Friday, May 29, 2009

இரண்டு பிளாஷ்பேக்குகள்: பாகம் இரண்டு



இரண்டாவது ப்ளாஷ்பேக் - மீரா பவனம்


நாங்கள் அப்போது பொன்னகரம் - போஸ்ட் ஆபீஸ் தெருவில் இருந்தோம். அந்தத் தெருவில் இருந்த 2, 3 பெரிய வீடுகளில் எங்கள் வீடும் ஒன்று. மன்னிக்கவும். எங்கள் வீடு என்றா சொன்னேன்... இல்லை இல்லை...


வீட்டுக்காரர் வீடு பெரியது. பெரிய வீடு என்ற வர்ணனை எங்கள் வீட்டுக்கு பொருந்தாது. ரோட்டைப் பார்த்தபடி இருக்கும் வீட்டின் பின்புறத்தில் அவுட் அவுஸ் போல ஒண்டுக்குடித்தன ஓட்டு வீடுகள் இருந்தன. அதில் ஒரு ஒண்டுக்குடித்தன வீட்டில் தான் நாங்கள் வாடகைக்கு குடி இருந்தோம். இந்த ஒன்டுக்குடித்தனங்களுக்கு என தனி வாசல். பெரிய வீட்டை ஒட்டிய சந்தின் வழி சென்று பின் புறமாக நுழைய வேண்டும். ஒரு சனிக்கிழமை காலை வீட்டில் என் நோட்டுப்புத்தகத்தில் எதோ கிறுக்கிக் கொண்டிருந்தேன்.


"வந்துட்டாண்டா உன் பிரண்டு....போ...." அம்மா இப்படி அலறினால் கணேசன் வந்திருக்கிறான் என்று அர்த்தம்.


"போயி ஊர் சுத்தித் திரிஞ்சிட்டு விளக்கு வைக்கும் போது வா... வந்து பசிக்குதுன்னு மட்டும் கேட்ட...விளக்கு மாறு பிஞ்சிரும்"...


அம்மா எப்போதும் இப்படித்தான். என் நண்பர்களை பிடிக்கவே பிடிக்காது அவர்களுக்கு. டவுசர் மாத்திக்கொண்டு கிளம்பினேன்.


"டேய்.... டேய்... சாப்பிட்டு போடா..." குரலை உதாசீனம் செய்து வெளியே வந்தேன். கோனார் தமிழ் உரையை கையில் வைத்துக் கொண்டு கணேசன் நின்றிருந்தான்.


"இதை எதுக்குடா கொண்டு வந்த"


"அப்புறம் வீட்டுல இருந்து கிளம்ப எதாவது காரணம் சொல்ல வேணாம்? தமிழ் பரீட்சைக்கு படிக்க போறேன்னு சொல்லிட்டு வந்தேன்"


"சரி வா... காளிதாஸ் வீட்டுக்கு போலாம்"...


காளிதாஸ் - வீட்டுக்கு சொந்தக்காரர். பெரிய வீட்டுக்கு "மீரா பவனம்" என்று ஒரு பெயர் இருந்தாலும், நாங்கள் எப்போதும் காளிதாஸ் வீடு என்று தான் சொல்வோம்.


இரண்டு அறைகள் மட்டும் கொண்டிருந்த எங்கள் ஓட்டு வீடு, இந்தக் கதையில் அவ்வளவு முக்கியம் இல்லை. வீடுக்காரருடைய பெரிய வீடு தான், இக்கதையின் ஹீரோ. அதைப் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.


"மீரா பவனம்" பெயருக்கேற்ற கம்பீரம் அதன் தோற்றத்திலும் இருக்கவே செய்தது. பெரிய காம்பவுண்டு சுவர்கள். தரையில் இருந்து 15 படிக்கட்டுகளில் வாசல். வெளி வாசலில் இரும்பில் க்ரில் கேட். படிக்கட்டின் இரு மருங்கிலும் பெயர் தெரியாத மரங்கள்..ஒரே மாதிரி தோற்றத்தில்...... வலது மூலையில் மட்டும் ஒரு ஒற்றைத் தென்னை மரம். இவை அனைத்தும் காம்பவுண்டுக்கு உள்ளேயே. படிகளுக்கு இரு புறமும் இருக்கும் வெளி தான் எங்கள் விளையாட்டுக்களம். வலது பக்க சாளரம் வழியே உள்ளிருந்து மரத்தடிக்கு வரும் எர்த்திங் கம்பியைத் தொட்டால் மெலிதாக, மிக மெலிதாக ஒரு ஷாக் உடம்பில் ஓடி பற்கள் கட கட கட வென ஆடும்... எங்களுக்கு பிடித்த விளையாட்டு.


"இன்னிக்கி என்ன வெளாட்டுடா வெளாடலாம்?"


"முதல்ல கொஞ்ச நேரம் இப்படி உக்காருவோம்.. அப்புறமா வெளாடலாம்."...


படிகளில் அமர்ந்தோம்... அப்போது தான் கவனித்தேன். நேற்று போட்ட லைட்டை அணைக்கவே இல்லை. வீட்டுக்காரர் தன குடும்பத்தோடு வேறு ஊரில் இருந்தார். அவர் பசங்களுக்கு விடுமுறை வந்தாலோ அல்லது வேறு எதாவது விசேஷம் என்றாலோ தான் இங்கே வருவார். அதுவரை பெரிய வீடு பூட்டித்தான் கிடக்கும். பெரிய பக்திமான் அவர். கடவுள் காரியங்களுக்கு அள்ளியும், மற்ற காரியம் என்றால் கிள்ளியும் கொடுக்கும் தயாளன். மாலை வேளைகளில் வீட்டில் விளக்கு எரியாவிட்டால் ஸ்ரீதேவி வீட்டை விட்டுப் போய் விடுவாள் என்பதாலும், எங்கள் வீட்டுக்காரருக்கு ஸ்ரீதேவியை வைத்துக் கொள்ள ஆசை இருந்ததாலும் வீட்டில் யாரும் இல்லாவிட்டாலும் தினசரி சாயங்காலம் பெரிய வீட்டு ஹாலில் லைட் போட்டு, காலையில் அணைத்து விடுவது வழக்கம் ஆயிற்று.


நீண்ட நாள் நண்பர் என்பதால், இந்த உதவியை (லைட் போட்டு அணைப்பது) தொடர்ந்து செய்து வருமாறு என் அப்பாவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. லைட் ஸ்விட்ச் கைக்கு எட்டும் அளவுக்கு வளர்ந்ததும் அந்தப் பெரும் பொறுப்பு என் தலையில் விழுந்தது. காம்பவுண்ட் கேட், உள்ளே வாசல் கதவு இரண்டின் சாவிகளும் என்னிடம் இருக்கும்.


லைட்டை அனைத்து விட்டு வந்தேன். எதோ தீவிர யோசனையில் இருப்பவன் போல எங்கோ வெறித்துப் பார்த்த படி அமர்ந்து இருந்தான் கணேசன்.


"என்னடா யோசனை"


"ஒன்னும் இல்லடா... இந்த மல்லிகா அக்கா இல்ல.. அது உன்னை வீட்டுக்கு வரச் சொல்லுச்சி... சொல்ல மறந்துட்டேன்டா "..


"அடப்பாவி..." ஓங்கி நடு முதுகில் நச்சென்று ஒன்று வைத்தேன். அவனை உடனே வெளியே தள்ளி நானும் வெளியேறி கதவைப் பூட்டினேன்.... மானசீக ஸ்கூட்டரை உதைத்து மல்லிகா அக்கா வீட்டை அடைந்தேன்.


"பூ பறிக்கவா கூப்பிட்ட?"......


"ஆமா டா, சீக்கிரம் வா... அம்மா வெளில போயிருக்குது.. அது வர்றதுக்குள்ள பூ பறிச்சிட்டு வந்திருவோம், என்ன?"


"ம்....."


மறுபடியும் காளிதாஸ் வீடு.... அக்கம் பக்கம் பார்த்து விட்டு படாரென உள்ளே நுழைந்தோம்... உடனே கேட்டை இழுத்துப் பூட்டிவிட்டு, இடது பக்க மாற நிழலில் அமர்ந்தோம். மல்லிகா அக்கா அவசரப்படுத்தினாள்.


"டேய்.. சீக்கிரம் பூ பறிச்சிட்டு போலாம்டா..."


நெஞ்சு படபடக்க, கை காலெல்லாம் மெலிதாக நடுங்கத் தொடங்கி இருந்தது.... மல்லிகா அக்கா என் கையைப் பிடித்து அவள் சட்டைக்கு மேல், மார்பில் வைத்துக் கொண்டாள்.. ஆதரவாக அணைத்து காதுகளில் கிசுகிசுத்தாள்...


"பயப்படாதடா...."


சொல்லிக் கொண்டே தன் சட்டையை உயர்த்தி என் கையை உள்ளே ஒரு பக்க மார்புடன் சேர்த்து அழுத்திப் பிடித்து, கண்களை மூடிக் கொண்டாள்.




----- தொடரும்-------

Wednesday, May 6, 2009

டாடி ரிட்டன்ஸ்.....


வாரான்.... இவன் வாரான்... வாரான் வரான் வரான் லே... ரொம்ப நாள் கழிச்சு லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரபோறோம்ல... (டயலாக்கை மாத்துங்கப்பா) நாளை இரவு.... இரண்டு பிளாஷ்பேக்குகள் - இரண்டாம் பாகம்... வாசிக்கத் தவறாதீர்கள்... (ஆமா... இதைப் படிக்க லட்சம் பேரு காத்துக்கிட்டு இருக்க மாதிரி.... சரி சரி.. அடக்கி வாசி)


Friday, October 31, 2008

இரண்டு பிளாஷ்பேக்குகள் : பாகம் ஒன்று


பிளாஷ்பேக் ஒன்று:

அப்போது எனக்கு ஒரு 14 வயதிருக்கும். ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாக ஞாபகம். எங்களுடைய அன்றாட வாழ்விலிருந்து பிரிக்கவே முடியாத ஒரு இடமாக ரயில்வே ஸ்டேஷன் இருந்த காலம் அது. ஒரு நாளில் ஒரு முறையாவது ஸ்டேஷனுக்கு போகாமல் அந்த நாளின் இரவு வந்ததே இல்லை. சிகரெட் என்னுடைய உதடுகளின் ஸ்பரிசம் உணர்ந்ததும், பியரின் வாசத்தை என் நாசிகள் அறிந்ததும் இந்த ரயில்வே ஸ்டேஷனில்தான்.

பொதுவாக எங்களுக்கு அந்த இடம் வீட்டில் இருந்து தப்பிக்க ஒரு வசதியான காரணமாகவே முதலில் இருந்தது. படிக்கச்செல்வதாக கதை சொல்லிவிட்டு இங்கே ஓடி வந்து விடுவோம். என் நண்பர்களில் ஒருவனின் தந்தை ரயில்வேயில் வேலை பார்த்ததும் இன்னொரு முக்கியமான காரணம். எதாவது பிரச்சனை என்றால் உதவி கிடைக்கும் இல்லையா.


அப்படி தான் ஒரு நாள் பள்ளிகூடத்திலிருந்தே திட்டம் எல்லாம் பக்காவாக போடப்பட்டு மாலை சரியாக ஆறு மணிக்கு இரண்டாவது பிளாட்பார்மில் சந்திப்பதாக நண்பர் குழாமில் முடிவு ஆகியது. (எங்கள் ஊரின் ஸ்டேஷனில் மொத்தமே இரண்டு பிளாட்பாரம் தான் என்பது வேறு விஷயம்).


அன்றைக்கு பார்த்து எனது நாசமாய்ப் போன BSA SLR சைக்கிள் பங்ச்சர். அதற்காக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மீட்டிங்கை புறக்கணிக்க முடியுமா? எடுத்தேன் என் அப்பாவின் ராலே சைக்கிளை. கிளம்பினேன் புயல் வேகத்தில்.... (30 வருஷம் பழைய சைக்கிள் அது... எதாவது சின்ன டேமேஜ் என்றாலும் அடி பழுத்துவிடும்.. இருந்தாலும் நட்புக்கு முன் அதெல்லாம் தூசி ஆனது).


சரியாக 6 மணிக்கு நான் மட்டும் ஸ்டேஷனில். எனக்கு ஒரு கெட்ட பழக்கம். எந்த ஒரு முன்திட்டமிடப்பட்ட விஷயம் ஆனாலும் பேசியபடி நேரத்துக்கு சென்று சேருவது. (இப்போது என் மனைவியிடம் வாங்கி கட்டிக் கொண்டிருக்கிறேன்).


பிளாட்பாரம் முழுதும் காலியாக இருந்தது. பார்த்தவுடன் ஒரு குஷி. பரங்கி மலை ஜோதியில் முதல் டிக்கட் எடுத்து முதலில் உள்ளே சென்றது போல ஒரு குறுகுறுப்பு. பிளாட்பார்மில் எந்த வாகனத்தையும் ஓட்டக் கூடாது என்று தெரிந்தும் கிளப்பினேன் என் ராலேவை. சரியாக போலீஸ்காரனின் அருகில் சென்று நின்று போனது அந்த இரு சக்கர மூதேவி.


சைக்கிளை தனியாகவும் என்னைத் தனியாகவும் பிரிக்கும் போதே எனக்கு தெரிந்து விட்டது, இது பாகிஸ்தானின் சதி என்று. இருந்தும் மௌனம் காத்தேன். என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே.


என் அப்பாவின் ராலே சைக்கிள், திருட்டு போய் பிடிபட்ட மற்ற சைக்கிள்களுடன் நிறுத்தப்பட்டது. நான் ஒரு ஓரமாக ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் பெஞ்சில். தடக் தடக் என்று நெஞ்சு அடித்துக்கொள்ளும் ஓசை எனக்கே கேட்கிறது. இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் இறுக்கத்துடன் நான். போலீஸ்காரர்கள் பக்கத்தில் ஒருவனை போட்டு அடி பின்னி எடுக்கிறார்கள். வலி தாங்க முடியாமல் அவன் கதறும் ஒலி அடி வயிற்றை பிசைவதாக இருக்கிறது. அப்படியும் மிராசுதார் முகபாவத்தில் நான்.

இன்ஸ்பெக்டர் என்னை அழைத்ததும் ஜட்டியிலேயே ஒன்னுக்கு போயி விடும் உணர்வு ஏற்பட்டாலும், அதை அடக்கி அருகில் சென்றேன். "என்னடா, திமிரா? துரை, வெளில சைக்கிள பார்க் பண்ண மாட்டிங்களோ" என்றார். ஒன்றும் சொல்லத் தோணாமல் அமைதியாய் திரு திருவென விழித்த போது அவருக்கு பின்னால், எதிரே வாசலில் நண்பன். கைவிரலை கண்ணில் வைத்து எதோ சைகை காட்டுகிறான். முதலில் புரியவில்லை. நன்கு உத்து பார்த்ததும் புரிந்தது. "அழு... அழு.... அழுடா... கூ...." என்கிறான். ம்ஹூம்... எவ்வளவு முயற்சித்தும் எனக்கு அழுகை வரவில்லை.

கடைசியில் வெள்ளை பேப்பரில் கை எழுத்து வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தார்கள். அதிகம் கெஞ்ச விடாமல், இரண்டு மணிநேரத்திலேயே சைக்கிளையும் திருப்பி கொடுத்து விட்டார்கள். இந்த வெள்ளை பேப்பர் மேட்டர் என்னை பல நாட்கள் தூங்க விடாமல் பண்ணியது ஒரு தனிக்கதை. எதாவது ஒரு கொலை கேசில் யாரும் மாட்டாவிட்டால், வெள்ளை பேப்பரில் கை எழுத்து போட்டு கொடுத்த என் போன்ற பாவாத்மாக்களை பிடித்துச் சென்று விடுவார்கள் என பரவலாய் நான் கேள்விப் பட்டிருந்தது தான் காரணம்.

இச்சம்பவம் நடந்து சரியாக ஒரு வாரம் கழித்து அதே இன்ஸ்பெக்டரை நான் சந்தித்தது மார்க்கெட்டில். என்னுடன் என் அப்பாவும். ஸ்டேஷனில் விதைகளை நசுக்கும் ஒலி எனக்கு அப்போதே மானசீகமாக கேட்டது. அதற்கு பின்பு நடந்து தான் கிளைமாக்ஸ். அவர் என் அப்பாவிடம் சொன்னார், "தம்பி உங்க பையன்னு தெரியாது சார், இல்லன்னா உடனே விட்டுருப்பேன்"

********************************************************************

ஒரு அழகிய மனமும், ஆழ் மன நனவிலியும்




எதாவது ஒரு கவிஞரின் அல்லது எழுத்தாளரின் புதிய படைப்பு வெளியாகி, பரபரப்பை கிளப்பி புது அலையை ஏற்படுத்தும் போதெல்லாம், அந்த படைப்பாசிரியரிடம் "இதை எழுத உங்களைத் தூண்டியது எது" என்று பேட்டிகளில் கேட்கப்படுவதும், அதற்கு அவர் "சரியாக சொல்ல முடியவில்லை. அந்த படைப்புதான் என்னை வைத்து தன்னை எழுதிக் கொண்டதாக நினைக்கிறேன்" என்று கூறுவதும் பல முறை படிக்க நேர்ந்திருக்கிறது. கவிஞர் வைரமுத்துவின் "கள்ளிக்காட்டு இதிகாசம்" தொடராக விகடனில் வெளிவந்து வரவேற்பு பெற்று புத்தகமாக வடிவுரும்போது அதன் முன்னுரையில் கவிஞர் இவ்வாறு எழுதியிருந்தார் "அந்த இடங்களுக்கெல்லாம் சென்று வானம் பார்த்து கண்ணீர் வடித்தவாறு பல கணங்கள் படுத்துகிடந்திருக்கிறேன். இப்போது யோசிக்கும்போது இந்த மண் மற்றும் அதன் மனிதர்கள் அவர்களின் வலி இவை யாவும் என்னை வைத்து தங்களை பதிந்து கொண்டதன் விளைவுதான் இந்த படைப்போ என்று எண்ணத் தலைப்படுகிறேன்". இம்மாதிரி நிகழ்வுகள் கவிஞர்கள் எழுத்தாளர்களுக்கு மட்டுமன்றி மற்ற துறைகளின் வித்தகர்களுக்கும் நிறையவே நடந்தவாறு இருக்கின்றன. கணித மேதை ராமானுஜம் சிக்கலான கணிதப் புதிர்களுக்கு விடைதேடி தூங்காமல் பலநேரம் போராடி ஓய்ந்துவிட்டு உறங்கப் போகும்போதெல்லாம் அவர் கனவில் சரஸ்வதி (சி.கே.சரஸ்வதி அல்ல, சாட்சாத் கலைவாணி சரஸ்வதி தேவி) தோன்றி அப்புதிர்களுக்கு விடை அளித்ததாக அவரே சொல்லியதுண்டாம்.

சமகாலத்தில் பார்த்தாலும் ஏகப்பட்ட சம்பவங்கள். சாரு நிவேதிதா கூட சில முறை தனக்கு அப்படி அனுபவங்கள் ஏற்பட்டதாக எழுதியிருக்கிறார். எழுத்தின் இடையே உறங்கிப் போவதும், விழித்து எழும்போது பாதியில் விட்ட கதை முற்றுப் பெற்றிருந்தும் என அலாதி அனுபவம். இவ்வாறாக கண்ணுக்கு தெரியாத (அல்லது கனவில் தெரிந்த) சக்தியின் மூலமாக படைப்புகள், கண்டுபிடிப்புகள் உருவாவது தொன்று தொட்டே நடந்து வரும் விஷயம் தான். சினிமா காரர்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. (பட்டாம்பூச்சியின் சிறகசைப்பையும் மைதா மாவு மேக் அப் - ஐயும் ஒருங்கிணைத்த கமலின் கேயாஸ் தியரியும் இந்த வகையை சார்ந்தது தானா என்று எனக்கு தெரியவில்லை). யோசித்தால் எனக்கும் கூட இம்மாதிரி அனுபவங்கள் நிகழ்ந்தே இருக்கின்றன (தோ.. பார்றா.. அட்ரா அட்ரா)... உண்மையைத்தான் சொல்கிறேன். வலைப்பூ ஆரம்பித்ததும், பல உன்னதமான (???) விஷயங்களை அதில் எழுதி வருவதும் - இவை எல்லாமே ஒரு இரவில் ஓவராய் சரக்கு அடித்த பின்பு எனக்கு மட்டும் கேட்ட அசரீரியினால் தான். இப்படி நடப்பவை யாவும் ஆழ் மன நனவிலியின் (Sub-Conscious Mind) அற்புதங்கள் என்கிறது அறிவியல். மனித மூளையின் அளவிட முடியாத விந்தைகளில் ஆழ் மன நனவிலி முக்கிய பங்கை ஆற்றுகிறது. ஜெயமோகனின் ஒரு அறிவியல் புனை கதையில் மனிதன், தன் மூளையின் வெறும் ஐந்து சதவீதம் மட்டுமே உபயோகிப்பதாக வரும் ("மூளை என்பதை அமெரிக்க வெள்ளை மாளிகை எனக்கொண்டால் பல மனிதர்கள் அதன் வராந்தாவிலேயே வாழ்ந்து விட்டுப் போகிறார்கள்") A Beautiful Mind என்ற திரைப்படத்தை சமீபத்தில் காண நேர்ந்தது. அதி அற்புதமான ஒரு காட்சியனுபவமாக அது அமைந்துவிட்டது. படம் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து மீண்டு வருவது அவ்வளவு சாதாரணமாய் இருக்கவில்லை. ஒரு பல்கலைக்கழகத்தில் கணித ஆராய்ச்சியாளனாக (Russell Crowe) சேரும் ஒரு மாணவனின் வாழ்க்கை தான் களம். தீவிர சிந்தனை மற்றும் மிதமிஞ்சிய கற்பனையின் விளைவால் அவனுக்கு செயற்கை மனிதர்கள் கண்ணுக்கு தெரிகிறார்கள். அவனுடன் உரையாடுகிறார்கள். பைத்தியமாய் மாற நேரும் அபாயத்தில் இருந்து அவன் தன்னை எப்படி காத்துகொள்கிறான். நோபல் பரிசு பெறும் அளவு எப்படி உயர்கிறான் என்பது கதை. இதற்கு மேல் இந்த படத்தை பற்றி இங்கே சொன்னால் நன்றாக இருக்காது. ஒரு தனி பதிவாக போட வேண்டிய விஷயம் அது. என்னை பொறுத்தவரை இத்திரைப் படத்தை ரசித்து, தனிமையில் பார்ப்பதே ஒரு சுகானுபவம். பார்த்து அனுபவித்து பின் சொல்லுங்கள். விஷயத்துக்கு வருகிறேன் (அடப்பாவி... இன்னும் நீ விஷயத்துக்கே வரலியா)... கண், காது இந்த இரண்டு புலன்களாலும் உணரப்படுவதே நம் உலகம். கண் என்ற அதிசக்தி வாய்ந்த கேமரா முன் எது இருந்தாலும் ஷட்டரை திறந்தவுடன் அப்படியே அதை தலைகீழாக்கி மூளையில் பிம்பமாக குவிக்கிறது. அதை நம் மூளை காட்சியாக புரிந்து கொள்கிறது. அதைப் போலவே காது, சத்தங்களை எல்லாம் ஒலி அதிர்வுகளாக மாற்றி மூளைக்கு அனுப்புகிறது. சரியா? இப்போது என் கேள்விகள்... (இது வேறயா? கேட்டு தொலை..நாய்க்கு வாக்கப்பட்டா குலைச்சு தான ஆகணும்?)

* இப்படி இந்த புலன்களால் உணரப் படும் உலகத்துக்கு மாற்றாக, நேரடியாக மூளையே உணர முடிகின்ற உலகமும் இருந்து தானே ஆக வேண்டும்? ** கண் மற்றும் காதுகளின் வழியாக மூளையால் பெறப்படும் தகவல்கள் அங்கே (மூளையில்) எப்படி கையாளப் படுகின்றன என்பதைக் கண்டறிந்துவிட்டால், பிறகு கண் இல்லாமல் பார்ப்பதும், காதுகள் இல்லாமல் கேட்பதும் சாத்தியமாகி விடாதா? பிறவியிலேயே கண், காது குறைபாடு உள்ளவர்கள், நன்றாக இருந்து இடையில் பாதிக்கப் பட்டவர்களுக்கெல்லாம் இது எப்பேற்பட்ட ஒரு விஷயமாக இருக்கும் ? ***கொடூரமான கிரிமினல்கள் அப்படி மாறக் காரணமான விஷயங்களை ஆழ் மன நனவிலியில் இருந்து அகற்றி விடும் தொழில் நுட்பம் வந்துவிட்டால் நம் நாட்டில் சிறைச்சாலைகளே இல்லாமல் போய் விடும் இல்லையா? ****நல்லதை மட்டுமே நினைத்து, நல்லன மட்டுமே செயல்படுத்தும் படி அரசியல்வாதிகளை மாற்றியமைத்து விட இயலாதா? *****மோசமான படம் எடுத்து மக்களை, மாக்கள் ஆகும் இயக்குனர்களுக்கு எல்லாம் நல்ல படங்கள் பற்றிய அறிவை இன்ஜெக்க்ஷன் மூலம் ஏற்றி விட முடியாதா? இவை யாவும், Beautiful Mind படம் பார்த்த பிறகு தோன்றிய எண்ணங்கள். கனவில் வருகின்ற மனிதர்கள் நனவுலகிலும் வந்துவிட்டால் ? என்ற கேள்வியே இந்த படம். ஆனால் நாம் காணும் கனவை எல்லாம் நனவாக்க முடிந்து விட்டால்? என்ற கேள்வியை விதைத்து விட்டது. இன்னொரு விஷயம். இந்த படத்தில் வரும் ஹீரோவுக்கு நேர்வது போலவே எனக்கும் அவ்வப்போது நேர்கிறது. புதிய புதிய உருவங்கள் வந்து உரையாடுவதும், சிரிப்பதும் பல முறை நடந்துள்ளது. ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால் நான் மூச்சு முட்டக் குடித்துவிட்டு குப்புறப் படுத்திருக்கும்போது மட்டுமே அவை வருவதுதான். இதை யாராவது ஒரு திரைப்படமாக எடுக்க முனைந்தால் சம்பளம் வாங்காமல் கதாநாயகனாக நடித்து கொடுக்க நான் தயார். (ஒரே ஒரு கண்டிஷன். த்ரிஷா தான் ஹீரோயின்)

Wednesday, October 29, 2008

எரிகின்ற வீட்டில் பிடுங்கியது வரை லாபம்..!


உங்களில் சிலர் இன்று தினமலரில் அந்த கேவலத்தை வாசித்திருக்கக்கூடும். மக்களை இதற்கு மேல் அவமானப்படுத்தவோ அசிங்கப்படுத்தவோ முடியாது. ஒரு நாளிதழின் வேலையை விட்டுவிட்டு தினமலர் எப்போது புலனாய்வு பத்திரிக்கை ஆனது? அதாவது பரவாயில்லை. அந்த செய்தியின் தொனி என்னவென்றே புரியவில்லை? நக்கலா அல்லது உண்மையிலேயே அதை ஒரு செய்தியாக எண்ணித்தான் வெளியிட்டார்கள?
சரி சரி. பூடகம் வேண்டாம். செய்தி இதுதான்.
ரஜினி அதிரடி. இலங்கை பிரச்சனையில் தனி ஆவர்த்தனம் செய்ய முடிவு. தமிழகத்தின் எந்த ஒரு பிரச்சனைக்கும் தன்னுடைய பாணியில் தனியாக போராடுவது (?) ரஜினி ஸ்டைல். அதையே தற்போதைய இலங்கை பிரச்சனைக்கும் கடைபிடிக்க போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குசேலன் தோல்வி, அரசியலுக்கு வரச்சொல்லி ரசிகர்களின் தொந்தரவு, அதனால் எழுந்த அதிருப்தி, சரிந்த இமேஜ் மற்றும் பல கோடிகளில் கோலாகலமாக உருவாகி வரும் எந்திரனின் கலெக்க்ஷன் பற்றிய பயம் - ஆக தன்னை சூழ்ந்துள்ள இத்தனை தொல்லைகளுக்கும் எதிராகவும் இலங்கை விஷயத்தைகையில் எடுத்தால்? வேறு என்ன வெற்றி தான்.... எப்போதும் இளிச்சவாயனாக்குவது தமிழ் நாட்டின் தமிழனை. இந்த முறையும் அதேதான் ஆனால் அதற்கு இலங்கை தமிழனின் பிரச்சனை தானா கிடைத்தது. இதைஎல்லாம் படிக்கும் போது அசூசையாய் இருக்கிறது.
தமிழனுக்கு என்றுதான் விடிவு காலமோ?

************************************************************************************

அதே நாளிதழில் கண்ட இன்னொரு புகைப்படம் கொதிக்க வைத்து விட்டது. வைரமுத்து கருணாநிதிக்கு இலங்கை தமிழஅனுக்கு உதவ காசோலை அளிக்கிறார். வாயெல்லாம் பல். ச்சீ . வெட்கம் கெட்டவர்கள்.

அந்த புகைப்படத்தை இங்கே கொடுக்கலாம் என்று மறுபடியும் தினமலரை மேய்ந்த போது அதே விஷயம், ஆனால் இந்த முறை சரவணபவன் அதிபர். தன் படை சூழ சிரித்துக்கொண்டே காசோலை வழங்கும் அற்புதமான காட்சி. இவர்கள் கொடுக்கும் காசு எதற்கு ? அங்கே அவர்களின் பிணத்தின் மீது போடவா? தூத்தேரி. இலவச உணவாம். மத்திய அரசு உதவியாம். அதையும் இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே வழியாக தமிழனை சென்று சேருமாம். ஒரு பக்கம் தமிழன் மேல் குண்டு வீசிவிட்டு இன்னொரு கையால் உணவு கொடுப்பார்களாம். இதற்கு பேசாமல் இலவச பாடை வழங்கலாம்.

*************************************************************************************