Tuesday, September 29, 2009

நல்லவன்

நான் மட்டும் நல்மனிதன்
என்கின்ற எண்ணமொன்று
எப்போதும் உண்டெனக்கு.....

ஏய்க்காமல் வரி கட்டி
வாங்கி வந்த சம்பளத்தில்
மிச்ச சொச்ச செலவு போக
அநாதை விடுதிக்கென
ஒருபகுதி எடுத்து வைப்பேன்
அடடா என்ன சொல்ல? - மறை சொல்லும் வாழ்நெறிதான் !


உற்சாக பானம், 
சிகரெட்டுப் பெட்டியென 
வேகமாய்ப் போயொழியும் 
எடுத்து வைத்த அந்தப் பணம்.......


மாதம் ஒரு சனிக்கிழமை
தெருக்களை சுத்தம் செய்ய
அரசாங்க விடுமுறை நாள்.......
"தெருமுனையின் பள்ளத்தை
சமனாக்கி விட வேணும்
மழத்தண்ணி தேங்காம
அடைப்பெடுத்துப் போடோணும்"
நல்ல எண்ணங்கள்தான் - சந்தேகமே இல்லை !


மண்வெட்டி கடப்பாரை
தோட்டம் வெட்டும் கத்திரிக்கோல்
எல்லாமே வைத்திருந்தும்
ஒருபோதும் சென்றதில்லை
நீண்ட வார இறுதிஎன்று
வெள்ளி இரவு பார்த்த படம்
எழுந்திருக்க விடுவதில்லை...........


சாலையோரம் பிச்சை கேட்கும்
எண்ணற்ற சிறுமடல்கள்
சாப்பிட்டு நாளிருக்கும்
ஒட்டிப் போன வயிறு சொல்லும்
"ஏதாவது செய்திடணும்
கரையேத்த வழி பண்ணனும்"
வருமா வேறெவர்க்கும் - இவ்வாறு சிந்தனைகள் ?
பை துழாவி வரும் சில்லறை
அதற்குமேல் செய்ததில்லை........


ஆண் பெண் பாகுபாடு
கூடவே கூடாது
பெண்ணை எப்போதும்
உயரத்தில் வைக்க வேணும்
அப்படி முடியலன்னா
சம உரிமை தரவேணும்..


வாய் கிழியப் பேசி விட்டு
வீட்டுக்கு வரும்போது
சமையல் ரெடி ஆவலன்னா
செவுளு கிழிஞ்சு போகும்
பொண்டாட்டி அழுதழுது
பூமியே நிறைஞ்சு போகும்.......


எத்தனையோ விஷயங்கள்
எழுதிக் கொண்டே போகலாம்
என்னதான் இருந்த போதும்


அடுத்தவன் பணத்துக்கு
ஆசை என்றும் பட்டதில்லை
எவனுடைய வயிற்றினிலும்
எப்போதும் அடித்ததில்லை.......


நான் மட்டும் நல்மனிதன்
என்கின்ற எண்ணமொன்று
எப்போதும் உண்டெனக்கு.....


--சுந்தர்

4 comments:

Raju said...

நல்லாருக்கு பாஸ்.

sathyakumar said...

அற்புதம் !!! மிகவும் நன்றாக இருக்கிறது.....
\\\
நான் மட்டும் நல்மனிதன்
என்கின்ற எண்ணமொன்று
எப்போதும் உண்டெனக்கு..... ///

-நம் எல்லார் வாழ்கையின் உண்மையான முகமுடியை தொல்ளுரித்து காட்டி விட்டிர்கள் இக்கவிதைமூலம்..............
\\\\\\
அடுத்தவன் பணத்துக்கு
ஆசை என்றும் பட்டதில்லை
எவனுடைய வயிற்றினிலும்
எப்போதும் அடித்ததில்லை.......////

இதன் முலம் ஆடிப்படை நல்ல மனிதன் -அறைஈருதிக்கு தகுதி என்பது மட்டும் ஆறுதல் வெற்றி !!!!

-

வணங்காமுடி...! said...

நன்றி ராஜு

நன்றி சத்யா.. கடைசியில் சொன்னது ஆறுதல் வெற்றியும் இல்லை. எண்ணிய எதையும் செயல் படுத்த்தாத ஒரு சராசரி, தன்னைத் தானே தேற்றிக் கொள்ளும் ஆறுதல் வார்த்தைகளே அவை..

INFOSHAAN said...

நீங்க பாட்டுக்கு ஒரு கவிதைய எழுதீட்டீங்க எனக்கென்னமோ ஒரே guilty-a இருக்கு.....