உண்மையிலேயே உரம் தருகின்றன. தொடருகிறேன்.

தங்கள் வலைப்பூ வை பார்த்தேன். யாரும் இல்லாத கடையில் நீங்கள் டீ ஆத்தவில்லை என்பது நன்றாகவே புரிந்தது. வாழ்த்துகள்.

Saran.G said...

மீரா பவனம் கதை அருமை.......... கொண்டு சென்ற விதம் மிகஅருமை.....ஆனால் கதை முன்பே படித்தது போன்ற உணர்வு(சுஜாதா கதைகளில்). ஆசிரியர் சுந்தர் நல்ல கற்பனை வளம் நிறைந்தவர் போலும்..........தொடருந்து அதிகமான கதைகளை எதிர்ப்பார்க்கும் வாசகன்..........
சரண்.G

வணங்காமுடி...! said...

பாராட்டுக்கு நன்றி சரண்.

\\ஆனால் கதை முன்பே படித்தது போன்ற உணர்வு\\

அப்படியா?

anujanya said...

நல்லா எழுதுறீங்க சுந்தர். தொடர்ந்து எழுதுங்கள்.

வணங்காமுடி...! said...

நன்றி அனுஜன்யா.... உங்கள் கமெண்ட் பார்த்தும் சந்தோஷத்தில் தலை கால் புரியவில்லை...... உங்கள் கவிதைகளில் பல என்னை பாதித்திருக்கின்றன...

பாராட்டுக்கு மீண்டும் நன்றி....

Premnath Thirumalaisamy said...

// First of first is first in me, middle of you is double in me, first of last is last in me, who am I? //


FOOL...Nalla eluthurenga... Do continue...

வணங்காமுடி...! said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி பிரேம்நாத்

sai said...

//மொபைல் போன் பற்றிய புது செய்தி ஒன்றை அறிய நேர்ந்தது. பாட்டரி பவர் மிகக் குறைவாக இருந்து, சார்ஜரும் உங்கள் வசம் இல்லாதிருந்தால் *3370# டயல் செய்து ok அழுத்தினால் போதுமாம். ரிசர்வில் இருக்கும் பவர் எடுக்கப் பட்டு பாட்டரி லெவல் பாதியாகக் கூடி விடுமாம். இன்னும் முயற்சி செய்து பார்க்கவில்லை. யாராவது ரிஸ்க் எடுத்து ட்ரை பண்ணிப் பார்த்து தகவல் சொன்னால் நல்லது.//

Result unknown என்று வருகிறது