Sunday, September 27, 2009

கடவுள் இருக்கிறாரா?

மில்லியன் டாலர் கேள்வி. இந்த உலகம் தோன்றியது முதல் இன்று வரை கோடானு கோடி முறை கேட்டு கேட்டு சலிக்காத கேள்வி. கேட்டவர் எவருக்கும் சரியான விடை கிடைக்காத கேள்வி. அல்லது, அவர்கட்கு கிடைத்த விடை மற்ற எவர்க்கும் புரியாத கேள்வி.. இந்தக் கேள்விக்கு விடை காண முயன்றிருக்கிறார் சுஜாதா, தனது "கடவுள் இருக்கிறாரா" புத்தகத்தில்...

"என்னிடம் அடிக்கடி கேட்கப் படும் ஒரு கேள்வி.. கடவுள் இருக்கிறாரா? இல்லையா? இருக்கிறார் என்றால் அவரைப் பார்க்க முடியுமா? இதற்கு பைனரியாக பதில் சொல்ல இயலாத நிலையில், இந்தக் கேள்விக்கு அறிவியல் என்ன சொல்கிறது என்பதை உங்களுடன் சிந்தித்துப் பார்க்க விரும்புகிறேன்."

என்று அக்மார்க் சுஜாதா முத்திரையுடன் (பைனரியாக பதில் சொல்ல இயலாத நிலை... ) துவங்கும் இந்தப் புத்தகம் கொஞ்சமும் குறையாத சுவாரஸ்யத்துடனும், குழப்பமான அறிவியல் சித்தாந்தங்கள் கடைக் கோடி வாசகனுக்கும் புரியும் எளிமையுடனும் இருப்பது "சுஜாதா ஸ்பெஷல்" சிறப்பு...


கடவுளைத் தெரிந்து கொள்ள முதலில் நாம் அவர் படைத்த (?) இந்தப் பிரபஞ்சத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு எறும்பு நடப்பது எவ்வளவு சிக்கலான சூத்திரங்களால் ஆனதோ, அதற்கு நேர் எதிர் எளிமையானது பிரபஞ்சம் என்ற மாபெரும் அமைப்பு வேலை செய்யும் விதம்.

இரண்டே விஷயங்களால் ஆனது தான் இந்தப் பிரபஞ்சம்.

1. திடப் பொருள், சக்தி என்ற இரண்டு விஷயங்களால் ஆனது தான் இந்த மொத்தப் பிரபஞ்சமும்.... அந்த இரண்டுமே ஒன்றுதான் என்பதை நிரூபிக்க விஞ்ஞானிகள் பட்ட அவஸ்தையை சொல்லியிருக்கிறார் சுஜாதா.
2. ஆரம்ப விதிகள் எனப்படும் பௌதீக விதிகள். இவற்றை விளக்கி விட்டால் பின் அடுத்த நிலை, அதன் பிறகான நிலை என்று, இன்று வரை சொல்லி விட முடியும்.. இந்த ஆரம்ப விதிகளையும், நிலையையும் உன்னிப்பாக உற்று நோக்கும்போது அவைகளில் ஒரு தேர்ந்தெடுப்பும், ஒரு ஒழுங்கும் இருப்பதைக் குறிப்பிட்டு வியக்கும் போது, எப்படி இந்த ராணுவ ஒழுங்கு? கடவுள் தான் காரணமோ என்று வாசனைக் கேட்டுவிட்டு, அடுத்த வரியிலேயே அதை நேர்த்தியாக மறுக்கவும் செய்கிறார்.

அன்த்ராபிக் தத்துவம், எக்ஸ்டென்டெட் சூப்பர் கிராவிட்டி, க்ராவிட்டான், குளுவான், சூப்பர் ஸ்டிரிங், ப்லான்க் எனர்ஜி என்று பல புரியாத வார்த்தைகளை தோரணம் கட்டித் தொங்க விட்டாலும், எப்படியோ "டு தி கோர்" மேட்டருக்கு வந்து விடுகிறார் தன திறமையான எழுத்து நடை மூலம்....

பிரபஞ்ச ஆரம்பத்தின் மகா வெடி பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். பதினைந்து பில்லியன் ஒளி வருடங்களுக்கு முன்னாள் வெடித்த அந்த பிக் பேங்கின் (Big Bang) உஷ்ணம் இன்னும் பிரபஞ்சம் முழுதும் லேசாக விரவி இருக்கிறதாம். அதன் வழியாகத் தான் வயதைக் கணிக்க முடிந்ததாம். இது போல கற்பனை செய்து பார்க்க முடியாத எண்ணற்ற விஷயங்கள் புத்தகம் முழும் பரவிக் கிடக்கின்றன. சுஜாதாவே சொல்லி இருப்பது போல, இந்தப் புத்தகம் சொல்லும் விஷயங்கள் எல்லாம் ஆயிரத்தில் ஒரு பாகம் தான். விரிவாகப் படிக்க ஒரு ஆயுள் போதாது போலிருக்கிறது.

நாத்திக - ஆத்திக விவாதங்கள், பிறந்த குழந்தையின் கிளீன் சிலேட் மூளை, இருந்தாலும் அதற்கு வரும் ஸ்பெஷல் மேதமை குணங்கள், உலக அழிவைப் பற்றிய ஹேஷ்யங்கள், என்று போகும் இந்த புத்தகத்தில் ஒரே ஒரு குறை தான். வெறும் 23 பக்கங்கள் மட்டுமே. என்ன நெருக்கடியோ, யாருக்குத் தெரியும்...

அவருடைய தேவன் வருகை சிறுகதை போலவே, இந்தப் புத்தக முடிவும் இருக்கிறது. இப்படி முடிக்கிறார்....

"எனவே, கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு அறிவியலின் பதில் - "இருக்கலாம்" ஆன்மீகத்தின் பதில் - "இருக்கிறார்". என் பதில் - It depends!"

8 comments:

aShok said...

குழப்ப தெரிந்த எவரும் இந்த கேள்வியை கொண்டு வெறும் ஒரு பக்கத்தில் குழப்பி விட முடியும்!!!

எனக்கு கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வி என்றும் எழுந்தது இல்லை, ஆனால் அவர் இருந்து என்ன பண்ண போறாருநு கிற கேள்வி தான்.

அன்பே சிவம் படத்துல, கமல் சொல்றமாதிரி, " கடவுள் இல்லைனு நான் சொல்லல, இருந்த நல்ல இருக்கும்னு தான் சொல்றேன்"

OSHO சொல்ற மாதிரி, "Thank God, That God does not exist"

All Religious books has "Miracles and values for life". Nobody worries about what has been told in Values but in Miracles. ஒழுங்கா திருக்குறள் படிச்சு புள்ள குட்டிகளா படிக்க வைக்கிற வேலைய பாருங்கப்பா :)

வணங்காமுடி...! said...

Thanks Ashok. That dialogue is not in Anbe Sivam. It's in Dasaavathaaram.

sathyakumar said...

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பொறுத்தவரை மனிதர்களை ஏழு படிகளில் பிரிக்கலாம்:

1. நூத்துக்கு நூறு நம்பிக்கையாளர்கள்.

2. நூத்துக்கு நூறைவிட சிறிதே குறைந்த நிலை: கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதெல்லாம் தெரியாது; ஆனால் நான் நம்பிக்கையோடு இருக்கிறேன்.

3. 50%க்கு மேல் .. முழுவதாக நம்பிக்கையில்லையெனினும், கடவுளை நம்புவர்கள்.

4. சரியாக 50%. கடவுள் இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம்.

5. <50%. முழுவதாக நம்பிக்கையில்லையெனினும், கடவுள் மறுப்பின் பக்கம் சாய்பவர்கள்.

6. >0%. முழுவதாக மறுப்பதில்லை; ஆனால் கடவுள் பக்கம் சாய்வதில்லை.

7. கடவுள் இல்லையென்று முழுமையாக நம்புவர்கள்.

இதில் நான் 7.

உலகத்தில் அரசியல் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றிருக்கிறது; ஆனால் கடவுள்- மதங்கள் பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்றிருக்கிறது.


ஐன்ஸ்டீன் கூற்றுக்களில் சில:
* நான் கடவுள் நம்பிக்கையற்ற, ஆனால் ஓர் ஆழமான ஆன்மீகவாதி. இது ஒரு புதுவகையான மதம்தான். (I am a deeply religious nonbeliever. This is somewhat new kind of religion.)

* கடவுள் என்னும் கோட்பாடு எனக்கு ஏற்புடைத்ததல்ல; அது அறிவுக்குப் புறம்பானது.

* இயற்கைக்கு ஏதோ ஒரு குறிக்கோளோ அர்த்தமோ இருப்பதாக நான் நினைக்கவில்லை. இயற்கையின், இந்தப் பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தையும், அதில் இன்னும் நம் அறிவுக்கு எட்டாதிருக்கும் அறிவியல் உண்மைகளையும் நினைத்து, அறிவுள்ள எவனும் தன்னை மிகவும் அற்பமான ஒன்றாக உணரவேண்டும்.இதுவே உண்மையான சமயச் சார்பான சிந்தனையாகும். இந்த சமய உணர்வுக்கும் மதங்கள் பேசும் இறைத்தன்மைக்கும் ஏதும் தொடர்பில்லை.

\\ஆனால் அவர் இருந்து என்ன பண்ண போறாருநு கிற கேள்வி தான். \\- 100% agree with Mr.Ashok.

உலகில் துன்பமும் இறையின் அலட்சியமும்

* உலகில் துன்பம், சாவு, சித்தரவதை, வன்முறை, ஏழ்மை இருக்கிறது. பச்சிளம் குழந்தை உணவு இல்லாமல் பட்டினி கிடந்து சாகிறது. இந்த நிலையை கருணை உள்ளம் கொண்டவனாக கருதப்படும் இறை எப்படி அனுமதிக்கலாம்?

* கடவுள் அன்புள்ளது, பலம் பொருந்தியது, எல்லாவற்றையும் படைத்தது என்றால் பல்வேறு குறைகள் கொண்ட உலகை அது ஏன் படைத்தது? குறைகள் இருக்கிறது, தீர்க்க முடியவில்லையா? அல்லது தீர்க்க விரும்பவில்லையா? இப்படியானால் இறை, உண்மையில் கருணை உள்ளம் உடையதா? எல்லா வல்லமையும் பொருந்தியதா?

சமயம் அறிவியல் முரண்பாடு

* புனித நூல்களில் கூறப்படும் பல கூற்றுக்கள் அறிவியலின் தற்போதைய அறிவின் படி பிழையாக நிரூபிக்கப்பட்டுள்ளன. எ.கா உலகம் 6000 ஆண்டுகள் மட்டுமே என பைபிளில் கூறப்பட்டுள்ளது. அறிவியல் உலகம் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு மேலானா கால வரலாற்றை உடையது என்று கூறுகிறது.


* அறிவியல் கோட்பாடுகளின் அல்லது விதிகளின் விளக்கத்துக்கு இறை என்ற கருதுகோள் தேவையற்றது.

* இறை நம்பிக்கை நம்பிக்கையில் அமைந்தது!
பகுத்தறிவின் மூலமோ, அறிவியல் மூலமோ நிறுவ முடியாதது.


இறைவன் இருக்கென்று நிறுவ முடியாவிட்டாலும், இறைவன் இருக்கென்று கருதி செயற்படுவதால் மனிதன் இழப்பது ஏதும் இல்லை,ஆனால் அது உண்மையானல் அவன் எல்லாவற்றையும் பெறுவான் என்கிறது.
இதற்கு பல்வேறு விவாதங்கள் உண்டு.
எந்த இறைவனை வழிபடுவது?

இறைவன் நம்பிக்கையானவரை மட்டும் ஏன் காப்பாற்றுவான் என்று எதிர்பாக்க வேண்டும்?

இறைவனை நம்பி சமயத்தில் ஈடுபடுவதால் வன்முறை உருவாறதே..எனவே அது ஒரு இழப்பல்லா. இந்த வாதம் இறைவனை நம்புவது ஏன் நல்லது என்று சுட்ட முயல்கிறதே தவிர, இறை உள்ளது என்று நிறுவ முறபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறை அனைத்தையும் கட்டுப்படுத்தும் அல்லது ஆட்சி செய்யும் என்றால், அது மனிதனையும் கட்டுப்படுத்தும்.

அப்படியானால், மனிதனுக்கு சுதந்திரம் இல்லை. இறையை வழிபடுவது, இத்தகைய ஒரு அடிமை ஆண்டை உறவின் வெளிப்பாடே. இந்தகைய இறை இருந்தாலும் வெறுக்கப்படத்தக்கதே.

-உண்மையின் மைந்தன் -Sathya Kumar

வணங்காமுடி...! said...

மிக விரிவான பார்வைக்கு நன்றி, சத்யா...

Raju K ராசு கந்தசாமி said...

இதில் எனக்கு என்றுமே குழப்பம் இருந்ததில்லை. கடவுள் இருக்கிறார் (உன்னிலும், என்னிலும், எவரிலும்). எனக்கு தெரிந்த கடவுள்களில் சிலரை பட்டியலிட்டு இருக்கிறேன்.

உயிருக்கே சிரமம் என்ற போதிலும் பத்து மாதங்கள் என்னை சுமந்து, வலியையும் தாங்கி என்னை ஈன்றெடுத்த என் தாய்

20 வருடங்கள் என்னை சுமை என்றும் பாராமல் என்னை தாங்கி வளர்த்த என் தந்தை

"அத்தைக்கு தெரிய வேண்டாம்" என்று கூறிக்கொண்டே அத்தையின் நகைகளை அடகு வைத்து நான் பாம்பே வேலைக்கு செல்ல பணம் கொடுத்த என் மாமா.

வேலைக்கு செல்ல துவங்கியிருந்த காலத்தில், மாதக்கடைசியிலும் எனக்காக காத்திருந்து சாப்பிட அழைத்து சென்ற நண்பன்.

ஆங்கில மருத்துவத்தில் முதுகுதண்டில் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று சொல்ல, மாத்திரை, மருந்து, பத்தியம் எதுவுமில்லாமல் மூலிகை எண்ணை தடவல்களிலேயே என்னை குணப்படுத்திய சித்த மருத்துவர்

இப்படி நிறைய கடவுள்களை நான் தினமும் சந்தித்தவண்ணமே இருக்கிறேன்.

மருத்துவத்தில் முன்னோடிகளான நம் சித்தர்களில் ஒருவரான திருமூலர் இறைவனைப்பற்றி ஒரு அழகான பாடல் பாடியுள்ளார். இதைவிட ஒரு அருமையான விளக்கம் இருக்க முடியாது

"அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே"

கமலகாசனின் அன்பே சிவம் திரைப்படம் இந்த நான்கு வரிகளை தழுவியதே.

வணங்காமுடி...! said...

\\
நிறைய கடவுள்களை நான் தினமும் சந்தித்தவண்ணமே இருக்கிறேன்\\

சத்தியமான வார்த்தைகள் தல. இந்த மாதிரி எல்லாருமே, தங்களைச் சுற்றி இருக்கும் கடவுள்களை உணர்ந்து கொண்டால், இனப் போர்களுக்கும், தீவிரவாத்திற்கும் இடமே இருக்காது.

நன்றி.

INFOSHAAN said...

ராஜு கந்தசாமி கருத்துக்களை வழிமொழிகிறேன்...
ரொம்ப சூப்பர் ..... அருமையான விளக்கம்...

Guna said...

சத்யா எழுதிய இன்ஸ்டன் சொன்னதாக ஒரு விசியம் அதே இன்ஸ்டன் ஏதோ ஓன்று இருக்கு என்று சத்யா வேணும் என்றால் சுஜாதா வின் கடவுள் இருக்காரா? கட்டுரையை படிங்கள். நன்றி