Friday, June 23, 2023

கேலி

 உயிரியல் படிப்பவர்கள் 

உண்மையில் பாவம் 


உறுப்புகளைப் படம் பிடித்து 

எலி பிடித்து அறுத்துப் போட்டு 

மரத்துப் போய்விடலாம் அவர்க்கு 

மெல்லிய உணர்வுகள்.. 


இருந்தும் நீ எப்படி 

என்னை விரும்பினாய் ?

என் காதலை ஏற்றுக்கொண்டு 

உணர்வுகளில் அரும்பினாய்...!


ஓ..! நீ சராசரி மாணவி தானே...!! 


கேள்வி...!

 


இரண்டு மனம் வேண்டும் 

இறைவனிடம் கேட்டேன் 

நடைமுறையின் வழிமுறைகள் பார்த்துக்கொள்ள ஒன்று 

திகட்டாத உன் காதல் மட்டும் சேர்த்து வைக்க ஒன்று..

 

உள்ளபடி ஒருவனுக்கு 

ஒன்றுதான் உள்ளம் என்றால்...


வறண்டு போன இந்த வாழ்வில் 

வேலை, வசதி, வாய்ப்பென்று  

முரண்டு பிடிக்கும் இதயம் கொண்டு 

எப்படி அடைவேன் வற்றாத காதல் நதியின் 

வளமான கரையினை ? 


Sunday, June 11, 2023

வாழ்க்கை

 இருபதாண்டு காலம் 

இருளில் இருந்தேன்...

கண்ணைக் கூசும் 

மின்னலாய் 

நீ வந்தாய்...


யதார்த்தக் குழியில் 

கால் படாமல் 

வெளிச்சக் கதிர் பிடித்துப் 

பறக்கக் கற்றுத்தந்தாய்...


இன்று காதலை விற்று 

காலை உணவுக்கு 

ரொட்டி வாங்கிக் 

கொண்டிருக்கிறேன்.. 


காதலுக்குத் தான்  கண் இல்லை 

வாழ்வுக்கு வயிறுகள் பலப்பல... 


- சுந்தர் 

11.06.23 | 11:37 AM 


புதிர்

 அறுபது கிலோ எடை 

என்கிறார்கள் என்னை...

என் எடை முழுதும் 

நீயே  இருக்கையில் 

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து 

உற்றறிவதெல்லாம் எங்கே நிகழ்கிறது? 


- சுந்தர் 

11.06.23 | 7:10 AM 

வளர்சிதை

 நரை கூடிக் கிழப்பருவம் எய்தியும் 

வாரம் தோறும் வளர்கிறது 

காதல் 


- சுந்தர் 

11.06.23 | 7:00 AM

பிரிவு

 


நீ என்னோடு இல்லாத 

ஒவ்வொரு கணமும் 

எடை கூடிக் கொண்டே போகிறது 


சுமக்க முடியாத கனத்துடன் 

மூச்சடைக்க விழி பிதுங்கித் 

தவிக்கையில்... 


பாரம் நகர்த்தி, கை தூக்கி 

தலை கோதி ஆசுவாசம் கொடுக்கிறது 

உன் நினைவைச் சுமக்கும் 

புகைப்படம்


- சுந்தர் 

10.06.23

11:40 AM