Tuesday, June 16, 2009

உமுஸாஸி அல்லது நிறவெறியின் பசி

ருவாண்டா: - நான்கு காட்சிகள்

காட்சி ஒன்று : ஏப்ரல், 1994

அந்த அடி அவன் தலையில் நச் என்று இறங்கியது. தோட்டத்தில் புற்களை வெட்டப் பயன்படும், நீண்ட கத்தி போன்ற அந்த ஆயுதத்தின் முனை அவன் மண்டையில் சரக்கென்று பதிந்து கொண்டு, அடுத்த வெட்டுக்காக இழுக்கப் படும்போது வர மறுத்தது. வலிந்து இழுத்த போது, கூடவே ரத்தமும் பீய்ச்சி அடித்தது. வெட்டுப் பட்ட இடத்தை ஒரு கையால் அழுத்தி மூடிக் கொண்டு, காயம் பட்ட காலை விந்தி விந்தி உயிர் பிழைக்கும் ஆசையில் அவன் உயிரைக் கொடுத்து ஓடினான்.

காட்சி இரண்டு: மே, 1994

இனப்படுகொலை, அதைத் தொடர்ந்த பதில் தாக்குதல்களால் மிக மோசமாகக் காயம் அடைந்தவர்களுக்கு உதவவும், காணாமல் போன உறவுகளைக் கண்டுபிடித்து சேர்த்து வைக்கவும் ஆரம்பிக்கப் பட்டிருந்த முகாம்களில் ஒன்று. தலையில் ஆழமான வெட்டு, கை கால்களில் காயங்கள், வயிற்றில் கத்திக் கீறல்களுடன் அந்த பதினைந்து வயது சிறுவன் படுத்திருந்தான். தன் குடும்பத்தில் இருந்த அனைவரையும் போரில் இழந்து தனியனாய் எஞ்சி இருந்த அவனைச் சுற்றி இருந்த டாக்டர்கள், அவனுக்குப் புரியாத ஆங்கிலத்தில் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர்.


காட்சி மூன்று: ஏதோ ஒரு மாதம், 2004 -

உலக மக்கள் தொகையில் இரண்டாவது இடம் வகிக்கும் பெருமை மிகுந்த அந்த நாட்டின் சில பிரஜைகள் "பொழப்பு" தேடி மேலாளர்களாய் வேலைக்கு சேர்ந்த நிறுவனம்.

தலையில் பெரிய வெட்டுத் தழும்புடன் இருந்த அந்த ஆப்பிரிக்க இளைஞனுக்கு இருபத்தி ஐந்து வயதிருக்கும். ஓட்டுனர் உடையில் இருந்த அவன் தனது நிறுவனத்தின் மேலாளர் முன் தலை குனிந்து நின்றிருந்தான். அவன் கையில் இருந்த காகிதம், வேலையில் இருந்து அவன் நீக்கப்பட்டதை தெரிவித்தது. செய்த குற்றம் - மூன்று நாட்களாய்த் தொடர்ந்து வேலைக்கு தாமதமாய் வந்தது, மேலாளருக்கு உற்சாக பானம் வாங்கி வர அளித்த பணத்தை தொலைத்து விட்டு வெறுங்கையுடன் வந்து நின்றது, மன்னிப்பு கேட்கச் சொன்ன மேலாளரை நீண்ட நேரம் மௌனமாக வெறித்துப் பார்த்தது இன்ன பிற.....

வேலை இனிமேல் இல்லை என்று உறுதியாய்த் தெரிந்ததும் அவன் அங்கிருந்து அகன்றான். அவன் போனதும், உதவி மேலாளர், மேலாளரிடம் சொன்னார் "இந்தக் கருப்பு நாயிங்களே இப்படித் தான் சார், வேலையோட சீரியஸ்னஸ் தெரியாது, பொறுப்பு கிடையாது, மண்டைல மூளைன்னு ஒரு விஷயம் இவனுங்களுக்கெல்லாம் இல்லைன்னு தான் நினைக்கிறேன், நீங்க எவ்வளவு பாசமா நடத்துனீங்க, உறவைப் பத்திலாம் இந்தப் பண்ணாடைங்களுக்கு எங்க சார் தெரியப் போகுது, பைத்தியக்காரனுங்க....வேலை போச்சுன்னு ஒரு வருத்தம் தெரிஞ்சுதா பாருங்க மூஞ்சில, சாவட்டும் சார் இந்த கருப்பனுங்க"

காட்சி நான்கு: வேலை இழந்து ஒரு வாரம் கழித்து வந்த ஞாயிறு, கல்லறைகளின் அருகே அவன்......

ஒவ்வொரு ஞாயிறும் அவன் வாங்கி வரும் மலர்ச்செண்டு அந்த வாரம் கையில் இல்லை. வேலை இல்லாததால் காசும் இல்லை. பசித்த வயிறு, குளிக்காத உடல், வெறுமை ஏறிய கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர்.....

அவனுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை - பத்து வருடம் முன்பு அவன் தலையில் வாங்கிய அந்த அடி, மூளையின் டெம்போரல் லோப் - ஐ பாதித்ததும் அதன் காரணமாக அவன் இழந்த சில முக்கிய தகுதிகளும்.......


டிஸ்கி:

உமுஸாஸி - ருவாண்டாவின் மொழியில் இந்த வார்த்தைக்கு அர்த்தம் "பைத்தியக்காரன்"

3 comments:

Raju said...

படிக்கும்போதே மனச என்னமோ பண்னுது தல.
:(

Rajesh said...

u started up writing and ended up without expressing what u intended! I got the moral of the story but think it should be more specific and most important.. read it from a person who has not seen all these.. then u'll understand ur flaw!

sai said...

சுந்தர் உமுஸாஸி என்னை மிகவும் பாதித்து அந்த இடத்தில் என்னை நான் நிறுத்தி பார்த்தேன் .........(வேலை இழந்து ஒரு வாரம் கழித்து வந்த ஞாயிறு, கல்லறைகளின் அருகே அவன்...... ) வார்த்தைகள் எனக்கு வரவில்லை .